அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: முதல்நாள் முதல் தற்போதுவரை நடந்தது என்ன?

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: முதல்நாள் முதல் தற்போதுவரை நடந்தது என்ன?
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: முதல்நாள் முதல் தற்போதுவரை நடந்தது என்ன?

தஞ்சை பள்ளியில் படித்து வந்த அரியலூரை சேர்ந்த மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், மதமாற்றம் உள்ளிட்ட பல புகார்கள் எழுந்து மாநிலம் முழுவதும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடக்கம் முதல் தற்போதுவரை நடந்தவற்றின் தொகுப்பு இங்கே.

விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட மாணவி:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதல் மனைவிக்கு பிறந்த மகளை தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைகேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 8-ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார் முருகானந்தம். பள்ளியின் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்த அம்மாணவி, இந்த வருடம் 12ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மாணவி திடீரென வாந்தி எடுத்துள்ளார். அப்போது உடன் படித்த மாணவிகள் அவரிடம் அதுகுறித்து விசாரித்துள்ளனர். அதற்கு மாணவி தனக்கு வயிற்று வலி என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மறுநாள் அவரின் தந்தை முருகானந்தத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மைக்கேல்பட்டிக்கு சென்ற அவர், அங்கிருந்து தனது மகளை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற மாணவிக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 15 ஆம் தேதி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது ஹாஸ்டலில் வார்டன் அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால் மன உளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஹாஸ்டலின் வார்டன் சகாயமேரியை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் மாணவி  பேசியதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அதில், “என்னை பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்யக் கூறியது. அதற்கு அம்மாவும் அப்பாவும் ஒத்து வராததால், பள்ளியில் என்னை துன்புறுத்தி வேலை வாங்கினர்” என மாணவி பேசியிருந்ததாக வீடியோவும் வெளியானது. இந்த சூழலில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி கடந்த 19 ஆம் மரணடைந்தார்.

மதமாற்ற புகார் சொன்ன பெற்றோர் - பாஜகவினர் போராட்டம்:

மாணவி  உயிரிழந்ததை தொடர்ந்து அவரின் உடலை பிரதே பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பேசிய மாணவியின் தந்தை முருகானந்தம், "என் மகள் விஷம் குடித்த விஷயமே எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. என் மகளிடம் இது குறித்து விசாரித்தபோது, எங்கள் பள்ளிக்கூடத்தில் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தினார்கள். நான் முடியாது என சொல்லிவிட்டேன். அதனால் என்னை கொடுமைப்படுத்தினார்கள், அந்த கொடுமை தாங்காமல் விஷம் குடித்துவிட்டேன் என்றாள்" என தெரிவித்தார்.

இப்படியான சூழலில்தான் மறியலில் ஈடுபட்ட உயிரிழந்த மாணவியின் பெற்றோருடன் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர். பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், “ஆசிரியை ராக்கிலின்மேரி என்பவரை கைது செய்ய வேண்டும், அந்த பள்ளியை மூட வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மதமாற்றம் குறித்து அழுத்தம் கொடுத்ததால், மாணவி  தற்கொலை செய்துகொண்டதாக கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும், மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணை நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மதமாற்றம் குறித்த தகவல் வாக்குமூலத்தில் இல்லை - மாவட்ட எஸ்.பி:

இந்த விவகாரம் குறித்து பேசிய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா," மாணவி விஷம் குடித்த தகவல் 15ஆம் தேதி எங்களுக்கு கிடைத்தது, இதனைத் தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிகிச்சையில் இருந்த மாணவியிடம் மருத்துவர்களின் ஒப்புதலுடன் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலமும் பெற்றார்.

போலீஸ் நடத்திய விசாரணையிலும், மாஜிஸ்திரேட்டு பெற்ற வாக்குமூலத்திலும் மதமாற்றம் தொடர்பான எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதுபோல அவரது பெற்றோரும் அப்போது இதுகுறித்து சொல்லவில்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில் மாணவி சிகிச்சையில் இருப்பது போலவும் அவர் பேசுவது போலவும் வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. இது சிறார் சட்டப்படி குற்றம். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது மாணவியின் பெற்றோர் அளித்த மற்றோரு புகாரில் மதமாற்றம் குறித்து குறிப்பிட்டுள்ளனர். எனவே இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.

உடலை வாங்க மறுத்த பெற்றோர் - உத்தரவிட்ட உயர்நிதிமன்றம்:

மதமாற்றம் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாணவி உடலை வாங்க அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுத்தனர். 2 நாட்கள் ஆகியும் மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாமல் தவித்த காவல்துறை, 21-ஆம் தேதி மாலை மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். இதன்பின்னரும் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் மறுத்து வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, "மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும், மதமாற்றம் குறித்து புகார் எழுந்துள்ளதால் எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் இடம் தராமல் காவல் துறை விசாரிக்க வேண்டும், தஞ்சை நீதிபதியின் முன்பு பெற்றோர் ஆஜராக வேண்டும்" எனவும் உத்தரவிட்டதை தொடர்ந்து மாணவியின் உடலை 22ஆம் தேதி மாலை பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக - இந்து முன்னணி தலைவர்கள்:

மாணவியின் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 22ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோர் ஜனவரி 23ஆம் தேதி தஞ்சை 3வது நீதித்துறை நடுவர் பாரதியின் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இருவரிடமும் நீதிபதி தனித் தனியாக வாக்குமூலம் பெற்றார். இருவரின் வாக்குமூலமும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குமூலம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

”மாணவி மரணத்தை அரசியலாக்க வேண்டாம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவி தற்கொலை விவகாரம் குறித்து பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்கக் கூடாது. மதமாற்றம் தொடர்பாக மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்படும். மேலும், மாணவி தற்கொலை தொடர்பாக காவல்துறை விசாரணை மட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, தயவு கூர்ந்து தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டும் மதமாற்ற குற்றச்சாட்டை, முதற்கட்ட விசாரணையின் போது யாருமே சொல்லவில்லை. தற்போது இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளியில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்தும், தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன' என்று கூறினார்.

”மதமாற்ற தடைச்சட்டம் வேண்டும்” - பாஜக அண்ணாமலை

இதனைத்தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்திற்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இறந்தவர் சடலத்தை வைத்துக் கொண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து மக்களைத் திசைதிருப்பும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை, எங்களது கோரிக்கைகள் இதுதான். மாணவி லாவண்யாவின் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், மதம் மாறச் சொல்லி வற்புறுத்திய ராகேல் மேரி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மீண்டும் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும், சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com