“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்

“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்

“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்
Published on

வெள்ளை ஏகாதிப்பத்தியம் ஏந்தி நின்ற ஆயுதங்களுக்கு எதிராக களத்தில் சுழன்றவர் காந்தி. சாத்வீக வழியில் தங்களின் எதிர்ப்பு என்பது மட்டுமே அவரது நம்பிக்கை. ஆனால் அவர் நாடு விடுதலை அடைந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க தொடங்கி இருந்த காலத்தில் 1948 ஜனவரி 30 அன்று சுட்டுக் கொள்ளப்பட்டார். வாழ்நாள் முழுவதும் ஆயுத வழிப்போராட்டத்தை எதிர்த்து வந்த மகாத்மா மரணத்தை தழுவியது துப்பாக்கி குண்டுகளால். அப்படியும் இந்தியா அகிம்சை நாடாகவே உலக அரங்கில் கொடிகட்டி பறந்தது. 

இந்தக் கொள்கைக்கு மாறாக 1974 மே 18ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது இந்திரா தலைமையிலான அரசு. அதுவரை ‘அமைதி வழி’ எனப் பாடம் நடத்திய தேசம் அணு ஆயுதத்தை கையில் எடுத்ததை கண்டு பேரதிர்ச்சியில் ஆழ்ந்தன உலக நாடுகள். உலகமே இந்தியா போட்ட அணுகுண்டு சத்தத்தினைக் கேட்டு திரும்பி பார்த்தாலும் நம் தேசம் அதனை ‘அமைதியான அணுக்கரு வெடிப்பு’ என்றே பெயரிட்டு அழைத்தது. புத்த பூர்ணிமாவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு ‘சிரிக்கும் புத்தர்’ என்று பெயர் சூட்டினார்கள்.

அதன் பிறகு 1998ல் மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனையை தேசம் சந்தித்தது. அதற்கு அட்சாரம் போட்டவர் அன்றய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய். இதற்கு முன்பே நரசிரமராவ் அதற்கான முயற்சியை எடுத்தார். அதற்கான அரங்கேற்றம் நடக்கவிருந்த நிலையில் அமெரிக்கவின் கழுகுக் கண் அதனை கண்டறிந்துவிட்டது. ஆகவே அந்தக் காரியம் கைகூடவில்லை.

அந்தக் கழுகு கண்களுக்கு வேடிக்கை காட்டிவிட்டு வாஜ்பாய் அதனை சாதித்துக் காட்டினார். அந்தச் சாதனை அமெரிக்காவிற்கு அவமானமாக போனது. அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தன் சட்டையே கிழிந்ததைபோல அவமானம் அடைந்தார். அதன் விளைவாக அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதித்தது. அதனையொட்டி கனடா போன்ற நாடுகளும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. இந்த அணுகுண்டு வெடித்த உடன் வாஜ்பாய் ஏழைப் பாழைகள் வரை போய் இதயத்தில் நிறைந்தார். அதனால் என்ன ஆதாயம் என அறியாதவர்கள் அவரது அணுசோதனையை ஆதரித்தார்கள். இந்தியா முழுவதும் இந்தக் குண்டு மூலம் பிரபலமானவர்கள் இருவர். ஒருவர் வாஜ்பாய். மற்றொருவர், ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

வாஜ்பாய் பிரதமாராகி 2 மாதங்கள் கழித்து 1998 மே17 அன்று இந்தியா டுடே இதழுக்கு ஒரு பேட்டி அளித்தார். அவரிடம் அணுகுண்டு பற்றிதான் முதல் கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், “தேர்தலில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறிதியின் அடிப்படையிலேயே இந்தச் சோதனைகளை நிகழ்த்தினோம். இது தேசிய செயல் திட்டத்தில் ஒரு பகுதி. தேசிய பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தான் சோதனைகளை செய்ய முடிவெடுத்தோம்” என்றார். மேலும் “இப்போது இந்தியா ஒரு அணு அயுதபாணி நாடு” என்றார். “இந்தியா அணு ஆயுதபாணியாக வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். எங்கள் பாஜகவும் முந்தையை பாரதீய ஜனசங்கமும் இதற்காக நெடுங்காலமாக வாதாடி வந்திருக்கின்றன” என்றார்.

பொருளாதாரத் தடைகள் பற்றிய கேள்விக்கு, “தடைகளால் நமக்கு ஒரு கேடும் இல்லை. வராது. இந்த மாதிரியான அச்சுறுத்தல்களுக்கும், தண்டனைகளுக்கும் இந்தியா அடிபணியாது” என்றார். உங்களின் அரசியல் ஆதாயத்திற்காக இந்த நடவடிக்கையா என்றதற்கும் அவரிடம் வெளிப்படையான பதில் இருந்தது. “அரசியலைவிட தேசத்தை முக்கியமாக நாம் கருதுவதே இந்திய ஜனநாயகத்தின் பெரிய பலம். 1974ல் இந்திரா காந்தி முதன்முதலாக அணு ஆயுத சோதனை செய்த சமயத்தில், நாங்கள் எதிர்கட்சியாக இருந்தோம். ஆனால் அவருக்கு ஆதரவு தந்தோம்” என்றார்.

அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்த போது, அவரை ஒரு புதிய பிரதமராகதான் தேச மக்கள் பார்த்தார்கள். ஆனால் அவரின் ஆட்சியின் மூலம், அவர் புதிய இந்தியாவின் பிரதமராக தெரிய தொடங்கினார். அவர் இன்று இல்லை. அவரது கவிதை வரிகள் உயிர்ப்போடு உள்ளன. அதன் வழியே இந்தத் தேசம் அவரை வாசித்துக் கொண்டே இருக்கும். அவர் பாடி இந்தக் கவிதையில் பனித்துளியை என்றும் காண முடியாது என்கிறது.  இனி நாம் பனித்துளியைக் காணலாம். வாஜ்பாய்யைதான் காண முடியாது. 

“சூரியன் மீண்டும் எழுவான்
வெய்யிலோ மீண்டும் தோன்றும்
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில் 
பனித்துளிகள்,
எல்லாப்பருவங்களிலும் 
காண இயலாது.”

  -அடல் பிகாரி வாஜ்பாய்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com