கத்தாரின் அடையாளம் அல்ஜஸீரா: தோற்றமும், எழுச்சியும்..!

கத்தாரின் அடையாளம் அல்ஜஸீரா: தோற்றமும், எழுச்சியும்..!

கத்தாரின் அடையாளம் அல்ஜஸீரா: தோற்றமும், எழுச்சியும்..!
Published on

கத்தார் நெருக்கடிக்கு உடனடிக் காரணமாக அமைந்தது ஒரு ஊடகமென்றால், அதன் நீண்ட காலக் காரணமாக மற்றொரு ஊடகம் அமைந்திருக்கிறது.

அல்ஜஸீரா என்றால் அரபு மொழியில் தீவு என்று பொருள். அரேபிய தீபகற்பம் முழுமைக்குமான செய்தி ஊடகம் என்ற பொருளுடன் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அல்ஜஸீரா. பிபிசியின் அரபுமொழிப் பிரிவு மூடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதே இந்தத் தொலைக்காட்சியின் முதல் குறிக்கோளாக இருந்தது. 20 ஆண்டுகளில் உலகமெங்கும் பரந்து விரிந்திருப்பதுடன், பல மொழிகள், பல தளங்கள் என தன்னை வலுவாக்கிக் கொண்டிருக்கிறது. இப்போது உலகின் 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் இதன் செய்தி அலுவலகங்கள் மற்றும் அரங்கங்கள் இருக்கின்றன.

அரேபியத் தீபகற்பத்தில் அடக்கப்பட்டிருக்கும் மாறுபட்ட கருத்துகளை வெளிக் கொண்டுவருவதே தனது நோக்கம் என்ற அறிவிப்புடன் தொடங்கப்பட்டது இந்த ஊடகம். தொடங்கப்பட்டதில் இருந்தே ஆப்கானிஸ்தான் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த அல்ஜஸீரா, ஒரு காலத்தில் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களின் சார்பு ஊடகமாகவே அறியப்பட்டது. ஆப்கானிஸ்தான் போர் நடந்தபோது அதை முழுமையாகவும் விரிவாகவும் ஒளிபரப்பிய ஒரே ஊடகம் அல்ஜஸீரா மட்டுமே. பின்லேடன் உயிருடன் இருந்த காலத்தில் அவரது வீடியோக்கள் அல்ஜஸீரா தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பாகி வந்தன. ஹமாஸ், அல்கய்தா, தலிபான்கள் என பல அமைப்புகள் தங்களது கருத்துகளையும், அறிவிப்புகளையும் அல்ஜஸீரா மூலமாகவே வெளியிட்டு வந்தன.

கத்தாரின் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தத் தொலைக்காட்சி, அரசின் தலையீடு இல்லாமல் சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருப்பதாகவே தன்னை அறிவித்துக் கொள்கிறது. எனினும், இஸ்லாமிய சன்னி பிரிவுக்கு ஆதரவாகவும், ஷியா பிரிவுக்கு எதிராகவும் இதன் செய்திகள் இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கருத்துகளை பரப்புவதாகவும் அல்ஜஸீரா மீது குற்றச்சாட்டு உண்டு. ஆனால் அல்ஜஸீரா இதை அவ்வப்போது மறுத்திருக்கிறது.

ஈரானின் பார்வையையும், இஸ்ரேலின் பார்வையையும்கூட தாங்கள் ஒளிபரப்பி வருவதாக அல்ஜஸீரா கூறி வருகிறது. கத்தார் நாட்டின் அடையாளமாகவும் ஆன்மாகவாகவும் இந்தத் தொலைக்காட்சியை அந்நாட்டு அரசாங்கம் பார்க்கிறது. அதனாலேயே, இந்தத் தொலைக்காட்சியை மூடுவதற்கு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக முயற்சி செய்தபோதும் அதற்கு அடிபணிய கத்தார் மறுத்துவிட்டது. இப்போது இஸ்லாமிய நாடுகளுக்கெல்லாம் எதிரியாகக் கருதப்படும் இஸ்ரேலும் அல்ஜஸீராவை மூடுவதற்கு முடிவு செய்திருப்பதன் மூலம் அந்த ஊடகத்தின் எழுச்சியைப் புரிந்துகொள்ள முடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com