”தென்னரசு மட்டும்தான் வேட்பாளரா?”-ஈபிஎஸின் விறுவிறு மூவும்.. ஓபிஎஸ் தரப்பின் கொந்தளிப்பும்

”தென்னரசு மட்டும்தான் வேட்பாளரா?”-ஈபிஎஸின் விறுவிறு மூவும்.. ஓபிஎஸ் தரப்பின் கொந்தளிப்பும்
”தென்னரசு மட்டும்தான் வேட்பாளரா?”-ஈபிஎஸின் விறுவிறு மூவும்.. ஓபிஎஸ் தரப்பின் கொந்தளிப்பும்

”முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு யார் வேட்பாளர் என்று தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அவைத்தலைவருக்கு உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்ய உள்ளோம்” என ஓபிஎஸ் தரப்பின் மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மரணமடைந்த நிலையில், அந்த தொகுதிக்கு வரும் 27.02.2023 அன்று தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்!

இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக்கூறி வருகின்றனர். அதிமுகவின் தலைமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு அணிகளும் போட்டியிடத் தயாராக இருப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஓ.பன்னீர்செல்வம், செந்தில்முருகன் என்பவரை தங்கள் தரப்பு வேட்பாளராக அறிவித்திருந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டுமென இபிஎஸ் தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ஹ்ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இடைத் தேர்தலில் போட்டியிட இரு தரப்பும் விரும்புவதால், கட்சியின் அவைத் தலைவர், பொதுக்குழுவைக் கூட்டி பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து அந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினால், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யட்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இரட்டை இலை சின்னமும் ஓபிஎஸ் அறிக்கையும்!

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டிருந்த பன்னீர்செல்வம், ’அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற தன்னுடைய பொறுப்பு, நீடிப்பதற்கு எந்த தடையையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விதிக்கவில்லை’ என கூறியுள்ளார். அதே நேரத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் பழனிசாமியை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும் தன்னுடைய தொண்டர்களும் பாடுபடுவோம் என அவர் கூறியிருந்தார்.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தென்னரசுவை அதிமுக வேட்பாளராக நியமிக்க ஒப்புதல்கோரி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அக்கட்சி அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் படிவம் அனுப்பியிருந்தார்.

வேட்பாளரும்.. தமிழ்மகன் உசேன் அனுப்பிய ஒப்புதல் படிவமும்!

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு மூலம் முடிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் படிவம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ’தென்னரசு அவர்களை அதிமுக வேட்பாளராக நிறுத்த சம்மதிக்க என் வாக்கை செலுத்துகிறேன்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அவைத்தலைவர் அறிவிக்கும் அதிமுக வேட்பாளரை அங்கீகரித்து பொதுக்குழு நிறைவேற்றும் தீர்மானத்தை தாங்கள் ஆதரிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இச்சுற்றறிக்கை வெளியானது. இதில் ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட செந்தில்முருகனின் பெயர் இடம்பெறாததால் ஓபிஎஸ் தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிவிட்டார்கள்!

அப்போது பேசிய மனோஜ் பாண்டியன், ”அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார் யார் வேட்பாளர்களாக இருக்கின்றனர் என தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதிமுக சார்பில் ஏற்கனவே செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் பெயரை குறிப்பிடாமல், வேட்புமனு தாக்கல் செய்யாத தென்னரசு பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

இது நடுநிலை காரியம் மட்டும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதுதான். வேறு வேட்பாளரை முன் நிறுத்துவது குறித்து எந்த ஒரு வாய்ப்பும் வழங்கவில்லை. முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு யார் வேட்பாளர் என்று தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அவைத்தலைவருக்கு உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்ய உள்ளோம்” என்றார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ”பொதுக்குழு உறுப்பினர்களிடம் மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக கையொப்பம் போட்டு தந்தால் மட்டுமே கடிதத்தை தருவோம் என சொல்கிறார்கள். தபால் மூலம் வாக்கு செலுத்தி அனுப்புகிறோம் என தராமல் செல்கின்றனர் என தொடர்ச்சியாக எங்களுக்கு குற்றச்சாட்டு வருகிறது.

சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம்!

இதுபோன்ற சம்பவம் எப்போதும் நடைபெற்றது இல்லை. ஒரே ஒரு வேட்பாளரை மட்டுமே அறிவித்து நீதிமன்றத்திற்கு எதிராக செயல்பட்டு உள்ளனர். இதற்கு நாங்கள் உடன்பட மாட்டோம். இதற்கு எதிராக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்றார்.

ஓபிஎஸ் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு, ”ஒரு சிலர் அவர் திமுக ஆதரவு என கூறுகின்றனர். ஒரு சிலர் பாஜக ஆதரவு என கூறுகின்றனர். பார்க்கின்ற நபர்களின் பார்வைக்கோளாறு அது” என்றார்.

நீதிக்கு புறம்பானது!

இதனையடுத்து ஓபிஎஸ், “இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயல்!” என்று ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com