”வேதா இல்லத்தை தீபா, தீபக் மனமுவந்து எங்களிடமே ஒப்படைக்கவேண்டும்” - செல்லூர் ராஜு பேட்டி

”வேதா இல்லத்தை தீபா, தீபக் மனமுவந்து எங்களிடமே ஒப்படைக்கவேண்டும்” - செல்லூர் ராஜு பேட்டி
”வேதா இல்லத்தை தீபா, தீபக் மனமுவந்து எங்களிடமே ஒப்படைக்கவேண்டும்” - செல்லூர் ராஜு பேட்டி

”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது” என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா, தீபக்கிடம் போயஸ்கார்டன் வேதா இல்லம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ’நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ என்று அதிமுக கூறியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை தொடர்புகொண்டு பேசினோம்,

வேதா இல்லம் தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

”நாங்கள் உட்பட அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் அம்மா வாழ்ந்த வேதா இல்லத்தை ஒரு கோவிலாகவே நினைத்து வணங்கி வருகின்றோம். அம்மா இறுதிவரை வாழ்ந்த இடம். அங்கு இருக்கும் ஒவ்வொரு செங்கல்லும் ஒவ்வொரு அமைப்பும் அம்மா பார்த்துப் பார்த்துக் கட்டியது. நாங்கள் அம்மா இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பதாக நினைப்பது வேதா இல்லத்தைத்தான். எப்படி புரட்சித் தலைவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தை நினைவில்லமாகக் கருதி மக்கள் பூஜிக்கிறார்களோ, அப்படித்தான், உலகம் முழுக்க இருக்கின்ற அம்மாவுடைய தொண்டர்கள், அம்மாவின் நலம் விரும்பிகள் அம்மா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். மாண்புமிகு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து எங்கள் தலைமை மேல் முறையீடு செய்யவுள்ளது. அதேசமயம், நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களைக் காட்டிலும் உறவுமுறையில் அம்மாவின் ரத்த சொந்தமாக இருக்கும் சகோதரி தீபாவும் சகோதரர் தீபக்கும் மனமுவந்து ’அம்மா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்க நாங்கள் பரிபூரணமாக ஒத்துழைக்கிறோம்’ என்று சொல்லவேண்டும். அதுதான், எங்கள் ஆசை. எனது ஆசையும் கூட. மற்றபடி அம்மாவின் சொத்துக்களும் உரிமைகளும் அவர்களுக்கு கிடைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை”.

ஆனால், அதிமுக வேதா இல்லத்தை வைத்து அரசியல் செய்கிறது... அவரின் பொருட்கள் எதுவும் இல்லை என்று தீபா குற்றம் சாட்டியிருக்க்கிறாரே?

”இந்த டாப்பிக்கிற்குள் நான் போக விரும்பவில்லை. அம்மாவின் பொருட்கள் இருக்கிறது இல்லை என்பதெல்லாம் தேவையற்றது. அம்மா பெண் இனத்தின் மாபெரும் தலைவி: பெண் சிங்கம். உலகமே போற்றப்பட்ட இரும்புப் பெண்மணி. அப்படிப்பட்ட அம்மா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்கினால் உலகம் முழுக்க இருக்கும் அம்மாவின் தொண்டர்கள் சென்னைக்கு வரும்போது அம்மா வாழ்ந்த இல்லத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். வேதா இல்லம் காலத்திற்கும் போற்றி பாதுகாக்கப்படவேண்டிய இடம். அதனால், தீபா... தீபக் அந்த இல்லத்தை எங்களிடம் ஒப்படைத்தால் எதிர்காலம் அவர்களை வாழ்த்தி, அவர்களின் செயலுக்கு பாராட்டுத் தெரிவிக்கும். எதிர்கால வரலாற்றிலும் தீபா, தீபக் இடம்பிடிப்பார்கள். அதுமட்டுமல்ல, தமிழன் இருக்கும்வரை தமிழ் மண் இருக்கும்வரை... எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அம்மா நினைவிடத்துக்கு வருகின்ற ஒவ்வொருவரும் தீபா, தீபக்கை பாராட்டுவார்கள்”.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com