10 ஆண்டுகளை கடந்த அண்ணா நூற்றாண்டு நூலகம்... ஒரு நேரடி விசிட்

10 ஆண்டுகளை கடந்த அண்ணா நூற்றாண்டு நூலகம்... ஒரு நேரடி விசிட்
10 ஆண்டுகளை கடந்த அண்ணா நூற்றாண்டு நூலகம்... ஒரு நேரடி விசிட்

ஒரு சமுதாயம் எவ்வளவு அறிவுடையதாக இருக்கிறது என்பதை, அவர்களிடம் எத்தனை நூலகங்கள் உள்ளது என்பதை வைத்து சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு ஒரு சமுதாயத்தின் ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பது நூலகங்கள்தான். அந்த வகையில்தான், சென்னையில் முக்கியமான அடையாளமாக திகழ்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். மிகப்பழமையான நூலகமாக கன்னிமாரா இருந்த போதிலும், தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகம் தனித்தன்மையோடு இருந்து வருகிறது. முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவாக 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதியன்று, அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதியால் சென்னையில் கட்டப்பட்டது அண்ணா நூற்றாண்டு நூலகம்.

இந்த நூலகத்தின் 10வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நூலகத்தில் இருக்கும் வசதிகள் மற்றும் முன்னேற்றம் குறித்து நூலக அலுவலரிடம் பேசினோம்.

சென்னை அண்ணா நூலகத்தில் தினமும் குறைந்தது 1200 பேர் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் 1500 பேர் வருகிறார்கள். இந்த நூலகத்திலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்துச்செல்ல முடியாது. குறிப்பெடுக்க மட்டுமே அனுமதி உண்டு. இங்கு வந்து தேவையான புத்தகங்களை எடுத்து படித்துக்கொள்ளலாம். முக்கியமாக கல்வி தொடர்பான, அதாவது சிவில் சர்வீஸ், டிஎன்பிசி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்பவர்களுக்கென்றே தரைத்தளத்தில் பிரத்யேக புத்தகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஐஐடி, எம்ஐடி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும் அதிகம் வருகிறார்கள்.

உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய இ- நூலகம் என்ற பகுதி உள்ளது. இங்கு கல்வி சம்பந்தமான வெப்சைட்டுகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். 3000 எழுத்தாளர்களின் அனுமதியோடு இந்த இ- நூலகம் இயங்கிவருகிறது. மேலும், பல எழுத்தாளர்கள் அனுமதி கொடுக்கும்போது இந்த வசதி விரிவாக்கப்படும். ஆனால், யுடியூப் வசதி கிடையாது. கல்வி சம்பந்தமான அனைத்தும் இங்கு கிடைக்கும்.

சொந்த புத்தக பகுதி என்ற ஒரு பிரிவு உள்ளது. வீட்டில் அமைதியாக அமர்ந்து படிக்க இடம் இல்லாதவர்கள் இங்கு தங்களுடைய சொந்த புத்தகங்களைக் கொண்டுவந்து படிக்கலாம். ஆனால், குழுவாக அமர்ந்து படிக்க (group discussion) அனுமதி கிடையாது. ஆனால், முக்கிய தேர்வுகள் வரும்போது இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டும், குழுக்களாக அமர்ந்து படிக்க குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்படும்.

பார்வையில்லாதவர்களுக்கென்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் பார்வையில்லாதவர்களின் இமெயில் ஐடியை வாங்கி தினசரி செய்தித்தாள்கள் ஆடியோவாக மாற்றப்பட்டு அனுப்பப்படும். இதுதவிர தன்னார்வலர்களை வைத்து கல்வி சம்பந்தமான புத்தகங்கள் ஆடியோவாக மாற்றிவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 டிபி வரை சேமிக்கப்பட்டுள்ளன. பார்வையில்லாதவர்கள் வந்து உதவி கேட்கும்போது அவர்கள் கேட்கும் புத்தகங்கள் ஆடியோவாக வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், பாரம்பரிய விளையாட்டுகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஞாயிறுதோறும் காலை 11 மணிமுதல் 12.30 மணிவரை குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுதவிர, கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கென்று குறிப்பிட்ட நாட்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இரண்டாவது தளத்தில், ஃபிக்‌ஷன் தமிழ் புத்தகங்களும், நான்காவது தளத்தில் ஃபிக்‌ஷன் ஆங்கிலப் புத்தகங்களும் கிடைக்கும். தினமும் காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை நூலகத்திற்கு வர அனுமதி உண்டு. சொந்த புத்தகங்களைப் படிப்பவர்கள் காலை 8 மணியிலிருந்து இரவு 9 மணிவரை இருக்கலாம்.

நூலக உறுப்பினர்களுக்கு எப்போதும் முதலிடம் கொடுக்கப்படும். தனிநபர்கள் ரூ.250ம், மாணவர்கள் ரூ.150ம், மூத்த குடிமக்கள் ரூ.100ம் செலுத்தி உறுப்பினராக பதிவுசெய்து கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் 4 பேர் மொத்தமாக உறுப்பினராக விரும்பினால ரூ.500 செலுத்தினால் போதும்.

செய்தித்தாள்கள் பகுதியில், அனைத்துவிதமான செய்தித்தாள்களும், பழைய செய்தித்தாள்கள் அனைத்தும் கிடைக்கும். புத்தகங்களை பகுதிவாரியாக சென்று தேட சிரமப்படுபவர்கள் வர்சுவல் சர்ச்சிங் மூலம் தேடி எளிதாக புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நூலகம் ஆரம்பித்தபோது 150 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டது. பிறகு 2 கோடிக்கு புத்தங்கள் வாங்கப்பட்டது. சமீபத்தில் 5 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் அனைத்தும் பொது நூலக இயக்கத்தின் கீழ் நிதி சேகரிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளது.

புதிதாக வருபவர்களுக்கு உதவிசெய்ய ஒவ்வொரு தளத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். பொதுவாக அனைத்து புத்தகங்களிலும் 2 பிரதிகள் இருக்கும். மிகவும் பிரபலமான புத்தகங்களுக்கு 4 பிரதிகள்வரை இருக்கும். இங்கு மன அழுத்ததுடன் சிலர் வருவார்கள். அவர்கள் குறிப்பிட்ட புத்தகம்தான் வேண்டும் என சண்டையிட தொடங்குவார்கள். அவர்களை சமாதானப்படுத்துவதில் சிரமம் இருக்கும். சிலர் சுற்றிப்பார்க்கவும் வருவார்கள். சிலர் ஏஸி வாங்க வருவார்கள். அவர்கள் சில புத்தகங்களை எடுத்துப்பார்க்கும்போது அவர்களும் படிப்பதை வழக்கமாக்கி உறுப்பினர்களாக மாறியிருக்கிறார்கள். புத்தகங்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லாததால், சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் நகலாக்கிக்கொள்ள வசதி உண்டு.

யுடியூப்பில் நூலகம் சார்பாக ‘பொன்மாலை பொழுது’ என்ற கலந்துரையாடல் சனிக்கிழமைதோறும் நடைபெறும். இதில், கல்வி, மருத்துவம் போன்ற துறை சார்ந்த வல்லுநர்கள் பேசுவார்கள். டிவிட்டர் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களும் ’ACL சென்னை’ என்ற பெயரில் இயங்கிவருகிறது. அஸைன்மெண்ட் செய்யவரும் மாணவர்களுக்கு உதவ என்.வி.டி.ஏ(Non Visual Development Authority) என்ற வசதியும் உள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் தற்போது காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே நூலகம் செயல்பட்டு வருகிறது”

- Kalyani pandiyan, Ragav

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com