'என்னை கொல்லப்போகும் தலிபான்களுக்காக காத்திருக்கிறேன்' - ஆப்கனின் முதல் பெண் மேயர் கண்ணீர்
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டு பெண்களின் நிலை கேள்விக்குறியாகி இருக்கும் வேளையில், முதல் பெண் மேயர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் வர்தக் மாகாணத்தின் முதல் பெண் மற்றும் இளம் வயது மேயர் என்ற பெருமைக்குரியவர் ஜரிஃபா கஃபாரி என்ற 27 வயது பெண். கடந்த 2018-ல் இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிராக இருக்கும் தலிபான்கள் மேயர் ஆன ஜரிஃபாவை பகிரங்கமாக எச்சரித்து கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். இதையடுத்து, பல முறை ஜரிஃபாவை கொலை செய்ய முயற்சி செய்தனர் தலிபான்கள். அவரை கொலை செய்ய நடந்த மூன்றாவது முயற்சி தோல்வி அடைந்த 20 நாளில் அவரின் தந்தை ஜெனரல் அப்துல் வாசி கஃபாரி, தலிபான்களால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்தது, கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி.
இதன்பின் சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய தலிபான்கள் நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர். தலிபான்கள் ஆட்சியால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார் ஜரிஃபா கஃபாரி.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், ''நான் இங்கு தலிபான்களின் வருகைக்காக காத்திருக்கிறேன். எனக்கோ அல்லது எனது குடும்பத்துக்கோ உதவதற்கு தற்போது யாரும் இல்லை. என்னை போன்றவர்களை தலிபான்கள் தேடி வந்து கொலை செய்வார்கள். இந்த தருணத்தில் எனது குடும்பத்தை தனியாக விட்டு செல்ல முடியாது. அப்படியே செல்வதாக இருந்தாலும் எங்கே செல்வது. இப்போது எனது கணவருடன் நான் இங்குதான் அமர்ந்துள்ளேன்" என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கப் படை விலகும் முன் சில வாரங்களுக்கு முன்பு ஒரு சர்வதேச நாளிதழுக்கு பேசிய ஜரிஃபா கஃபாரி, ''ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று பேசினார். இதன்பின்னான சில வாரங்களில் தலிபான்கள் மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியபோது காபூலில் பயங்கரவாத தாக்குதல்களில் காயமடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் பொறுப்பை கவனித்து வந்தார் ஜரிஃபா கஃபாரி.
தலிபான்கள் தாக்குதலின்போது ஓர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ''தற்போது ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை இளைஞர்கள் அறிவார்கள். அவர்களிடம் சமூக ஊடகங்கள் உள்ளன. அதன்மூலம் அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள். இளைஞர்கள் தங்களின் முன்னேற்றத்துக்காகவும் எங்கள் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று பேசியிருந்தார். தற்போது உதவியற்றவராக நிற்கும் வாழ்க்கை மற்றும் தன் குடும்பத்தின் பாதுகாப்பில் கவலை கொண்டுள்ளார்.
இதனிடையே, பொறுப்புக்கு வந்துள்ள தலிபான்கள் அதிபர் அஷ்ரப் கானி தலைமையிலான முந்தைய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதுடன், ஊழியர்களை பழிவாங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். ஆனால் தலிபான்களின் பழைய வரலாறு காரணமாக இந்த வாக்குறுதியை நம்புவது கடினமாக இருக்கிறது.
கடந்த ஆட்சி காலத்தில் தலிபான்கள் பெண்களுக்கான கல்வி தடை செய்ததுடன், பெண்கள் வேலை செல்வது உள்ளிட்டவற்றுக்கு தடை விதித்தனர். இதனை மீறும் பெண்களுக்கு கடும் தண்டனைகளை வழங்கினர். மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்களை கண்டு அச்சத்தில் உள்ளனர் அந்நாட்டு பெண்கள்.