பெருந்தலைவர்களை 'எதிர்கொண்ட' அண்ணா.. நாகரிக அரசியல் சான்றுகள்!- பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

பெருந்தலைவர்களை 'எதிர்கொண்ட' அண்ணா.. நாகரிக அரசியல் சான்றுகள்!- பிறந்தநாள் சிறப்பு பகிர்வு
பெருந்தலைவர்களை 'எதிர்கொண்ட' அண்ணா.. நாகரிக அரசியல் சான்றுகள்!- பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

அறிஞர் அண்ணா திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் கவனம் பெற்றுவிட்டன. ஆனால், அண்ணாவின் அரசியல் கண்ணியமும், அரசியல் நாகரிகமும் பொதுத் தளத்தில் கவனம் பெறாமலே இருக்கிறது. இந்த சூழலில் அண்ணா ஏன் சிறந்த கண்ணியமான அரசியல் தலைவர் என்பது குறித்து பார்ப்போம். 

1967-ம் ஆண்டு அது. தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த சமயம். காங்கிரஸ் தொண்டர்களிடம் சோர்வும், திமுகவினரிடம் உற்சாகமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. காமராஜர் தோற்றுவிட்டார். காமராஜரின் தோல்வியை காங்கிரஸாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 1949-ம் ஆண்டு ஆரம்பித்த திமுக முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது. அண்ணா முதல்வராகப்போகிறார். ஆனால் அண்ணா கலக்கத்துடனே இருந்தார். ''வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்த வேண்டாம். காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்" என்றார் அண்ணா. 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என மனமுவந்து கூறிய நாகரிக அரசியலின் ஆணிவேரான அதே அண்ணாதான்!

இன்றளவும் அண்ணாவைப்போல ஒரு நாகரிக அரசியல்வாதியை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது. பெருந்தன்மையுடன் நடந்துகொள்வது அண்ணாவின் அல்டிமேட் இயல்பு. 'தேர்தலில் காங்கிரஸ் வென்றே ஆக வேண்டும்' என 1967 தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்கிறார் பெரியார். எதிரணியில் இருப்பதோ அண்ணா; பெரியாரின் போர்ப் படைத்தளபதி. அண்ணாவை கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரிக்கிறார் பெரியார். பெரியார் குறித்து அண்ணா தவறியும் எங்கேயும் ஒரு வார்த்தைக்கூட தவறாக பேசியதில்லை.

எல்லாம் முடிந்ததும், 'வாங்க போயிட்டு பெரியார பாத்துட்டு வெற்றியை காணிக்கையாக்கிட்டு வருவோம்' என்று தன்னுடைய சகாக்களை அழைக்கிறார் அண்ணா. ஆச்சரியத்துடன் அன்பில் தர்மலிங்கம், நெடுஞ்செழியன், கருணாநிதி எல்லோரும் கிளம்பி பெரியாரை பார்க்கச் செல்கின்றனர். ஒரு திரைப்படத்தின் காட்சியைப்போல, அண்ணாவை பார்த்ததும் பெரியார் நெகிழ்கிறார். அண்ணா உள்ளம் மகிழ்கிறார். 'நீங்க சொல்றபடிதான் ஆட்சி நடக்கும்' என வாக்களித்து பெரியாரிட்ட பாதையில் ஆட்சியின் தடங்களை பதிக்கிறார் அண்ணா. கட்சியில் தலைவர் நாற்காலியை பெரியாருக்காகவே இறுதிவரை வைத்திருந்தவர் அவர். அந்த அரசியல் கண்ணியம் அண்ணாவுக்கு மட்டுமே வாய்த்தது.

இங்கே பெரியார், கருணாநிதியை விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனால், அண்ணாவை உங்களால் அத்தனை எளிதில் விமர்சித்துவிட முடியாது. காரணம், தன்னை தாக்குகிறவரைக்கூட தாங்கக்கூடியவர் அவர். அண்ணாவின் பிரியத்துக்குரியவரான ஈ.வி.கே.சம்பத் கட்சியிலிருந்து விலகுகிறார். அண்ணாவால் ஏற்றுக்கொள்ள முடியாத பிளவு அது. திமுகவிலிருந்து வெளியேறியதும் `திராவிட நாடு பகல் கனவு' என முழங்கிய சம்பத், அண்ணாவின் மீது பல விமர்சனங்களை முன்வைக்கிறார். சம்பத் பிரிவு குறித்து அண்ணாவிடம் கேட்கிறார்கள், 'அது வைரக்கடுக்கண், காது புண்ணாக இருக்கிறது. அதனால் கழட்டி வைத்திருக்கிறேன்' என்கிறார். அப்போதும் கூட சம்பத் தானா வைரக்கடுக்கண்? புண்ணாக போனது இவர் காதுதானாம்! இந்தப் பண்பை அண்ணாவைத் தவிர, யாரிடத்திலும் பார்க்க முடியாது.

'அகழ்வாரைத்தாங்கும் நிலம்போல' திருக்குறளுக்கு பக்காவான பொருத்தம் அவர். பெரியாரை பிரிந்தபோது, பெரியார் விமர்சிக்கிறார். அண்ணா அமைதியாக இருக்கிறார். ஈ.வி.கே.சம்பத் விமர்சிக்கிறார். அவரை 'வைரக்கடுக்கண்' என்கிறார் அண்ணா. திட்டி தீர்க்கிறார் ராஜாஜி. தான் கலந்துகொள்ளும் கூட்டங்களிலெல்லாம் அண்ணாவை வசைபாடுகிறார். ஆனால், அவருக்கு 'மூதறிஞர்' என்ற பட்டம் கொடுத்து அழகு பார்க்கிறார் அண்ணா. 'இப்படியெல்லாம் ஓர் அரசியல் தலைவரா?' என மிரளவைக்கிறார்.

கடுஞ்சொல் பேசாமல் கருத்தை வலுவாக விதைப்பதில் வித்தகர் அண்ணா. எதிர்கட்சிகளை மாண்போடு அணுகும் பண்பை அண்ணாவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அப்போது காமராஜர், 'திமுகவை ஒழிக்காமல் விடமாட்டேன்' என கங்கணம் கட்டி வலம்வந்தார். அதற்கு அண்ணா, காமராஜரை எதிர்த்தோ, வசைபாடியோ, விமர்சித்தோ எதுவும் பேசவில்லை. மாறாக, ''நீங்களோ ஆளும்கட்சி. அதுவும் அகில இந்திய கட்சி. அத்தோடு நீங்கள் முதலமைச்சர் வேறு; அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. நானோ ஒரு சின்னக் கட்சியின் தலைவன். என்னைப்போய் நீங்கள் ஒழிக்க வேண்டுமென்று சொல்வது பட்டாக்கத்தியை எடுத்து பட்டாம்பூச்சியைவெட்டுவது போல'' என்றார்.

எதிர்ப்பவரையும் அரவணைக்கும் பண்பு அழகானது தானே? அந்த அரசியல் மாண்பை அறிந்ததாலோ என்னவோ, 'இதயத்தை கொடுத்திடு அண்ணா; வரும்போது எடுத்துவருகிறேன்' என கருணாநிதி கூறினார் போல.

-கலிலுல்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com