வாட்ஸ்அப் மூலம் கொரோனா உதவித் தகவல்களை அளிக்கும் AI மென்பொருள்!

வாட்ஸ்அப் மூலம் கொரோனா உதவித் தகவல்களை அளிக்கும் AI மென்பொருள்!
வாட்ஸ்அப் மூலம் கொரோனா உதவித் தகவல்களை அளிக்கும் AI மென்பொருள்!

வாட்ஸ்அப் சேவையில் வதந்திகள் மற்றும் பொய்த்தகவல்கள் அதிகம் உலா வந்தாலும், தகவல் பரிமாற்றத்தில் அதன் பயன்பாட்டை புறந்தள்ளிவிட முடியாது. அந்த வகையில், வாட்ஸ்அப் சேவையின் வீச்சை கொரோனா நோயாளிகளுக்கான உதவித் தகவல்களை பகிர்ந்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இன்ட்ராபாட் (IntroBot) எனும் முன்னோடி சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பாக உதவி கோருபவர்களுக்கு தேவையான தகவல்களை ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு மூலம் தானாக அளிக்கும் வகையில் இந்த இன்ட்ராபாட் உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் வாட்ஸ்அப் சேவையை வழக்கமாக பயன்படுத்துவது போலவே, இந்த கொரோனா பாட் சேவையையும் பயன்படுத்தலாம். அவர்கள் கேட்கும் கேள்விகள் அல்லது கோரும் உதவிகளுக்கு ஏற்ப பொருத்தமான தகவல்களை இந்த 'பாட்' தானாக அளிக்கும்.

செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட, இந்த சாட் மென்பொருள் தொடர்புடைய தகவல்களை தானாக தேடி அளிக்கிறது. 

செயற்கை நுண்ணறிவு துணையோடு தானாக உரையாடும் தன்மை கொண்ட மென்பொருள்கள் சாட்பாட்கள் என குறிப்பிடப்படுகின்றன. நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர் சேவை உள்ளிட்டவற்றுக்காக இந்த வகை சாட் பாட்கள் (CHAT BOT) பயன்படுத்தப்படுகின்றன.

வாட்ஸ்அப் போன்ற சேவைகள் மூலம் பயனாளிகளிடன் உரையாடுவதற்கான சாட்பாட்களையும் உருவாக்க முடியும். இத்தகைய வாடிக்கையாளர் சேவை சாட்பாட்டை தான், இன்ட்ராபாட் மேடை மூலம் திவ்யன்ஷ் அனுஜ் மற்றும் உத்கர்ஷ் ராய் ஆகியோர் உருவாக்கியிருந்தனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், தொழில்நுட்பம் மூலம் தங்கள் பங்கிற்கு நிலைமையை சமாளிக்க உதவும் வகையில், இவர்கள் இன்ட்ராபாட் சேவையை கொரோனா உதவிக்கான உரையாடல் மென்பொருளாக மாற்றியுள்ளனர்.

வாட்ஸ்அப் சேவை சிறிய நகரங்களில் உள்ளவர்களாலும் அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாக இருப்பதால், கொரோனா உதவி தகவல்களை வாட்ஸ்அப் மூலம் நாடும் வகையில் இந்த சாட் மென்பொருள் அமைந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனை வசதி அல்லது ஆக்சிஜன் வசதி தொடர்பான தகவல்களை தேட விரும்பினால், இந்த மென்பொருளை நாடலாம். வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்புவது போலவே, இந்த சேவைக்கான எண்ணுக்கு தங்கள் கேள்வியை அனுப்ப வேண்டும்.

இருப்பிடம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு உதவி கோருவதற்காக என்றே இந்த மேடையில் விண்ணப்பம் போன்ற செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் விவரங்களை தெரிவித்து கோரிக்கையை அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவர் பிளாஸ்மா தானம் எங்கே கிடைக்கும் என்றோ அல்லது ஆக்சிஜன் சிலிண்டர் எங்கே கிடைக்கும் என்றோ கேட்கலாம்.

இந்த கோரிக்கைக்கு ஏற்ப, எந்த இடத்தில் இதற்கான உதவி கிடைக்கும் என்பதை இணையத்தில் தேடி துழாவி, அதற்கான சரி பார்க்கப்பட்ட தொடர்பு எண்ணை இந்த மென்பொருள் தெரிவிக்கும்.

ட்விட்டர் உள்ளிட்ட இணைய மேடைகளில் கொரோனா உதவி தொடர்பாக பகிரப்படும் தகவல்களை தானாக அலசி ஆராய்வதன் மூலம், பொருத்தமான தகவலை இந்த மென்பொருள் அளிக்கிறது.

இந்த சேவையை பயன்படுத்த தனியே செயலியை அல்லது மென்பொருள் வடிவத்தை டவுண்லோடு செய்ய வேண்டாம். இந்த சேவையின் தொலைபேசி எண்ணை (+1-234-517-8991) வாட்ஸ் அப்பில் சேமித்து கொண்டால் போதுமானது.

டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட பலவேறு நகரங்களில் செயல்படும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நிவாரணத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு இணையதளங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து இந்த சேவையை அளித்து வருவதாக அதன் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்தகட்டமாக ட்விட்டரில் வெளியாகும் கொரோனா உதவி தகவல்களை திரட்டித் தரும் மென்பொருளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். வாட்ஸ்அப் மென்பொருள் உதவி வசதியை உள்ளூர் மொழிகளிலும் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com