காந்தியை கொல்ல கோட்சே ‌பயன்படுத்திய‌ Beretta M1934 துப்பாக்கியின் பின்னணி! 

காந்தியை கொல்ல கோட்சே ‌பயன்படுத்திய‌ Beretta M1934 துப்பாக்கியின் பின்னணி! 
காந்தியை கொல்ல கோட்சே ‌பயன்படுத்திய‌ Beretta M1934 துப்பாக்கியின் பின்னணி! 

“நான் ஏன் காந்தியை கொன்றேன்?” என்ற திரைப்படம் வரும் ஜனவரி 30-ஆம் தேதி அன்று ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, அதற்கான காரணத்தை சிறப்பு நீதிமன்றத்தில் விளக்கினார். அதனடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அதுவும் காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30 அன்று இந்தப் படம் வெளியாகவுள்ளது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என சொல்லி வருகின்றனர். 

கடந்த 1948-இல் ஜனவரி 30 அன்று காந்தியை கோட்சே ‌துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் என்பதை அறிவோம். அந்த துப்பாக்கிச் சூட்டில் காந்தியின் மீது மூன்று குண்டுகள் பாய்ந்தன. அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். பின்னர் நடந்த நீதிமன்ற விசாரணையில் அதற்கான காரணத்தை கோட்சே சொல்லியிருந்தார். மேலும் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 1949 நவம்பர் 15-ஆம் தேதி அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்பாலா மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். 

இந்நிலையில் இந்த படுகொலைக்கு கோட்சே பயன்படுத்திய‌ Beretta M1934 துப்பாக்கியின் பின்னணி குறித்து பார்க்கலாம். 

Beretta M1934 துப்பாக்கி!

இத்தாலி நாட்டின் துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம்தான் Beretta. இது தனியாருக்கு சொந்தம் எனத் தெரிகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பான Beretta M1934 துப்பாக்கி இத்தாலிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு சர்வீஸ் துப்பாக்கியாக வழங்கப்பட்டுள்ளது. செமி ஆட்டோமெட்டிக் பிஸ்டல் வகையை சார்ந்தது. மிகவும் கட்சிதமாக இந்த துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் சிறிய அளவிலான இந்தத் துப்பாக்கியை எளிதில் எடுத்து செல்லலாம். 

மாடல் 1934 என்பதன் சுருக்கம்தான் M1934. 1934 தொடர்ந்து 1991 காலகட்டம் வரை சுமார் 10,80,000 M1934 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 9mm Parabellum தோட்டா இதில் பயன்படுத்தப்பட்டன. 7 தோட்டாக்கள் வரை இதில் லோட் செய்யலாம். பிளவ்பேக் முறையில் பின்பக்கமாக இழுத்து சுடலாம். இரண்டாம் உலகப்போரின் போது அதிகம் தயாரிக்கப்பட்டுள்ளது. சினிமா படங்களில் வரும் காட்சிகளைபோல இந்த துப்பாக்கியை எளிதில் தனித்தனியாக பிரிக்கவும், சேர்க்கவும் முடியும். 

கோட்சே கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது?

கோட்சே பயன்படுத்திய துப்பாக்கி 606824 சீரியல் நம்பரை கொண்டது. 1934 வாக்கில் உருவாக்கப்பட்ட அந்தத் துப்பாக்கி எத்தியோப்பியா மீது இத்தாலி இரண்டாவது முறையாக படையெடுத்தபோது இத்தாலி ராணுவ அதிகாரி ஒருவர் இந்தத் துப்பாக்கியை கொண்டு சென்றுள்ளார். பின்னர் போர் நினைவாக அது பிரிட்டிஷ் நாட்டு அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்கு இந்த துப்பாக்கி எப்படி வந்தது என்ற விவரம் ஏதும் இல்லை.

குவாலியரிலிருந்து கோட்சேவின் கைக்கு இந்த துப்பாக்கி அவரது கூட்டாளி மூலம் கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி டெல்லியில் காந்தியின் நெஞ்சில் அவர் மூன்று முறை சுட்டார். கோட்சே பயன்படுத்தியது லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி. இந்த துப்பாக்கியின் உரிமையாளர் யார் என்பது குறித்த மர்மம் தொடர்ந்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com