வேகமாக உலகம் முன்னேறிக்கொண்டே இருக்க, பல்வேறு மாற்றங்களை நாம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். மிக முக்கியமாக வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், உடையலங்காரங்கள் என இப்போதைய டிரண்டுக்கு ஏற்ப மாறிக்கொண்டுதான் இருக்கிறோம். அதுவும் வேகமான உலகில், வேகாத உணவுகளைதான் ஸ்டைல் என்ற பெயரில் சுவைத்துக்கொண்டு இருக்கிறோம். உலகிலேயே மிக உன்னதமான உடம்புக்கு தீங்கு செய்யாத எளிதில் ஜீரணமாகும் வேகவைத்து உணவொன்று இருக்குமென்றால் அது இட்லிதான்.
எவ்வளவோ மாறினாலும் காலம் காலமாக மாறாத ஒரே டிசைன் இட்லி டிசைன். அதே வட்டம்தான். ஆனால் அதிலேயே ரவா இட்லி, குஷ்பு இட்லி, பொடி இட்லி, மினி இட்லி, சாம்பார் இட்லி என வகைகள்தான் இப்போது வரை கிடைத்து வருகிறது. சுவை மாறினாலும், கலர் மாறினாலும் டிசைன் ஒன்றுதான்.
ஆனால், அந்த டிசைனுக்கே இப்போது அபாயம் வந்துச் சேர்ந்துள்ளது. இட்லியை தென்னகத்து மக்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக சாப்பிட்டு வருகின்றனர். ஆனால், இப்போது கார்ப்பரேட் ஹோட்டல்கள் இட்லியை கிட்டத்தட்ட தேசிய உணவாக அறிவித்துவிட்டது. பல ஹோட்டல்கள் இட்லியின் டிசைனை மாற்றி பல்வேறு சுவைகளில், பல வடிவங்களிலும் விற்றுத் தீர்த்து வருகின்றனர். எளிதில் ஜீரணமாகும் உணவில், கண்டதையும் சேர்த்து சுவையை கூட்டி கல்லா கட்டி வருகிறது ஹோட்டல்கள்.
இந்த விவகாரத்தில் தோசையும் தப்பவில்லை. ஆம், சாதா தோசை, ஸ்பெஷல் சாதா, ரவா, ஆனியன் ரவா, மசால் தோசை இதுதான் நமக்கு தெரியும். ஆனால் இப்போதோ சீஸ் பன்னீர் தோசா, ப்ரூட் தோசா, பிட்சா தோசா 100-க்கும் மேற்பட்ட வகைகள். இதில் ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால் தோசையின் வடிவம் மட்டும் மாறாதது. இப்போது மாறியிருக்கும் சில இட்லி டிசைன்களும், வகைகளையும் பார்க்கலாம்.
விதவிதமான இட்லி தட்டுகள்
பெரிய பெரிய இட்லி தட்டுகள் பார்த்து இருப்போம், "இட்லி தட்டுகள்" போட்ட குட்டியைப் போல அடுத்து வந்தது மினி இட்லி தட்டுகள். இப்போது முக்கோண வடிவிலான இட்லி தட்டுகள் வந்துள்ளது. இது என்னடா கொடுமைனு கேட்டா, குழந்தைகளுக்கு ஒரே தட்டை வடிவத்தில் இட்லியை பார்த்து போர் அடித்துவிட்டதால். இட்லி தட்டுகளின் டிசைன்களை மாற்றுகிறோம் என இதை உருவாக்கிய நிறுவனமும் தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் பல டிசைன்களில் இட்லி தட்டுகளை தயாரிக்க உள்ளதாக அதிரடி அறிவிப்பையும் செய்துள்ளது.
சாக்லேட் இட்லி
எங்கும் சாக்லேட், எதிலும் சாக்லேட் இப்போது இட்லியிலும் சாக்லேட். ஆம், இட்லியின் புது சுவை இப்போது சாக்லேட்டில். பிரபல கோதுமை மாவு தயாரிப்பு நிறுவனம் சாக்லேட் இட்லி மாவை அறிமுகப்படுத்தியுள்ளது. சாக்கோ இட்லி என பெயரிடப்பட்டுள்ள இந்த புதுவகையான இட்லி குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
வறுத்த இட்லி
உருளைக் கிழங்கை எண்ணையில் பொரித்து, ஃப்ரைட் சிப்ஸ் போல இப்போது இட்லியையும் எண்ணையில் குளித்தெடுக்க வைத்து தயாரிக்கப்படுகிறது ஃப்ரைட் இட்லி. சில பல சுவைகளை கூட்டி இப்போது டெல்லியில் அதிகமாக விற்கப்படுகிறது.
இட்லி பாஸ்தா
பொதுவாக பாஸ்தா உணவு வகை இதாலிக்கு சொந்தமான உணவு வகை. நமக்கு இட்லி எப்படியோ, அப்படி இத்தாலியர்களுக்கு பாஸ்தா வாழ்வோடு கலந்த உணவு. இப்போது இட்லி பாஸ்தா என இரு வகைகளையும் இணைத்து ஒரு வகை உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பாஸ்தா இளைஞர்களை ஈர்த்து வருகிறது.
இட்லி பர்கர்
மெக் டொனால்ட்ஸ் உணவகத்தின் புகழ்ப்பெற்ற பர்கர் வகைகள். உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை அதிகம் ஈர்ப்பது பர்கர் வகைகள்தான். இப்போது பர்கரில் பன்களுக்கு பதிலாக இட்லியை வைத்து சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், வெளிநாட்டினர்.