"அந்தத் தோல்வி இன்னும் நீண்டுக்கொண்டே இருக்கிறது" - அங்காடித்தெரு மகேஷ் 'ஓபன் டாக்'

"அந்தத் தோல்வி இன்னும் நீண்டுக்கொண்டே இருக்கிறது" - அங்காடித்தெரு மகேஷ் 'ஓபன் டாக்'
"அந்தத் தோல்வி இன்னும் நீண்டுக்கொண்டே இருக்கிறது" - அங்காடித்தெரு மகேஷ் 'ஓபன் டாக்'

காலம் எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் வாய்ப்பை அள்ளி வழங்கிவிடுதில்லை. சிலருக்கு வெற்றியை உடனடியாகவும், சிலருக்கு தாமதமாகவும் வழங்கி வேடிக்கப்பார்க்கும் காலத்தின் சூழலில் சிக்கியிருப்பவர் தான் 'அங்காடித்தெரு' மகேஷ். அங்காடித்தெரு படத்தில் விடலைப்பருவ இளைஞனாக தனது முதல் முத்திரையைப்பதித்தவர், தொடர்ந்து வெகுஜன பார்வையிலிருந்து மறைந்துபோனார். அடுத்தடுத்த படங்கள் தோல்வியைச் சந்தித்தாலும் துவண்டுவிடாமல், தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார். அண்மையில் அவருடைய வீராப்புரம் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சினிமாவில் சாதித்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் களமாடி வரும் அவரிடம் பேசினோம்.

உங்க முதல் படமான அங்காடித்தெரு பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி தான் என்னுடைய சொந்த ஊர். பொருளாதார ரீதியாக வளமான குடும்பமெல்லாம் இல்லை. அடிப்படையில் நான் ஒரு வாலிபால் ப்ளேயர். +2 படித்துக்கொண்டிருந்தபோது டோர்னமென்டுக்காக திருநல்வேலிக்குச் சென்றிருந்தேன். அங்க பஸ் ஸ்டாண்ட்ல பஸ்ஸுக்காகக் காத்திருந்தேன். அப்போ, வசந்தபாலன் சாரோட உதவி இயக்குநர் என்னைப் பார்த்தார். அப்போது அங்காடித்தெரு படத்தில் நடிப்பதற்கான ஆள் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவர் என்கிட்ட வந்து என்னைப் பற்றி விசாரிச்சார். 'அங்காடித் தெரு' படம் பற்றியும் சொன்னார். அங்கு தான் இயக்குநர் வசந்தபாலனின் உதவி இயக்குநர்கள் என்னை பார்த்துவிட்டு போட்டோஷூட் நடத்தினார்கள்.

அவருடைய போன் நம்பரைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அதன்பிறகு தமிழ்நாடு அணிக்காக விளையாட மத்திய பிரதேசம் சென்றுவிட்டேன். அங்கிருக்கும்போது, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'வசந்தபாலன் சார் உங்கள பார்க்கணும்' என்று கூறினர். இந்த விஷயம் என்னுடைய பயிற்சியாளருக்கு தெரிந்தது. பிறகு என்னை சென்னைக்கு செல்ல அனுமதித்தனர். சென்னை வந்தததும், வசந்தபாலன் சாரை நேரில் சந்தித்து அங்காடித்தெரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். +2 படித்துக்கொண்டிருந்த கையுடன் படத்தில் நடிக்க சென்றுவிட்டதால் என்னால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. சரியாக கல்லூரி படிக்கும் வயதில் தான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். படம் முடிந்தும் தொடர்ந்து சினிமாவில் இயங்க ஆரம்பித்துவிட்டேன்.

அங்காடித்தெரு படத்துக்கு பிறகான உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?

அங்காடித்தெரு படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு கல்லூரியில் படித்தால் என்ன அனுபவம் கிடைக்கும் அதே அனுபவம் இந்த படத்தின் மூலம் கிடைத்தது. நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அப்படியிருக்கும்போது படம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. என் முகமும் பிரபலமானது. அதை நான் எதிர்பார்க்கவேயில்லை. எனக்கு அது பிரமாண்டமாக இருந்தது. ஒரு வாலிபால் ப்ளேயர்ராக இருந்த ஒருவனுக்கு சினிமா வெளிச்சம் உத்வேகத்தை கொடுத்தது. அது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். ஆனால், அதன் பிறகான வாழ்க்கை முற்றிலும் நான் எதிர்பார்க்காத வகையில் மாறிவிட்டது. அடுத்த நடித்த படம் பல பிரச்னைகளை சந்தித்தது.

நான் அந்த படத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறினேன். வற்புறுத்தி நடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு, படமும் படுதோல்வியடைந்தது. முழுவதுமாக உடைந்துவிட்டேன். அந்த தோல்வியில் தொடங்கியது இன்றுவரை நீண்டுகொண்டேயிருக்கிறது. சரியான படம் அமையாமல் டீம் இல்லாமல் தத்தளித்து போராடிக்கொண்டிருக்கிறேன்.

பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு சினிமாவுக்குள் நுழைந்தபோது பெற்றோர்களின் ரியாக்சன் என்ன?

தொடக்கத்தில் நான் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று சொன்னபோது, அம்மா அப்பாவிற்கு அதில் பெரிய ஆர்வமில்லை. 'இது உன்னோட வாழ்க்கை. புதிய பாதைல போகப்போற, உனக்கு பிடிச்சிருந்தா பண்ணு, இல்லன்னா விட்டுரு. நாங்க சொல்லிட்டோம்னு நீ பண்ணாம போயிட வேண்டாம். நாங்க தட பண்ணாமாதிரி இருக்க வேணாம். உன் இஷ்டம்' என்று இருவரும் சொல்லிவிட்டார்கள். அப்போ வாலிபால் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் எனக்கு காலில் காயமும் இருந்தது. நானும் யோசித்துப்பார்த்தேன். இந்த காயத்துடன் விளையாடி பெரிய அளவில் வெற்றி பெற முடியாது என நினைத்து அங்காடித்தெரு படத்துக்குள் நுழைந்தேன். படம் வெற்றிபெற்றதும் வீட்டிலும் சந்தோஷப்பட்டனர். ஆனால், சினிமாவை விரும்பி பார்க்கும் பழக்கமெல்லாம் அவர்களிடம் இருந்ததில்லை. ஓரளவுக்கு பார்ப்பார்கள். பையனும் ஒரு வேளைல போயிட்டு இருக்கான்னு விட்டுட்டாங்க. தொடர் தோல்விகள் வரும்போது சஞ்சலப்பட்டனர்.

அங்காடித்தெருவுக்கு பிறகான உங்களின் சினிமா வாழ்க்கைய பத்தி சொல்லுங்க?

அங்காடித்தெரு படத்துக்குப்பிறகு, 'யாசகன்' 'வேல்முருகன் போர்வெல்ஸ்' 'இரவும் பகலும்' உள்ளிட்ட படங்களில் நடித்தேன். ஆனால் பெரிய அளவில் படங்கள் வெற்றியடையவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகளும் குறைந்தன. இடையில் படங்களில் நடித்தேன். பட ரீலிஸ் தாமதமாவதால் நீண்ட நாட்களாக படம் நடிக்காமல் இருப்பது போல தெரிகிறது. இதனால், நான் ஊருக்கே சென்று குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டேன் என பலரும் நினைத்துவிட்டார்கள். உண்மையில் நான் சென்னையில் தான் வாய்ப்பைத்தேடிக்கொண்டிருக்கிறேன். சரியாக டீம் அமையவில்லை. நல்ல படத்தில், நல்ல டீமுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில்தான் இன்றுவரைக்கும ஓடிக்கொண்டிருக்கிறேன்.

தோல்விகளுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

முதல் படமே ஹிட் கொடுத்துவிட்டேன். அடுத்தடுத்து தொடர்தோல்வி. அதை எதிர்கொள்வது சிரமமாகத்தான் இருக்கிறது. 'கதை கேட்டு நடிக்கவேண்டியதுதானே' என்று சொல்கிறார்கள். கதை கேட்டு தான் நடிக்கிறேன், ஆனாலும் தோல்விகளை பரிசாக கிடைத்தன. நமக்கான விஷயங்கள் சரியாக அமையவில்லையோ என தோன்றுகிறது. அப்பப்போ வாலிபால் ப்ளேயராகவே இருந்து விளையாட்டு துறையிலையே சென்றிருக்கலாமோ என நினைப்பேன். இருந்தாலும் சினிமாவை நாம் தான் தேர்வு செய்தோம். சினிமாவில் வெற்றி எளிதாக கிடைத்துவிட்டது. அதை அடுத்தடுத்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதற்கு பிறகு வேறு எதையும் தேர்வு செய்ய முடியாது. இனி சினிமாதான். இதில் எப்படி வெற்றியடைவது என்பதைத்தான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

அங்காடித்தெரு படத்துக்குபிறகு இயக்குநர் வசந்தபாலனுக்கும் உங்களுக்குமிடையே சந்திப்பு நிகழ்ந்ததா?

இல்லை. அண்மையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோதும் கூட நேரில் சென்று பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அப்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊரில் இருந்ததால்நேரில் சென்று பார்க்கமுடியவில்லை.

உங்களின் எதிர்காலத்திட்டம் என்ன?

அடுத்தடுத்து சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். பெரிய இயக்குநர்களை சந்தித்து வாய்ப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறேன். வில்லன் கதாபாத்திரத்திலாவது நடித்து திறமையை நிரூபிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்'' என்கிறார் உறுதியான குரலில்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com