ஆறுதல்... குதூகலம்... மனநிறைவு... இசைப்புயலின் பிறந்த தினம் இன்று!

ஆறுதல்... குதூகலம்... மனநிறைவு... இசைப்புயலின் பிறந்த தினம் இன்று!
ஆறுதல்... குதூகலம்... மனநிறைவு... இசைப்புயலின் பிறந்த தினம் இன்று!

உள்ளூரின் ஏதோ ஒரு மேடையில் நடத்தப்படும் பாராட்டாக இருந்தாலும் சரி, உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஆஸ்கர் மேடையாக இருந்தாலும் சரி. உதட்டோரம் அதே புன்முறுவல். முகத்தில் அதே சாந்தம். தன்னை நோக்கி எத்தனை பெரிய விருது வந்தாலும் அதை கைகளில் மட்டுமே வாங்கிக்கொண்டு தலைக்கு ஏற்றாத எளிமை. உலகமே தன்னை புகழ்ந்த அந்த நொடியிலும் ''எல்லா புகழும் இறைவனுக்கே'' என்றுக்கூறிய தன்னடக்கம். இது தான் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான். இன்று அவரின் பிறந்தநாள். அவரிடம் ரசிக்க இசையைத் தாண்டி இன்னும் நிறைய இருக்கிறது.

1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் பாடல்கள் காற்றில் மிதக்க தொடங்கின. அப்போது தான் இந்த இசை உலகம் ரகுமானை உற்று நோக்கியது. அதுவரை ஒரே மாதிரியான இசையைக் கேட்டுக்கொண்டு இருந்த மக்களுக்கு 'ரோஜா' ஏதோ ஒரு புதுமையை புகுத்தியது. 'புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது' என்ற பாடலின்  தொடக்க இசையில் மூழ்கித்திளைக்காதவர்கள் எவரும் இல்லை. ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒரு உணர்வை கிளப்பியது. படத்தின் பாடல்கள் மட்டுமல்ல, ரோஜாவின் பின்னணி இசையும் கூட. மதுபாலா திருமணமாகி ஊரைவிட்டு கிளம்புகையில் பின்னணியில் ஒலிக்கும் 'சின்ன சின்ன ஆசை'யாக இருக்கட்டும், படத்தின் க்ளைமேக்சில் தன் கணவருடன் சேரும் போது வரும் பிஜிஎம்மாக இருக்கட்டும். இந்தப் பையன் இசை உலகில் வலம் வருவான் என்று அன்றே இவ்வுலகம் தீர்மானித்தது. அதற்கான முதல் ஊக்கம் தான் முதல் படத்துக்கே தேசிய விருது.

ரகுமானின் தந்தையும் இசை உலகை சேர்ந்தவர் தான். ஜொலிக்காத நட்சத்திரமாகவே மறைந்தார் அவர். இளம் வயதிலேயே வறுமையின் பிடியில் சிக்கிய ரகுமானின் குடும்பம் அவரது தந்தையின் இசை கருவிகளை விற்று குடும்பம் நடத்தியது. ரகுமானுக்கு எல்லாமே அவர் தாய் தான். ஒரு முறை ''உங்களோட இசை வளர்ச்சியில உங்க அம்மாவோட பங்கு என்ன'' என்று ரகுமானிடம் கேட்கப்பட்டது. அதற்கு இப்படி பதிலளித்தார் அவர், ''முழு பங்குமே என் அம்மாதான்''.

பிறப்பு முதலே இசையை சுவாசித்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அதை கற்றுக்கொள்வது அத்தனை பெரிய காரியமாக இருக்கவில்லை. தன்னிடம் மூழ்கியிருந்த இசைக்கு இறுதி வடிவம் கொடுத்தார் அவ்வளவுதான். டிரினிடி கல்லூரியின் உதவித்தொகை மூலம் இசை பயின்று பட்டம் பெற்றார் ஏஆர் ரஹ்மான். பின்னர் இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக்குழுவில் பணியாற்றினார். பின்னர் சில விளம்பரங்களுக்கு இசையமைத்த ரகுமான், ரோஜா படம் மூலம் திரையுலகில் தன் பாதங்களை பதித்தார்.

தன் முதல் படத்துக்கு பிறகு ரகுமான் , பள்ளம் நோக்கி ஓடி வரும் நீரைப்போல வேகம் எடுத்தார். அடுத்தடுத்த அனைத்து படங்களிலும் ஹிட் ஆல்பங்களை அள்ளி வீசினார். இந்த இசைப்புயல் தமிழகத்தில் மட்டுமே சுழன்று அடிக்கவில்லை, எல்லைத்தாண்டி பயணித்தது. மொழி கடந்து வீசியது. பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து தளங்களிலும் தன் இசையை ஒலிக்கச்செய்தார். இசை உலகில் கொடிகட்டிப்பறந்த மைக்கில் ஜாக்சனுடனும் கூட இந்த தமிழன் கைகோர்த்து நின்றான். மெட்ராஸ் மொசார்ட் என்று இவ்வுலகம் ரகுமானை வர்ணித்தது. ரகுமானின் பயணத்தில் முக்கியமான தருணம் ஆஸ்கர் மேடை. இந்தியர்கள் பெரும் கனவாய் பார்த்துக்கொண்டு இருந்த ஆஸ்கர் மேடையில் ஏறி இரண்டு விருதுகளை கையில் தவழ வைத்து நாவில் தமிழை தவழ வைத்தார் ரகுமான். அந்த தருணம் இந்தியர்களுக்கு பெருமை தந்தது. தமிழர்களுக்கு அது நெகிழ்ச்சி தருணம். 

உள்ளூர் விருதுகள், கோல்டன் குளோப், பாஃப்டா, ஆஸ்கர் என ரகுமானின் விருது பட்டியல் கடலின் தொலைதூர புள்ளியைப்போல நீண்டு கொண்டே செல்லும். காதலர்களுக்கு காதல் பொங்க செய்கிறது, வலிகளுக்கு மருந்திடுகிறது, பிரிவுகளுக்கு ஆறுதல் தருகிறது, இன்னும் எத்தனையோ. எந்தவித உணர்வோடு கடற்கரைக்கு வந்தாலும் அது ஏதோ ஒரு ஆறுதலை, ஏதோ ஒரு குதூகலத்தை, ஏதோ ஒரு மனநிறைவை கொடுக்குமே, அப்படியாய் இசையை கொடுக்கிறார் ரகுமான். அவர் ஒரு இசைக்கடல். எல்லை இல்லை. அவரின் இசை அலை ஆர்ப்பரிக்கும். ஆனால் அவர் மட்டும், நடு ஆழியைப் போல அதே அமைதி தான். அது தான் ஏ.ஆர்.ரகுமான்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com