'ஜாட்' ஆதரவு, குடும்ப நட்பு... உ.பி-யில் எழுச்சி பெறுமா சமாஜ்வாதி - ஆர்எல்டி கூட்டணி?
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்எல்டி) ஆகிய இரு கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், இந்தக் கூட்டணி ஏற்படுத்தக் கூடிய சாத்தியமான தாக்கம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
உத்தரப் பிரதேச தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கூட்டணி அமைக்கும் படலம் ஆரம்பித்துவிட்டன. உத்தரப் பிரதேசத்தில் தற்போது இருக்கும் முன்னணி அரசியல் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டன. ஒவ்வொரு கட்சிகளும், சிறிய கட்சிகளுடனும், அமைப்புகளுடனும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
முன்னணி எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியோ ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியுடன் தனது கூட்டணியை இறுதி செய்துள்ளது. இரு தினங்கள் முன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி லக்னோவில் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின் இரு தலைவர்களும் கூட்டணியை ட்விட்டர் வாயிலாக உறுதி செய்தனர். இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடு விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டணி எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி உத்தரப் பிரதேச அரசியலுக்கு ஒரு புதிய தலைமுறை அரசியல்வாதி ஆவார். முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரன்தான் ஜெயந்த் சவுத்ரி. இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜெயந்த் சவுத்ரி, தனது தந்தையும் முன்னாள் எம்பியுமான அஜித் சிங் இறந்தபின்பு கட்சியை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார்.
உத்தரப் பிரதேச இளைஞர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த கூடிய தலைவராக அறியப்படும் ஜெயந்த் சவுத்ரி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்தவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம், மற்ற கட்சிகளை விட ராஷ்ட்ரீய லோக் தளத்துக்கு மிக முக்கிய சோதனையாக மாறியிருக்கிறது.
இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே வலுவாக இருக்கும் ராஷ்ட்ரீய லோக் தளம், இப்பகுதி ஜாட் இன மக்கள் அதிகம் கலந்துகொண்டுள்ள விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. ஜாட் இனத்தைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரியும் விவசாய போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்டவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் முக்கியமான ஜாட் வாக்கு வங்கியைப் பெறுவதில் தற்போது முன்னிலை வகிக்கும் ஜெயந்த் சவுத்ரி, இந்தத் தேர்தலில் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் புதிய அவதாரம் எடுக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஜெயந்த் சவுத்ரியின் செல்வாக்கு மண்டலமாக உள்ள மேற்கு உத்தரப் பிரதேச பகுதிகள் பாஜக கடும் பின்னடைவை சந்திக்கும் என்று ஏற்கெனவே கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி ரத்து செய்தாலும், பாஜக மீதான அதிருப்தி குறைவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஜாட் இன மக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரே கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளம் இப்போது முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி உடன் கைகோத்துள்ளது தேர்தல் களத்தை மாற்றலாம்.
2013 முசாபர்நகர் வன்முறைக்குப் பிறகு பாஜக எழுச்சி காரணமாக ஜாட் இன மக்கள் பெருவாரியாக அக்கட்சிக்கு ஆதரவளித்து தொடங்க, ராஷ்ட்ரீய லோக் தளம் தனது அடித்தளத்தை இழந்தது. ஆனால், விவசாயிகளின் போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து புதிய உத்வேகத்தில் செயல்பட தொடங்கியது. குறிப்பாக, ஜெயந்த் சவுத்ரி தான் பங்கேற்கும் கூட்டங்களில் `பாஜகவின் வகுப்புவாத அரசியலை கட்டுப்படுத்த ராஷ்ட்ரீய லோக் தளத்தின் அரசியல் எழுச்சியே மாற்று மருந்தாக அமையும்' என்று முழங்கி வந்தார். ராஷ்ட்ரீய லோக் தளத்தை பொறுத்தவரை, அக்கட்சிக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் சோதனையாக அமைந்தது. என்றாலும் 22 இடங்களில் போட்டியிட்டு 10 சதவீத வாக்குகளைப் பெற்றதுடன், ஒரேயொரு தொகுதியை மட்டும் கைப்பற்றியது.
தற்போது சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைந்திருப்பதால் மீண்டும் வலுவாக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஆர்எல்டி கால்பதிக்கலாம். மேலும், இந்தக் கூட்டணி உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் ஜாட், இஸ்லாமிய மற்றும் யாதவ் மக்களுக்கு இடையேயான சமூகக் கூட்டணி ஏற்படும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. 2013 முசாபர்நகர் வன்முறைக்குப் பிறகு ஜாட், இஸ்லாமிய மக்களிடையே பிளவு இருந்து வருகிறது. இந்த மக்கள் ஒன்றுசேர்வதே குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியாக பார்க்கப்படும். மேலும், இந்தக் கூட்டணி பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஈர்க்கவும் அதிக வாய்ப்புண்டு எனச் சொல்லப்படுகிறது.
எப்போதும் பலமுனை தேர்தலாகவே உத்தரப் பிரதேச தேர்தல் அமையும். ஆனால், சமாஜ்வாதி - ராஷ்ட்ரீய லோக் தள கூட்டணியால் இந்த முறை உத்தரப் பிரதேசம் இருமுனை அல்லது மும்முனை தேர்தலை நோக்கி நகர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. பகுஜன் சமாஜ் ஏற்கெனவே தனித்துப் போட்டி என்பதை உறுதியாக அறிவித்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கடந்த முறை சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைத்திருந்தது; இந்தமுறையும் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. பிரியங்கா காந்தி தனித்துப் போட்டி என்பதை உறுதிபட தெரிவிக்கவில்லை என்பதே இதற்கான சான்று என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தற்போது ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணிக்கு முதல் ஆளாக முன் வந்துள்ளதால் வரவிருக்கும் காலங்களில் முன்னேற்றங்கள் இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.
மேலும் கடந்த சில தசாப்தங்களாக, உத்தரப் பிரதேச தேர்தல்களில் இரண்டு கட்சிகள் மட்டுமே சுமார் 50-55 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. இதுபோன்ற அரசியல் கணக்குகளும் இருமுனைப் போட்டியை வலியுறுத்துகின்றன.
குடும்ப நட்பு: கருத்தியல் ரீதியாகவும், குடும்பங்கள் ரீதியாகவும் மிகப்பெரிய பிணைப்பை கொண்டுள்ளனர் அகிலேஷ் - ஜெயந்த் சவுத்ரி இருவரும். ஜெயந்த் சவுத்ரியின் தாத்தாவான முன்னாள் பிரதமர் சரண் சிங் சமாஜ்வாதி கட்சியை தோற்றுவித்த முலாயம் சிங் யாதவின் வழிகாட்டியாக இருந்தவர். மேலும் 1970 சமயத்தில் உத்தரப் பிரதேசத்தில் வலுவாக இருந்த காங்கிரஸை வலுவிழக்க செய்ய ஜாட் மற்றும் யாதவ் போன்ற இடைநிலை சாதிகளை ஒன்றிணைத்தவர். இந்திரா காந்தியின் எதிர்ப்பாளர்களாக முலாயம் சிங்கும், சரண் சிங்கும் தங்களை காட்டிக்கொண்டனர். இவர்களை பின்பற்றி தற்போது அகிலேஷ் மற்றும் ஜெயந்த் இருவரும் பிரதமர் மோடியை கடந்த சில காலங்களாக எதிர்த்து வரும் நிலையில்தான் தற்போது இருவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். இவர்களின் கூட்டணி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- மலையரசு