'அதிகாரப் பகிர்வு திட்டம்' - தலிபான்கள் முன்னேற்றத்தை தடுக்க ஆப்கன் அரசு புதிய முடிவு

'அதிகாரப் பகிர்வு திட்டம்' - தலிபான்கள் முன்னேற்றத்தை தடுக்க ஆப்கன் அரசு புதிய முடிவு
'அதிகாரப் பகிர்வு திட்டம்' - தலிபான்கள் முன்னேற்றத்தை தடுக்க ஆப்கன் அரசு புதிய முடிவு

தொடர்ந்து முன்னேறி வரும் தலிபான் இயக்கத்தினருக்கு நிர்வாக அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் முடிவுக்கு ஆப்கானிஸ்தான் அரசு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேற உள்ள நிலையில் அங்குள்ள அரசுப் படைகளுக்கும் தலிபான் பழமைவாத இயக்கத்தினருக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. அரசுப் படையினரை வீழ்த்தி ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சில நாட்கள் முன் மாகாண தலைநகரமான ஷெபர்கன் நகரை தங்கள் தலிபான்கள் கைப்பற்றினர். 

தொடர்ந்து தலிபான்களை கட்டுப்படுத்துவதில் ஆப்கன் ராணுவத்தினர் திணறி வருகின்றனர். ராணுவத்தைச் சேர்ந்த பல வீரர்கள் உயிர் பயத்தில் தலிபான்களிடம் சரண்டராகி வருவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக ஆப்கன் அதிபர், சில நாட்கள் முன் ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து பேசினார். எனினும் தலிபான்கள் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் இருக்கின்றனர்.

இந்தநிலையில் அவர்களை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலை விடுத்து அமைதி ஏற்படுத்தும் நோக்கில் அதிகார பகிர்வு திட்டத்தை முன்வைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அரசு. நகரங்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறும், அதற்கு பதிலாக அரசு நிர்வாகத்தில் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது என்றும் அந்த நாட்டின் செய்தி சேனல் 1 டிவி செய்தி வெளியிட்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி இருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் 34 மாகாண தலைநகரங்களில் நான்கில் ஒரு பகுதியை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். மேலும், இப்போது காபூலில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆப்கானிய நகரமான கஜ்னி-யை தலிபான்கள் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. காபூல்-கந்தஹார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகரம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக பார்க்கப்படுகிறது. தலிபான் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள 10வது மாகாண தலைநகரம் இதுவாகும். அதுவும், அமெரிக்க படைகள் வெளியேறி வரும் ஒரு வாரத்துக்குள் தலிபான்கள் இதனை தங்கள் பிடியில் கொண்டுவந்துள்ளதால் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.

தலிபான்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக கஜ்னி மாகாண சபையின் தலைவர் நசீர் அஹ்மத் ஃபகிரி, " நகரத்தின் முக்கிய பகுதிகளான ஆளுநர் அலுவலகம், காவல் தலைமையகம் மற்றும் சிறைச்சாலைகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்" என்று தகவல் வெளியிட்டு இருக்கிறார். இதையடுத்தே ஆப்கானிஸ்தான் அரசு அதிகார பகிர்வு திட்டத்தை அறிவித்து அமைதியை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com