"எங்கள் அழகிய நாட்டை காக்க குரல் கொடுங்கள்!" - ஆப்கன் சினிமா இயக்குநரின் உருக்கமான கடிதம்

"எங்கள் அழகிய நாட்டை காக்க குரல் கொடுங்கள்!" - ஆப்கன் சினிமா இயக்குநரின் உருக்கமான கடிதம்

"எங்கள் அழகிய நாட்டை காக்க குரல் கொடுங்கள்!" - ஆப்கன் சினிமா இயக்குநரின் உருக்கமான கடிதம்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் சஹ்ரா கரிமி, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக எழுதியுள்ள இந்தக் கடிதம் தற்போது சினிமா சமூகத்தினர் மத்தியில் கவனம் பெற்றுவருகிறது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சினிமா இயக்குநரான சஹ்ரா கரிமி மற்ற நாடுகளின் சக திரைப் படைப்பாளிகள் சமூகத்துக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். பொதுவெளியில் ஆப்கனில் நிலவும் நிலையை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ள கடிதத்தில், "உடைந்த இதயத்துடனும் தலிபான்களிடமிருந்து எங்களது அழகிய நாட்டை காப்பாற்ற நீங்கள் எங்களுடன் சேருவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடனும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தலிபான்கள் எங்கள் மக்களை கொன்று குவித்தவர்கள். பல குழந்தைகளை கடத்தியவர்கள். ஆடையின் பெயரில் ஒரு பெண்ணை கொன்றவர்கள்.

இதுமட்டுமல்ல, எங்கள் மக்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரை சித்ரவதை செய்து கொன்றது அவர்கள்தான். அரசாங்கத்துடன் தொடர்பு வைத்திருந்தவர்களை இரக்கமில்லாமல் கொன்றனர். எங்களில் சிலரை பொது இடங்களில் தூக்கிலிட்டனர். தலிபான்களால்தான் எங்கள் நாட்டின் மில்லியன் கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தனர். இப்போதும் இதே நிலைதான். பல மாகாணங்களில் இருந்து தப்பியோடிய குடும்பங்கள் தற்போது காபூலில் உள்ள முகாம்களில் உள்ளன. அங்கு மக்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர்.

முகாம்களில் குழந்தைகளுக்கு பால் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதன்காரணமாக குழந்தைகள் சுறுசுறுப்பு அற்று இறந்து வருகின்றனர். இது ஒரு மனிதாபிமான நெருக்கடி. இந்த நெருக்கடியிலும் இந்த உலகம் அமைதியாக இருக்கிறது. இந்த அமைதிக்கு நாங்கள் மட்டுமே பலியாகிவிட்டோம். இது நியாயமில்லை என்று மட்டும் எங்களுக்குத் தெரியும். அதேநேரம், இந்த அமைதிக்கு நாங்கள் பழகிவிட்டோம். இந்த இக்கட்டான தருணத்தில் எங்கள் மக்களை விட்டு விலகும் இந்த முடிவு தவறு என்று எங்களுக்குத் தெரியும்.

இந்த நேரத்தில் எங்களுக்கு உங்கள் குரல் தேவை. என் நாட்டில் ஒரு திரைப்பட இயக்குநராக இதுவரை நான் கடினமாக உழைத்தவை அனைத்தும் சரிய வாய்ப்பியிருக்கிறது. தலிபான்கள் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் அவர்களால் சினிமா உள்ளிட்ட கலை தடை செய்யப்படும். மேலும் நான் உட்பட மற்ற கலைஞர்களும் அவர்களால் குறிவைக்கப்படுவோம். பெண்களின் உரிமைகளில் கைவைப்பார்கள். தலிபான்கள் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிய சில வாரங்களில் மட்டும் பல பள்ளிக்கூடங்களை அழித்துள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை பூஜ்யமாகும்.

எனவே எங்களின் நிலையை திரைப்பட சமூகத்தைச் சேர்ந்த நீங்கள் தயவுசெய்து ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களைப் பற்றி உங்கள் சமூக ஊடகங்களில் எழுதுங்கள். ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு பெண்கள், குழந்தைகள், கலைஞர்கள் சார்பாக இந்த தருணத்தில் உங்களின் ஆதரவுக்கரம் எங்களுக்குத் தேவை. இதுதான் இப்போது எங்களுக்கு தேவையான மிகப்பெரிய உதவி. தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்கு முன்பு எங்களுக்கு உதவுங்கள்" என்று உருக்கமாக கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்தக் கடிதம் வெளியிட்ட சில மணிநேரங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார் இயக்குநர் சஹ்ரா. ``தலிபான்கள் நகரத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். நாங்கள் தப்பி ஓடுகிறோம். எல்லோரும் பயப்படுகிறார்கள்" என்று மூச்சு விடாமல் அந்த வீடியோவில் பேசியிருந்தார். ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றி ஆட்சி நடவடிக்கையில் தலிபான்கள் இறங்கியிருக்கும் நிலையில் அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் வெளியேற தொடங்கியிருக்கிறார்கள். மேலும் அங்கிருந்து வெளியாகும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. இதனிடையேதான், இயக்குநர் சஹ்ரா கரிமி தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக எழுதியுள்ள இந்த கடிதம் தற்போது திரைப்பட சமூகத்தினர் மத்தியில் பரபரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com