
கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு வீரருக்கு 35 வயது ஆகிவிட்டாலே, எப்போ 'ஜி' ரிட்டையர் ஆகப் போறீங்கனு? என ஊடகங்கள் வீரர்களை பேட்டியெடுத்து அவர்களை சோர்வாக்கும். சச்சின் டெண்டுல்கர் 40 வயதில் தன்னுடைய ஓய்வை அறிவித்தபோதே, அப்பாடா இப்போதாவது ரிட்டையர் ஆனாரே என பலரும் சொல்வார்கள். சச்சின் மட்டுமல்ல உலகின் பல தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்தக் கேள்வியை எதிர்கொள்வர். ஒரு வழியாக ரிட்டையர் ஆன பின்பு, ஓய்வு அல்லது தத்தமது கிரிக்கெட் வாரியங்களில் ஏதோ ஒரு பதவி, கிரிக்கெட் கோச், கிரிக்கெட் அகாதமி ஆரம்பிப்பது, டிவி வர்ணனையாளர் போன்ற வேலைகளில் ஈடுபட்டு இறுதிக் காலங்களை கழிப்பார்கள். அப்படியாக இருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு மறுவாழ்வு அளித்ததுதான் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல். டி20 போட்டிகள். ஐ.பி.எல். போட்டிகளின் தொடக்கத்தில் இளம் வீரர்களைவிட ரிட்டையர் ஆன மற்றும் வயதான வீரர்கள்தான் பட்டையை கிளப்பினார்கள். அவர்களில் சிலரை மீண்டும் பார்க்கலாம்.
ஆடம் கில்கிறிஸ்ட்
வாவ்.. கீப்பர்னா இவர்தான் என மகேந்திர சிங் தோனிக்கு முன்பு வரை உலக கிரிக்கெட் ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்த கிரிக்கெட் வீரர் ஒருவர் உண்டு என்றால் அவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆடம் கிலிகிறிஸ்ட்தான். கில்கிறிஸ்ட் 2008 ஆம் ஆண்டு அப்போதைய ஐதராபாத் அணியான டெக்கான் சார்ஜர்ஸின் கேப்டனாக பதவியேற்றார். முதல் ஐபிஎல்-லில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. ஆனால், அடுத்தாண்டு விஸ்வரூபம் எடுத்த கில்கிறிஸ்ட் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் இறுதி வரை சென்று டெக்கான் சார்ஜர்ஸ் அணியை கோப்பையை கைப்பற்ற வைத்தார். இந்தச் சாதனையை நிகழ்த்தியபோது, அவருக்கு 40 வயது. அதற்கடுத்த ஆண்டுகளில் கிங்ஸ் லெவன் பஞ்ஜாப் அணிக்காக விளையாடி, 41 ஆவது வயதில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெற்றார் ஆடம் கில்கிறிஸ்ட்.
ஷேன் வார்னே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்கத்தில் இருந்தே ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார், கிரிக்கெட் உலகின் சுழற்பந்து மாயாவி என அழைக்கப்பட்ட ஷேன் வார்னே. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்ற பின், ஐ.பி.எல்.லில் களமிறங்கி அதகளம் செய்தார் ஷேன் வார்னே. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் பயிற்சியாளராகவும் செயல்பட்டார் ஷேன் வார்னே. இதன் விளைவாக 2011 ஆம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் ஷேன் வார்னே. அந்தாண்டே தான் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார், அப்போது அவருக்கு வயது 41.
மேத்யூ ஹேடன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பக்கால தூணாக இருந்தவர் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன். ஆஜானுபாகுவான தோற்றம்
கொண்ட ஹேடனை பார்க்கவே பவுலர்களின் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும். 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை சென்னை
சூப்பர் கிங்ஸ்க்காக விளையாடிய ஹேடன் 32 போட்டிகளில் 1107 ரன்கள் குவித்ததோட, அவரின் சராசரி 36.9. ஹேடன் அப்போது சில ஓவர்கள் உயரம் குறைந்த பேட்டை அறிமுகம் செய்து அடித்து விளாசினார், அன் பெயர் "மங்கூஸ் பேட்". போட்டிங்களில் கடைசி வரை சிறப்பாக செயல்பட்ட ஹேடன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 ஆம் ஆண்டு, கோப்பையை கைப்பற்றியவுடன் ஓய்வுப் பெற்றார். ரன்களை கதறகதற அடித்து ஓய்வுப் பெற்றபோது மேத்யூ ஹேடனின் வயது 39.
முத்தையா முரளிதரன்
சர்வதேச கிரிக்கெட்டில் 1300 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழர்பந்தின் வித்தைக்காரன். சாதனை இலங்கைத் தமிழர் முத்தையா முரளிதரன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதன் பின் ஒரு ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காகவும், அதன் பின் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்காகவும் விளையாடினார். மொத்தம் 66 போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இறுதியாக 2014 ஆண்டில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெற்ற முரளிதரனுக்கு அப்போது வயது 42.
ப்ரவீண் டாம்பே
சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிக்காமலேயே ஐ.பி.எல். போட்டிகளில் புருவங்களை உயர்த்தியவர் ப்ரவீண் டாம்பே. 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் லெக் ஸ்பின்னராக களமிறங்கினார். அவர் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமானபோதே அவரின் வயது 41. அதன் பின் குஜராத் லயன்ஸ், மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகவும் விளையாடினார். உள்ளூர் போட்டிகளில் கூட விளையாடாத ப்ரவீண் டாம்பேவை, ராஜஸ்தான் ராயல்சின் அப்போதைய கேப்டன் ராகுல் திராவிட் அணிக்கு கொண்டு வந்தார். அதன் பின்பு பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ப்ரவீண் டாம்பே 33 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போத அவருக்கு வயது 46. இந்தாண்டு அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
பிராட் ஹோக்
ஆஸியின் சைனாமேன் ஸ்டைல் இடதுக்கை சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹோக். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு ஒய்வுப்பெற்றார். அதன் பின் 2012 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பிராட் ஹோக், அதன் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்காக விளையாடி அசத்தினார். 2016 ஆம் ஆண்டோடு ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வுப்பெற்ற பிராட் ஹோக் 21 போட்டிகளில் 23 விக்கெட் எடுத்து கலக்கினார். 2016 ஆம் ஆண்டோடு ஐ.பி.எல்-க்கு "குட் பை" சொன்ன பிராட் ஹோக்கின் வயது 44.