இங்கிலாந்தை அலறவிடும் இந்தியா... லீட்ஸ் மைதான 'சம்பவங்கள்' - ஓர் ஆடுகள ஃப்ளாஷ்பேக்

இங்கிலாந்தை அலறவிடும் இந்தியா... லீட்ஸ் மைதான 'சம்பவங்கள்' - ஓர் ஆடுகள ஃப்ளாஷ்பேக்
இங்கிலாந்தை அலறவிடும் இந்தியா... லீட்ஸ் மைதான 'சம்பவங்கள்' - ஓர் ஆடுகள ஃப்ளாஷ்பேக்

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரைவிடவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது இந்தியா - இங்கிலாந்து அணிகளை இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர். நாட்டிங்கம்மில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும் கடைசி நாளில் பெய்த மழை ஆட்டத்தை டிராவில் முடிக்க வைத்தது. இதனையடுத்து லார்ட்ஸில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் சமபலமாக மோதின. ஆனால் கடைசி நாளில் இந்திய அணி வீரர்களின் ஆக்ரோஷத்தை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து தோல்வியடைந்தது. இந்தியாவும் அசத்தலான வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் 1986 மற்றும் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவே வெற்றிப் பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் 19 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடவில்லை. மேலும் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், 1979-இல் நடைபெற்ற இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. அதன்பின்பு நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்த மைதானத்தில் இந்தியா தோல்வியடையவில்லை.

இங்கிலாந்தின் ஹெட்டிங்லி லீட்ஸ் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 5 முக்கிய டெஸ்ட் போட்டிகள் குறித்து சற்றே பின்னோக்கி பார்க்கலாம். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா அப்போது மிகப்பெரிய அணி இல்லை. ஆனால் அப்போதே இங்கிலாந்துக்கு கடுமையான சவாலாக விளங்கியது. முதலில் பேட் செய்த இந்தியா 293 ரன்கள் எடுத்தது. அதில் விஜய் மஞ்சரேக்கர் 133 ரன்களும், கேப்டன் விஜய் ஹசாரே 89 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து 334 ரன்களை தன்னுடைய முதல் இன்னிங்ஸில் எடுத்தது. ஆனால் இந்தியா 2 ஆவது இன்னிங்ஸில் 165 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் 128 என்ற எளிதான இலக்கை சேஸ் செய்து இங்கிலாந்து வென்றது.

1959-இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் இந்தியா சிறப்பான அணி கிடையாது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 161 ரன்களில் ஆல் அவுட்டானது, இந்தியாவின் பாலி உம்ரிகர் அதிகபட்சமாக 29 ரன்களை சேர்த்தார். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை 483 ரன்களுக்கு டிக்ளெர் செய்தது. இங்கிலாந்து பேட்ஸ்மேன் கோலின் கவ்ட்ரே 160 ரன்களை விளாசினார். இந்தியா இரண்டாவது இன்னிங்ஸிலாவது சிறப்பாக விளையாடும் என நினைத்தால் 149 ரன்களுக்கு பேட்ஸ்மேன்கள் சுருண்டனர். இதன் காரணமாக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 173 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபாரமாக வெற்றிப் பெற்றது.

1967-இல் பட்டோடி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதல் இன்னிங்ஸில் 550 ரன்களை குவித்து டிக்ளெர் செய்தது இங்கிலாந்து. ஜெப்ரி பாய்காட் ஆட்டமிழக்காமல் 246 ரன்களை சேர்த்தார். இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 164 ரன்களை மட்டுமே சேர்த்து பரிதாபமாக ஆட்டமிழந்தது. ஆனால் பாலோ ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸை அசுரத்தனமாக விளையாடிய இந்தியா 510 ரன்களை எடுத்தது. கேப்டன் பட்டோடி 148 ரன்களும், பரூக் இன்ஜினியர் 87, அஜித் வடேகர் 91 ரன்களும் விளாசினர். ஆனாலும் இங்கிலாந்துக்கு 125 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்ததால் இந்தியா தோல்வியடைந்தது.

1979-இல் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின் பெரும்பாலான நாள்கள் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இயான் போத்தம் சதமடித்தார். இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. ஆனால் தொடர் மழையால் ஆட்டம் டிராவானாது மட்டுமல்லாமல் ஹெட்டிங்லி லீட்ஸில் இந்தியா பெற்ற தோல்வியும் முடிவுக்கு வந்தது என்றுதான் கூற வேண்டும். அதன் பின்பு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இம்மைதானத்தில் வெற்றிப்பெற தொடங்கியது.

1986-இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அபாரமான திறமையை வெளிப்படுத்தியது இந்தியா. முதல் இன்னிங்ஸில் 272 ரன்களை எடுத்த இந்தியா, 102 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கி அதிர்ச்சியளித்தது. இந்தியாவின் ரோஜர் பின்னி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் திலீப் வெங்சர்கார் 102 ரன்களை எடுத்தார். இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 279 ரன்கள் கொடுக்கப்பட்டு, அந்த அணியை 128 ரன்னில் சுருட்டியது இந்தியா. இதுதான் லீட்ஸ் மைதானத்தில் இந்தியா பெற்ற முதல் வெற்றி.

2002-இல் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி சத்ததால் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 628 ரன்களை எடுத்து டிக்ளெர் செய்தது. இங்கிலாந்தோ 273 மற்றும் 309 ரன்களுக்கும் பரிதாபமாக ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்களில் வெற்றிப்பெற்றது. மேலும், முதல் முறையாக ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்று சாதனைப் படைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com