"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்"-தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியை சரஸ்வதி

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்"-தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியை சரஸ்வதி
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்"-தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியை சரஸ்வதி

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களில் ஒருவரான இரா. சி. சரஸ்வதி, சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இன்று காலையில் இருந்து அவரைப் பிடிக்க முடியவில்லை. தொலைபேசியில் குவியும் தொடர் வாழ்த்துகளால் பரபரப்பாக இருக்கும் அவர், புதிய தலைமுறை இணையதளத்திடம் பேசினார்.

"எனக்குச் சொந்த ஊர் கமுதி. அப்பாவும் அம்மாவும் பள்ளி ஆசிரியர்கள். கல்லூரியில் வேதியியல் படித்தேன். படிப்பை முடித்ததும் 1987 ஆம் ஆண்டில் ஒரு கல்லூரியில் பணியாற்றினேன். பிறகு அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக இருந்தேன். 1991 ஆம் ஆண்டில்தான் அரசுப் பணி கிடைத்தது. முதல் பணி சோளிங்கரில். அதற்கடுத்து சென்னை அசோக் நகர் பள்ளிக்கு வந்துவிட்டேன். 2014 முதல் தலைமை ஆசிரியர் பணியில் இருக்கிறேன்.

எங்கள் பள்ளியின் முன்னோர்கள் வழியில் நான் செல்கிறேன். அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியை மிகச் சிறந்த பள்ளியாக உருவாக்கிய முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இந்த தருணத்தில் நினைத்துப்பார்க்கிறேன். செளமினி வித்யாதரன், கலாவதி போன்றவர்கள் போட்ட விதையில்தான் அசோக் நகர் பள்ளி பெரும் விருட்சமாக வளர்ந்திருக்கிறது. கலாவதி மேடம் நல்லாசிரியருக்கான மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். இரண்டாவதாக தேசிய நல்லாசிரியர் விருதை நான் பெறுவது எங்கள் பள்ளிக்குக் கிடைத்த தொடர் பெருமை.

நாங்கள் சாக்பீஸைத் தாண்டி நவீன தொழில்நுட்பங்கள் வழியாக பாடம் நடத்திவருகிறோம். வெறும் படிப்பை மட்டுமல்ல, வாழ்வதற்கான அனைத்து திறன்களையும் கற்றவர்களாக மாணவிகளை மாற்றுகிறோம். பள்ளியில் அறிவியல் மையம், மேத்ஸ் லேப், வெர்ச்சுவல் லேப், ஏடிஎல் டிங்கரிங் லேப் என பல ஆய்வகங்கள் உள்ளன. தேசிய அளவிலான அக்ரி டெக் போட்டியில் எங்கள் மாணவிகள் தேசிய அளவில் விருது வென்றுள்ளனர். அதேபோல எளிய முறையில் ப்ளோர் க்ளீனரை உருவாக்கியும் சாதனை படைத்திருக்கிறார்கள்.

மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகள், வெற்றிகள் எல்லாமே கற்றல், கற்பித்தலின் நல்ல பாதிப்புகள்தான். ஸ்க்ராப்பிள் போர்டு மூலம் ஆங்கில வார்த்தைகளைக் கற்பிக்கிறோம். இந்தப் பள்ளிக்கு நம்பிக்கையுடன் வரும் குழந்தைகள் வெறும் படிப்பை மட்டும் முடித்துவிட்டுச் செல்லக்கூடாது. அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான மென் திறன்களையும் கற்றுக்கொடுத்து அனுப்பிவைக்கிறோம். தங்கள் பிள்ளைகளை ஆறாம் வகுப்பில் சேர்த்தால் பிளஸ் டூ முடிக்கும் வரை பெற்றோர்கள் கவலைப்படுவதில்லை.

காலையில் பள்ளியில் நடக்கும் வழிபாட்டில் தியானம், யோகா, அப்துல்கலாமின் நம்பிக்கை வார்த்தைகள் என அவர்களை உற்சாகப்படுத்தி வகுப்புகளுக்கு அனுப்புகிறோம். 'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே' என்ற பாடல் வரிகளைப் போலத்தான். ஆசிரியர்களும் பெற்றோர்களும்தான் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்கவேண்டும். இங்கு படிக்கும் 3955 மாணவிகளும்  சமூகத்தில் சிறந்தவர்களாக நம்பிக்கை கொண்டவர்களாக உருவாகி வருகிறார்கள். பாதுகாப்பான சூழலில் நல்ல ஆரோக்கியமான கல்வியை மாணவிகளுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம்.

மிகச்சிறந்த பள்ளியாக உருவாக்கும் பணியில் ஈடுபடும் சக ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் என அனைவரின் உழைப்பும் ஒத்துழைப்பும் இருக்கிறது. தேசிய நல்லாசிரியர் விருது பெறும் நேரத்தில் அவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன். நான் என்பது இவர்களையும் சேர்த்துதான். மதிப்பெண்களைத் தாண்டி பெற்றோர்களை, ஆசிரியர்களை மதிக்கக்கூடிய பண்புள்ள பொறுப்பான ஒழுக்கமான மாணவிகளை உருவாக்குவதே எங்கள் பள்ளியின் குறிக்கோள்" என்று ஆர்வம் பொங்கப் பேசுகிறார் கல்விக் கடவுளின் பெயரைக் கொண்ட ஆசிரியர் சரஸ்வதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com