மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் அமீபா; அரிய நோயால் பலியான கேரள சிறுவன்! விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

கேரளாவில் 15 வயது சிறுவன் ஒருவன், மூளையை உண்ணும் அமீபாவால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Naegleria fowleri
Naegleria fowleriFile Image

44 பெரிய ஆறுகள், குறுக்கும் நெடுக்குமாக ஓடும் பல கால்வாய்கள், எண்ணிக்கையில் அடங்காத குளங்கள், இன்னும் பல நீர்நிலைகள் என கேரளாவின் நீர்வளத்தை நாம் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இந்த நீர்நிலைகளில் எங்கோ பதுங்கியிருக்கும் மூளையை உண்ணும் அமீபா ஒன்று, ஆலப்புழாவைச் சேர்ந்த 15 வயது சிறுவனின் உயிரைப் பறித்துள்ளது.

நெக்லேரியா பவுலேரி என்ற அமீபா தான் குருதம் என்ற சிறுவனின் உயிரைப் பறித்துள்ளது என்ற செய்தியைக் கேட்டு அறிவியல் உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அந்தளவிற்கு இதன் தாக்குதல் கொடியதாக இருக்கிறது. ஒருமுறை தொற்று ஏற்பட்டு மூளை காய்ச்சல் வந்த பிறகு, நோயாளி உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், அரிதிலும் அரிதாகவே இந்த நோய் மனிதர்களை தாக்குகிறது.

Naegleria fowleri
Naegleria fowleri

ஆலப்புழாவில் உள்ள பன்னவேலியைச் சேர்ந்த குருதத்திற்கு, தன்னுடைய வீட்டின் அருகேயுள்ள கால்வாயில் குளிக்கும் போது தொற்று ஏற்பட்டுள்ளது. ஆலப்புழாவைச் சேர்ந்த அக்பர் என்பவரும் சில வருடங்களுக்கு முன்பு, இதேப்போன்ற தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அக்பரின் வீடு பள்ளத்துருதி என்ற ஊரில் உள்ளது. இங்குள்ள கால்வாயில் குளிக்கும் போதுதான் இவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு, கோழிக்கோடைச் சேர்ந்த மைக்கேலும் இதே போல் குளத்தில் குளித்து கொண்டிருந்த போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.

நெக்லேரியா பவுலேரி அமீபாவை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் எந்தவித தடுப்பு நடவடிக்கைகளும் நம்மிடம் இப்போதைக்கு இல்லை என மருத்துவர்கள் கவலை தெரிவிகின்றனர். இந்த அமீபா தொற்றால் மூளை காய்ச்சல் ஏற்பட்டு இறப்பவர்களின் விகிதம் 97 சதவிகிதமாக உள்ளது. எந்தளவிற்கு இது கொடியதாக இருக்கிறது என்பதை இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அமெரிக்காவில் இதுவரை இந்நோயால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

Naegleria fowleri
Naegleria fowleri

இந்நிலையில், விர்ஜினியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு அதிர்ச்சியை தருகிறது. மூளைக் காய்ச்சலால் இறந்த 16 ஆயிரம் பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்ததில், 5 பேர் நெக்லேரியா பவுலேரி அமீபாவால் உண்டாகும் மூளை காய்ச்சலினால் இறந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ஆனால் உடற்கூறாய்வு அறிக்கை வரும் வரை, இவர்கள் எதனால் இறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

இந்தியாவில் இந்நோயினால் இறந்த 10-வது நபர் அக்பர். தற்போது மைக்கேலும் குருதத்தும் இறந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றை கண்டுபிடிப்பதில் ஏற்படும் தாமதத்தால் ஆபத்து அதிகமாகிறது. பாக்டீரியாவை உண்டு உயிர் வாழும் ஒற்றை உயிரணுவான நெக்லேரியா, சூடான நீரில் இருப்பதையே விரும்புகிறது. நெக்லேரியாவின் ஒரே ஒரு இனமான நெக்லேரியா பவுலேரி மட்டுமே மனித மூளையை பாதிக்கிறது. சூடான நண்ணீரில் இவை உயிர் வாழ்கின்றன. குட்டநாடிலும் அதன் சுற்றுபுறத்திலும் நிறைய நீர்நிலைகள் உள்ளன. இந்த அமீபாக்கள் ஏன் இங்கு இருக்கின்றன என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே!

மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளத்தினால், கீழ்ப்பகுதிகளுக்கு இந்த அமீபாக்கள் வரவும் வாய்ப்புள்ளது. எங்கும் உயிர் வாழக்கூடிய இந்த நுண்ணுயிரியை நம்முடைய வெறும் கண்களால் பார்க்க முடியாது. மைக்ரோஸ்கோப் மூலமாக மட்டுமே இதை கண்டறிய முடியும். குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் இவை செழிப்பாக வளர்கின்றன. நல்லவேளையாக, இந்த நெக்லேரியா பவுலேரி கழிமுகத்திலோ அல்லது குளிர்ந்த நீரிலோ இருப்பதில்லை. ஆனால் இவை குழாய் நீரில் உயிர் வாழ்கின்றன. தண்ணீரின் சுவையோ, நிறமோ மாறாததால், இவை இருப்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. கோடை காலத்தில், குறிப்பாக வெப்பநிலை 46 டிகிரி செல்சியசை அடையும் போது இவை செழித்து வளர்கின்றன.

Naegleria fowleri
Naegleria fowleri

அறிகுறிகள்:

மூக்குத் துவாரத்தின் வழியாக நம் உடலுக்குள் செல்லும் அமீபா, நரம்புகள் வழியாக மூளையை சென்றடைகிறது. குளம் போன்ற நீர்நிலைகளில் அதிக நேரம் நீச்சலடித்து, தண்ணீருக்கு அடியில் இருந்தால், இவை தாக்கும் அபாயம் அதிகமுள்ளது. ஆழ் கடலில் நீச்சல் அடிப்பவர்களையும் இந்நோய் தாக்கியுள்ளது.

குழந்தைகளையும் இளைஞர்களையும் தான் நெக்லேரியா பவுலேரி அதிகமாக தாக்கியுள்ளது. இளைஞர்கள் அதிக நேரம் தண்ணீரில் நேரத்தைச் செலவழிப்பார்கள் என்பதால் தான் அவர்களை இந்நோய் அதிகமாக தாக்குகிறது என நாம் கருதலாம். ஆனால் இதன் உண்மையான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. ஒருமுறை நமது உடலில் நுழைந்த பிறகு, தொற்றின் வேகம் கூடுகிறது. மூளையை அடைந்ததும் பல்கிப்பெருகி அங்குள்ள செல்களை அழிக்கிறது. இவை பெரும்பாலும் வாசனை நரம்புகளில் இருக்கின்றன.

நோய் தொற்று ஏற்பட்ட ஐந்து நாட்களில் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்குகிறது. தலைவலி, காய்ச்சல், பசியின்மை, தொண்டை வலி, பிரமைகள் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கியதும், தொற்றின் வேகம் அதிகமாகி, ஐந்து அல்லது பத்து நாட்களில் நோயாளியை கொன்று விடுகிறது.

சிறியதாக இருந்தாலும் ஆபத்தானது!

மூளையை உண்ணும் இந்த அமீபா, முதன்முதலில் ஆஸ்திரேலியாவில் 1965-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவை 8 முதல் 15 மைக்ரோ செ.மீ. அளவு கொண்டது. இதற்கு தோதான சூழ்நிலைகளில் பல்கிப் பெருகுகின்றன. வழக்கமாக பாக்டீரியாக்களை உண்டு உயிர் வாழும் இவை, மனித மூளையை அடைந்ததும் செல்களை உண்ணத் தொடங்குகிறது.

Naegleria fowleri
Naegleria fowleri

மருத்துவ அறிவியலில் இவ்வுளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும், இந்த மூளை உண்ணும் அமீபாவிற்கு எதிரான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வேறு அமீபாக்களுக்கு எதிரான மருந்துகள் வெற்றிகரமாக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், இவை யாவும் மனித உடல்களை குணப்படுத்தும் அளவிற்கு இல்லை என்பதுதான் உண்மை. இதுவரை உலகத்தில் இரண்டு பேர் மட்டுமே சிகிச்சையில் பிழைத்துள்ளனர். அம்போடெர்சின் உள்பட பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர்கள் தற்போது பயன்படுத்துகின்றனர். எனினும் இந்த மருந்துகள் எந்தளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சில பரிசோதனைகள் நம்பிக்கை அளிக்கிறது. மேலும், இந்த அமீபாக்களுக்கு எதிராக நம் உடல் ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்வதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெக்லேரியா பவுலேரி வாழ்விடங்கள்:

