ஆப்பிரிக்க கெளுத்தி மீன்... புற்றுநோய் அபாயம்!- முழு தகவலுடன் எச்சரிக்கும் அரசு மருத்துவர்

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்... புற்றுநோய் அபாயம்!- முழு தகவலுடன் எச்சரிக்கும் அரசு மருத்துவர்
ஆப்பிரிக்க கெளுத்தி மீன்... புற்றுநோய் அபாயம்!- முழு தகவலுடன் எச்சரிக்கும் அரசு மருத்துவர்

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் மத்திய, மாநில அரசுகளால் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை உண்டால் புற்றுநோய், உடல் உபாதைகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது என எச்சரிக்கிறார் அரசு பொதுநல மருத்துவரான ஃபரூக் அப்துல்லா.

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் ஏன் ஆபத்தானவை? எதற்காக அவை தடை செய்யப்பட்டன? இந்த மீன்களை உண்டால் என்ன ஆகும்? - இதுகுறித்து விரிவாக விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

''தமிழகம், கேரளம் முதலான மாநிலங்களில் இந்த வகை மீன்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. ஆனால் இவை இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டு விட்டன. ஆப்பிரிக்க கெளுத்தி மீனின் விலங்கியல் பெயர் ‘Clarias Gariepinus ஆகும். இந்த வகை மீன்கள் ‘ஏலியன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை உள்ளூர் நீர்நிலைகளில் கலந்து நதிகள், குளம் குட்டைகளில் வியாபித்து தற்போது நமது மாநிலத்தில் இருக்கும் உள்ளூர் மீன் வகைகளை கொன்றொழித்து விடுகின்றன.  

இந்த வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள், தான் வாழ்வதற்காக பிற மீன்களை கொன்று திண்ணும் தன்மை கொண்டவை. மேலும் மீன்கள் கிடைக்காவிட்டால், பாசி போன்ற நீர்நிலைகளில் இருக்கும் தாவரங்களை உண்டும் பிழைக்கும். எனவே இவை carnivorous மற்றும் omnivorous ஆக மாறும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன

பல நேரங்களில் தன் இனத்தையே வேட்டையாடி உண்ணும் முறையையும் கடைபிடிக்கின்றன. இதுபோன்று தான் வாழ பிற மீன்களையும் தன் இன மீன்களையும் கொல்லும் மீன்கள் நமது நீர்நிலைகளில் இல்லை.

அடுத்து, இவ்வகை கெளுத்தி மீன் ஒரு சீசனுக்கு நான்கு லட்சம் முட்டைகள் போடும். ஆனால், நம் நீர்நிலைகளில் உள்ள கெளுத்தி வெறும் 7,000 முதல் 15,000 முட்டைகளை மட்டுமே போடுகின்றன. மேலும், இவ்வகை மீன்கள் குறைவான ஆழத்தில் சேற்றில் கூட வளரும் தன்மை கொண்டவை. ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும் தண்ணீரில் கூட பல நாள்கள் உயிர் வாழும். வறண்டு போன நிலத்தில் கூட காற்றைக் குடித்து உயிர் வாழும் தன்மை கொண்டது. சாக்கடையில் கூட வாழும் தன்மை இதற்கு உண்டு.

இத்தகைய பல அசாதாரண விஷயங்கள் இதற்கு இருப்பதால் இயற்கையாகவே பிற வகை மீன்களை கொன்றொழித்து இவை மட்டும் அதிகம் வளர்ந்து நமது நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும். தற்போது கேரளா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் வண்டிப் பெரியார் அணையில் இந்த வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன.

இது நமது நீர்நிலைகளில் உள்ள மீன்களை அழித்து, இன்னும் சில ஆண்டுகளில் நமது உள்ளூர் நீர் நிலையில் கிடைக்கும் மீன்களின் வரத்தை முற்றிலுமாக ஒழித்துவிடும். இது ஒருபுறம் இருக்க, இந்த வகை மீன்கள் தண்ணீரில் இருக்கும் உலோகங்களை தன்னகத்தே சேமித்து வைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. தண்ணீர், உலோகங்களால் மாசுபடுவதை அறிவதற்காக இந்த வகை மீன்கள்தான் பரிசோதனை விலங்குகளாக உபயோகிக்கப்படுகின்றன.

பொதுவாக நமது நாட்டில் நீர்நிலைகளின் மாசுத்தன்மை நாம் அறிந்ததே. அவற்றில் பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகின்றன என்பதும் அறிந்தவையே. எனவே, இவ்வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள் மிக அதிகமான அளவில் அபாயகரமான அளவில் இருக்கின்றன. இவற்றை உண்ணும் நமக்கு உலோகங்கள் ரத்தத்தில் சேர்ந்து அதனால் புற்றுநோய் / உடல் உபாதைகள் உருவாகும் ஆபத்து அதிகமாகிறது.

இனி ரத்தத்தில் உலோகங்கள் அதிகமாக இருக்கும் நோயர்களைக் கண்டால் இந்த வகை மீன்களை உண்பார்களா என்று கேட்க வேண்டும். இத்தனை ரிஸ்க்குகள் இருக்கும் இந்த வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை 'சீக்கிரம் வளர்கிறது; நல்ல விலைக்கு விற்கிறது' என்ற காரணத்திற்காக மக்கள் குட்டைகளில் வளர்க்கிறார்கள். இது தவறானது.

மேலும், இந்த வகை மீன்களை விற்பதும் வாங்குவதும் நமது ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் செயலாக அமையலாம். வேறு மீன்கள் ஏதும் இல்லாமல், இந்த வகை மீன்கள் மட்டும்தான் ஓர் இடத்தில் கிடைக்கின்றன என்றால், புரதச்சத்து எடுக்கும் நோக்கில் இவற்றை நன்றாக அவித்து உண்பது இவற்றில் இருக்கும் உலோகங்களை பெரும்பான்மை நீக்கி விடுகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன’’ என்கிறார் ஃபரூக் அப்துல்லா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com