”மதுரை எனக்கு தாய்வீடு; சென்னை புகுந்தவீடு” - ஆர்.பி உதயகுமார் சிறப்புப் பகிர்வு

”மதுரை எனக்கு தாய்வீடு; சென்னை புகுந்தவீடு” - ஆர்.பி உதயகுமார் சிறப்புப் பகிர்வு

”மதுரை எனக்கு தாய்வீடு; சென்னை புகுந்தவீடு” - ஆர்.பி உதயகுமார் சிறப்புப் பகிர்வு

”சென்னைக்கு பலரும் பணி நிமித்தமாகத்தான் வருகிறார்கள். சுற்றுலாவுக்கென்று வருவதில்லை. அதில், என்னுடைய பங்களிப்பு அரசியல் ரீதியிலானது. சென்னை வந்தால்தான் அம்மாவைப் பார்க்க முடியும். அம்மாவைப் பார்ப்பது என்பது கடவுளைப் பார்ப்பது போன்றது. அதுவே, எங்களுக்குப் மிகப்பெரிய வரப்பிரசாதம். அதனால், அம்மாவைப் பார்க்க வைத்த சென்னை எனக்கு எப்போதும் பிடிக்கும்” என்று நெகிழ்கிறார், முன்னாள் அமைச்சரான ஆர்.பி உதயகுமார். 382 வது சென்னை தினத்தையொட்டி ஆர்.பி உதயகுமாரிடம் பேசினோம்,

    “எனது சிறு வயதில் தந்தையுடன் பலமுறை சென்னை வந்திருக்கிறேன். ஆனால், நினைவு தெரிந்து வந்தது என்றால், தியாகராஜர் கல்லூரியில் முதலமாண்டு படிக்கும்போது நாட்டு நலப்பணித் திட்டத்திற்காக புனேவுக்குச் செல்ல சென்னை வந்ததுதான். சென்னையின் போக்குவரத்து, மக்களின் வேகம், உயர்ந்த கட்டடங்கள் பார்த்து பிரமித்தேன். பூனேவில், நடந்த அந்தப் பரேடில் நான் செலெக்ட்டும் ஆகி, மகிழ்ச்சியுடன் சென்னையைக் கடந்து மதுரை திரும்பினேன்.

மூன்றாம் ஆண்டுப் படிக்கும்போது சிறந்த நாட்டு நலப்பணித் திட்டதிற்காக மாநில அரசு விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை வந்தேன். அப்போது, திமுக ஆட்சி. கல்வித்துறை அமைச்சராக அன்பழகன்தான் விருது கொடுத்தார். அதன்பிறகு, வழக்கறிஞர் படிப்பை மதுரை சட்டக்கல்லூரியில் முடித்துவிட்டு என்ட்ரோல்மெண்ட்க்காக சென்னைக்கு வந்து கோட்டெல்லாம் போட்டு பெருமையுடன் பதிவு செய்து வாழ்க்கையில் மறக்கவே முடியாதது. இப்படி, எப்போதாவது சென்னை வந்த நான், அரசியல் பணிகளால்தான் நிரந்தரமாக வந்து குடியேறினேன்.

மதுரையில் மூன்று வருடம் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்புக்குப்பின்பு மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் பொறுப்பை அம்மா  வழங்கவே சென்னைக்கு அடிக்கடி வரும் சூழல் உருவானது.  ஆர்பாட்டங்கள் செய்வது, கட்சிப் பணிகளாற்றுவது என்று சென்னையில் தொடர்ந்து தங்கத்தொடங்கினேன்.  ஆனால், இங்கு தங்கிய பிறகுதான் எனது தலையில் முடி எல்லாம் கொட்டியது. விடுதியின் உப்புத்தண்ணீர் எனக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. அதுக்கு, முன்னாடி என் பழையப் புகைப்படங்களைப் பார்த்தால் தலை முழுக்க முடி இருக்கும். சென்னையாலேயே என் முடி எல்லாம் கொட்ட ஆரம்பித்தது. மதுரையில் தண்ணீர் சுகாதாரமான முறையில் இருக்கும். இதனை, கவலையில் சொல்லவில்லை. சென்னையில் மாற்றங்கள் ஏற்பட்டது என்பதற்காகச் சொல்கிறேன்” என்பவரிடம், “சென்னையில் உங்களுக்குப் பிடித்த இடம் எது?" என்று கேட்டோம்,  

   “2011  ஆம் ஆண்டு முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராதிலிருந்து எம்.எல்.ஏ விடுதியில்தான் தங்கி இருக்கிறேன். அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் அரசு பங்களாவில் தங்கவில்லை. எனக்கு வயது 47 ஆகிறது. 20 வருடங்களுக்கும் மேலாக சென்னையில் இருக்கிறேன். எல்லா கலாச்சார மக்களும் இங்கு வேறுபாடில்லாமல் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். லட்சக்கணக்கான மக்களுக்கு சென்னை உணவும் நீரும் கொடுக்கிறது.

கிராமத்தில் இந்தத் தெருவில் அந்த சாதி இருக்காங்க.. அந்த சாதிக்காரங்க இருக்காங்கன்னு சொல்லிடுவாங்க. இதுவே, சென்னையில் அப்படி வேறுபாடு பார்க்க முடியாது. அவரவர், பொருளாதார நிலைக்கு ஏற்ப வீடுகளில் வசிக்கிறார்கள். இவ்ளோ நெருக்கடியான சூழலிலும் அமைதியான தலைநகரம் இது. மதுரை எனக்கு தாய்வீடு என்றால், சென்னை எனக்கு புகுந்தவீடு. ரெண்டு வீட்டின் மீதும் விருப்ப பேதங்கள் இல்லை. சென்னை பரப்பரப்பாகவும் இயந்திரத்தனமாகவும் இருந்தாலும் என் வளர்ச்சியில் சென்னை தவிர்க்க முடியாதது” என்பவர் சென்னையில் அடிக்கடி செல்லும் இடத்தையும் பகிர்ந்துகொள்கிறார்.

“சென்னையில் அடிக்கடி செல்லும் இடம் புரட்சித் தலைவர் மற்றும் அம்மா நினைவிடங்களுக்குத்தான். அதற்கு அடுத்தப்படியாக பார்த்த சாரதி பெருமாள் கோயிலுக்குச் செல்வேன். சென்னையில் பொழுதுபோக்குக்கு நிறைய அம்சங்கள் உள்ளன. எனக்கு பெரிதாக ஈடுபாடு கிடையாது. நிறைய புத்தகங்கள் படிப்பேன்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com