திரிபுரா தோல்வி எதிரொலி: மார்க்சிஸ்ட் கட்சியில் பற்றி எரியும் கூட்டணி விவாதம்

திரிபுரா தோல்வி எதிரொலி: மார்க்சிஸ்ட் கட்சியில் பற்றி எரியும் கூட்டணி விவாதம்
திரிபுரா தோல்வி எதிரொலி: மார்க்சிஸ்ட் கட்சியில் பற்றி எரியும் கூட்டணி விவாதம்

திரிபுரா சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்த தனது முடிவை மறுசீராய்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

மூன்று மாநில தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. திரிபுராவில் 25 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தூக்கி எறிந்துள்ளது. மேகாலயாவிலும் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு தொங்கு சட்டசபை அமையும் அளவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளது. நாகாலாந்து மாநிலத்தை பொறுத்தவரை தனது கூட்டணி ஆட்சியை சிறப்பாக தக்க வைத்துள்ளது. 

இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு பெரும் பின்னடை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். நாட்டின் மிகப்பெரிய தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி தற்போது சொற்பான மாநிலங்களிலே ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் வசம் இருக்கும் கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வரவுள்ளது. வெற்றி கோட்டையை நாளுக்கு நாள் விரிவாக்கம் செய்து கொண்டே வரும் பாஜக தற்போது கர்நாடகாவை குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. திரிபுரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை அடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உடனான கூட்டணி குறித்த விவாதம் தற்போது எழுந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 20ஐ எட்டியுள்ளதால் கூட்டணி அமைக்க வேண்டிய நிலைக்கு இரு கட்சிகளும் தள்ளுப்பட்டுள்ளது. 

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை வீழ்த்த, மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்ற குரல் எதிர்கட்சிகளால் நாட்டில் எழுப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பிராந்திய கட்சிகளும் இந்த முழக்கத்தை எழுப்பி வருகின்றனர். 

இதேபோன்ற ஒரு விவாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் கடந்த ஒரு ஆண்டாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.  
கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஜனவரி மாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் ‘கூட்டணி’ உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வரைவுத் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிராக அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தலைமையிலான அணியினர் மற்றொரு தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது. இருப்பினும், ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில், மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பான இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் கட்சி மேலும் நீர்த்துப் போகும் என்றும், கொள்கை அளவில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது என்பதையும் பிரகாஷ் காரத் தரப்பினர் சுட்டுக் காட்டினர். மார்க்சிஸ்ட் கட்சியை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்ற கருத்தும் அவர் சார்பில் அப்போது முன் வைக்கப்பட்டது. 

ஆனால், திரிபுரா தேர்தல் முடிவுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை யோசிக்க வைத்துள்ளது. திரிபுரா, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநிலங்களில் வலுவாக இருந்த அந்தக் கட்சி தற்போது கேரளாவில் மட்டும் ஆட்சியில் மிஞ்சியுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நிலையில், மிகப்பெரிய வலுவான தேசிய கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. ஆனால், இன்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஒன்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற வியூகத்தை இடதுசாரிகள் எடுக்க வேண்டும், அல்லது வேறுவொரு மாற்று வழியை விரைவில் அந்தக் கட்சி கண்டறிய வேண்டும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், “இடதுசாரிகள் இது மாற்றத்திற்கான நேரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக அதிகாரத்திற்கு வந்துகொண்டே இருக்கிறது. இது சாதாரண அதிகாரத்திற்கான மாற்றம் என்று கருத முடியாது. பாஜக ஆர்.எஸ்.எஸ் கூட்டை முறியடிக்க புதிய வியூகத்தை அமைக்க வேண்டும். அதனால் தான், பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார். 

இருப்பினும், திரிபுரா தேர்தல் தோல்வி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், “திரிபுராவில் இடதுசாரிகளை தவிர பாஜக எதிர்ப்பு சக்திகள் வேறு எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 36 இல் இருந்து 2 ஆக சரிந்துள்ளது. எங்களுக்கு 46 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் பாஜகவுக்கு தாவிவிட்டனர்” என்று தெரிவித்தார். இது முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக பார்க்கப்படுகிறது. அதாவது மார்க்சிஸ்ட் கட்சியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு நேரடியாக உள்ளது என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். இதனால் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அதேபோல், திரிபுரா தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளும் பிரகாஷ் காரத்திற்கு ஆதரவாக இருந்த தலைவர்களும் தற்போதையை நிலையை புரிந்து கொண்டு வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைய முன் வைக்க தொடங்கியுள்ளனர். ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாநாடு வரை இந்த இழுபறி இருக்கத்தான் செய்யும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com