ஐஐடிக்களில் அதிகரிக்கும் இடைநிற்றலுக்கு சாதிய பாகுபாடுதான் காரணமா? - ஒரு பார்வை

ஐஐடிக்களில் அதிகரிக்கும் இடைநிற்றலுக்கு சாதிய பாகுபாடுதான் காரணமா? - ஒரு பார்வை
ஐஐடிக்களில் அதிகரிக்கும் இடைநிற்றலுக்கு சாதிய பாகுபாடுதான் காரணமா? - ஒரு பார்வை

நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இடைநிற்றல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் குறித்து பார்ப்போம். 

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7 ஐ.ஐ.டி நிறுவனங்களிலிருந்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறிய மாணவர்களில் 63% பேர் இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என மத்திய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதில், ஏறத்தாழ 40% பேர் எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகிதமானது, சில ஐஐடி கல்வி நிறுவனங்களில் 72% ஆக உயர்ந்திருக்கிறது. ஐஐடி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தினர் மீதான பாகுபாடும், அழுத்தமும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதை இந்த தரவுகள் உணர்த்துகின்றன.

தேசிய அளவில் முதல் 10 இடங்களில் உள்ள ஐஐடி நிறுவனங்களில் 7 ஐஐடி நிறுவனங்களில் இந்த நிலை என்றால், ஐஐடி கவுஹாத்தியின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கவுஹாத்தி ஐஐடியில் படிப்பை பாதியில் நிறுத்திய 25% மாணவர்களில் 88% பேர் இடஒதுக்கீட்டு பிரிவைச் சேர்ந்தவர்கள். அதாவது ஐஐடியிலிருந்து வெளியேறிய நான்கில் மூன்று பங்கு எஸ்சி / எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள்.

ஆண்டுதோறும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் ஐஐடியிலிருந்து வெளியேறுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி ஐஐடியிலிருந்து வெளியேறிய 10 மாணவர்களில், அனைவரும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பது கசப்பான உண்மை. அதேபோல கரக்பூர் ஐஐடியை எடுத்துக்கொண்டால், அங்கு கடந்த 5 ஆண்டுகளில் 79 மாணவர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளனர். அதில் 60%-க்கும் அதிகமானோர் மாணவர்கள் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பாக பார்க்கும்போது, கடந்த 2016 முதல் 2020-ம் ஆண்டு காலக்கட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருப்பதாக மத்திய அரசின் தரவுகள் உணர்த்துகின்றன. இப்படியாக ஆண்டுக்கு ஆண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துக்கொண்டேயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு என்ன காரணம் என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ''வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும், அதனால் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அங்கு இடம்பெயர்ந்திருப்பார்கள்'' என தெரிவித்திருந்தார். ஆனால், அது உண்மையில்லை என்கிறார் ஐஐடி மாணவர் ஒருவர்.

இது குறித்து அவர் பேசுகையில், ''ஐஐடியை பொறுத்தவரை மற்ற கல்லூரிகளைப்போல அல்ல. உதாரணமாக 2 மணிநேரம் வகுப்பு நடக்கிறது என்றால், அதற்கு மாணவர்கள் 6 மணி நேரம் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படியில்லை என்றால், பேராசியர்கள் நடத்துவது ஒன்றுமே புரியாது. முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது எளிமையானது. இதை எதிர்கொள்வது அவருக்கு பெரிய அளவில் சிரமமாக இருக்காது. காரணம், அவர்கள் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன், கோச்சிங் சென்டர்கள் என தயாராகி வருவார்கள்.

ஆனால், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இது பெரிய சவால்தான். அவர்களுக்கு தங்களை தயார்படுத்துவதிலும், ஆங்கிலத்தை புரிந்துகொள்வதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கும். இரண்டையும் எதிர்கொள்வது ஆரம்பத்தில் சிரமம்தான். இதனுடன் மறைமுகமான சாதிய பாகுபாடும் சேர்ந்துவிடவே மாணவர்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அந்த வயதில் அவர்களுக்கு போதுமான பக்குவம் இருப்பதில்லை. சாதி ரீதியான பாகுபாட்டை பொறுத்தவரை அது வெளிப்படையாக இருக்காது.

நாம் பார்த்து பழகிய கலைக் கல்லூரி போல அல்ல ஐஐடிக்கள். ஆர்ட்ஸ் கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் ஒன்றாக இணைந்து ஒன்றாக சுற்றித் திரிவது வாடிக்கையாக இருக்கும். ஆனால், ஐஐடிக்களில் பெரும்பாலும், முன்னேறிய வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அவர்கள் சமூகம் சார்ந்தவர்களுடனே நெருக்கமாக இருப்பர். இதனால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தனித்துவிடப்படும் சூழல் நிலவும். பேராசிரியர்களும் அந்த இடைவெளியை கடைபிடிப்பது இளம் வயது மாணவர்களுக்கு கடும் மன அழுத்ததை பரிசாக்கிவிடுகிறது. சாதி ரீதியான ஒதுக்குதல் என்பது அங்கு நடக்கும் தொடர்கதைதான்.

பொதுவாகவே ஐஐடிக்களில் இருக்கும் பேராசிரியர்களில் 95% பேர் முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்கள்தான். ஆகவே, அவர்களும் தங்கள் வகுப்பை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிப்பர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தபட்ட மாணவர்கள் எப்போதும் இரண்டாம் தரம்தான். இட ஒதுக்கீடும் அங்கே முழுமையாக பின்பற்றுவதில்லை. இது அவர்களின் சமூகத்தை சேர்ந்தவர்கள் பேராசியர்களாக உருவெடுப்பதற்கு முக்கியமான ஆயுதம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லூரிகளைப்போல அல்ல, மத்திய அரசின் கல்லூரிகள். அங்கு ஒரு கட்டத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்க முடியாது. உதாரணமாக, மத ரீதியாக துன்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட ஃபாத்திமா லத்தீப் விவகாரத்தில் பேராசியர் சுதர்சன் மீதான நடவடிக்கையே சான்று'' என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com