* சூடான நண்ணீர், குளங்கள், ஆறுகள்

* சூடான நீர் ஊற்றுகள்

* அனல் மின் நிலைய மற்றும் தொழிற்சாலை கழிவுநீர்கள்

* சுத்தப்படுத்தாத தண்ணீர் விநியோக குழாய்கள்

* குழாய் தண்ணீர்

* வாட்டர் ஹீட்டர்

* நீர்நிலைகளின் அடியில் இருக்கும் மணல்கள்

Naegleria fowleri
Naegleria fowleri

நோய் கண்டறிவதில் ஏற்படும் தாமதம்

இது தொற்று நோயாகும். நீர்நிலைகளின் அடியில் இருக்கும் படிவுகளில் உள்ள நுண்ணுயிர்களை உண்டு உயிர் வாழ்வதால், பெரும்பாலும் தண்ணீருக்கு அடியில் ஆழத்தில் செல்பவர்களையே இது தாக்குகிறது. அமீபா பாதிக்கப்பட்ட நீரை உட்கொள்வதால் எந்த தொற்றும் ஏற்படாது. ஆனால் உங்கள் மூக்கின் வழியாக செல்லும் தண்ணீரினால் நோய்தொற்று உண்டாகிறது. நீச்சலடிப்பது, தண்ணீரின் அடி ஆழத்திற்குச் செல்வது, நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பது, மாசடைந்த நீரை பயன்படுத்தி சிகிச்சை செய்வது போன்றவைகளால் உங்கள் உடலுக்குள் அமீபா நுழைகிறது.

மூக்கு துவாரம் வழியாக குழாய் தண்ணீர் செல்வது ஆபத்தானது என்றாலும், ஷவரில் குளிப்பது பாதுகாப்பானது. மூக்கின் வழியாக மட்டுமே மனித உடலுக்குள் அமீபா செல்லும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எந்தவொரு நீர்நிலைகளிலும் ஆபத்துகள் பதுங்கியிருக்கலாம் என்பதை நமக்கு குருதத்தும் அக்பரும் நினைவூட்டுகிறார்கள். நீச்சல் குளங்களில் குளிக்கும் போது மூக்கில் க்ளிப் மாட்டிக்கொள்வது ஓரளவிற்கு பாதுகாப்பைத் தரும். மேலும், இந்த அமீபாக்கள் தண்ணீரில் இருப்பதை அத்தனை எளிதில் பரிசோதித்து கண்டுபிடிக்க முடியாது. இதற்கு பல வாரங்கள் கூட ஆகலாம்.

அமீபாவால் நமக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தொற்று முழுமையடையும் வரை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 75 சதவிகிதம் பேருக்கு முற்றிய நிலையில் தான் கண்டுபிடிக்க முடிந்தது. நம் உடலில் அமீபா இருக்கிறதா என்பதை விரைவாக தெரிந்துகொள்ளும் வகையில் எந்தவித சோதனையும் இப்போதைக்கு நம்மிடம் இல்லை.

Naegleria fowleri
Naegleria fowleri

நெக்லேரியா பவுலேரி போன்ற நுண்ணுயிர்கள் வளர்வதற்கு வானிலை மாற்றமும் ஒருவகையில் காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது.

இது சம்மந்தமாக எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வுகளும் இதுவரை நடத்தப்படவில்லை. இந்த அமீபா வெப்பம் நிறைந்த சூழ்நிலைகளில் தான் செழித்து வளரும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வானிலை மாற்றமும் உலக வெப்பமயமாதலும் நீர்நிலைகளின் வெப்பத்தை அதிகரிக்கின்றன. இதுபோன்ற அமீபா செழித்து வளர்வதற்கு தேவையான சூழ்நிலைகளை வானிலை மாற்றம் உருவாக்கிவிடுமோ என கவலையில் மூழ்கியுள்ளது அறிவியல் உலகம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com