எம்.ஜி.ஆர் தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை - அதிமுகவின் 50 ஆண்டுகால பயணம்!

எம்.ஜி.ஆர் தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை - அதிமுகவின் 50 ஆண்டுகால பயணம்!
எம்.ஜி.ஆர் தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை - அதிமுகவின் 50 ஆண்டுகால பயணம்!

50 வயதைத் தொடும் அ.தி.மு.க. அதில் சரிபாதி ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. இப்போது எதிர்க்கட்சியாக பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்தக் கட்சி கடந்து வந்த பாதையைக் கால வரிசைப்படி பார்ப்போம்.

தமிழ் திரையுலகில் அநீதி கண்டு பொங்குகிற இளைஞராக, எளியமக்கள் விரும்பும் கதாநாயகனாக, புரட்சிக்காரராக தோன்றிய எம்ஜிஆர், தனது திரைப்படங்களில் திராவிடக்கொள்கைகளை முழங்கினார். 1953 ல் அவர் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவில் எம்ஜிஆர் இணைந்தார்.

1967 சட்டப்பேரவைத் தேர்தலில் பரங்கிமலைத்தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கி வெற்றிபெற்றார் எம்ஜிஆர். 1969 ல் அண்ணா மறைவுக்குப்பிறகு கருணாநிதி முதலமைச்சரானார். 1971ல் நடந்த தேர்தலில் மு.கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்த திமுக பெரும் வெற்றிபெற்று மீண்டும் கருணாநிதி முதலமைச்சரானார். அதன்பிறகு கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் இடைவெளி அதிகரித்தது.

1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம்தேதி திருக்கழுக்குன்றத்திலும், ஆயிரம் விளக்கிலும் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆர் கேட்ட கணக்கு அவர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட காரணமாக அமைந்தது. விரிசலை அதிகரிக்கும் விதமான நடவடிக்கைகள் தொடர, 1972 அக்டோபர் 10 ஆம்தேதி அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பிறகு எம்ஜிஆர், முரசொலிமாறன், ஆகியோர் சமாதானப்பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த சூழலில், 1972 அக்டோபர் 14 ஆம்தேதி எம்ஜிஆர் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 17 ஆம்தேதி அனகாபுத்துர் ராமலிங்கம் என்ற ரசிகர் பதிவு செய்திருந்த அதிமுக என்ற கட்சியில் இணைந்தார் எம்ஜிஆர். அந்த கட்சிதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமானது.

1973 மே மாதம் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மாயத்தேவரை நிறுத்தி வெற்றி கண்டார் எம்ஜிஆர். 1977 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 144 இடங்களில் வென்ற அதிமுக மட்டும் 130 இடங்களைக் கைப்பற்றியது. எம்ஜிஆர் முதல்முறையாக தமிழகத்தின் முதலமைச்சரானார். 1980 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக, காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டு 37 இடங்களை வென்ற நிலையில், தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடந்தத் தேர்தலில் எம்ஜிஆரே வெற்றி பெற்று 2 ஆவது முறையாக முதலமைச்சரானார்.

1982 ஆம் ஆண்டு அதிமுகவில் ஜெயலலிதா இணைந்து கொள்கை பரப்புச்செயலாளர் ஆனார். சத்துணவுத்திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு, பின்னர், மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு எம்ஜிஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார். அதே ஆண்டின் டிசம்பரில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தேர்தலில், ஜெயலலிதாவின் பிரசாரம் அதிமுகவுக்கு பெரும் பலமாக அமைந்தது. அ.தி.மு.க. வெற்றி என்ற தேர்தல் முடிவுகள் டிசம்பர் இறுதியில் வந்தாலும், 1985 பிப்ரவரி மாதம் 10 ம்தேதி எம்ஜிஆர் முதலமைச்சராக பதவியேற்றார்.

1987 டிசம்பர் 24 ஆம்தேதி எம்ஜிஆர் காலமானார். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்தஜெயலலிதா,வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனஅதிமுக 2 ஆக பிளவுபட 1989 தேர்தலில் திமுக வெற்றிபெற்று 13 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியை பிடித்தது. தோல்வியை அடுத்து, ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்க, 27 தொகுதிகளை வென்ற ஜெயலலிதாவின் தலைமைக்குள் கட்சி வந்தது.

ஜெயலலிதா தலைமையில் 1991 ஆம் ஆண்டு அ.திமு.க ஆட்சிக் கட்டிலேறியது. 1995ல் நடந்த வளர்ப்பு மகன் திருமணம், அதனைத்தொடர்ந்த சர்ச்சைகள், வழக்குகள், 1996 தேர்தலில் எதிரொலிக்க அதிமுக தோல்வியடைந்தது. அதன் பின்னர் , 2001 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றநிலையில், ஊழல் வழக்குகளில் வந்த தீர்ப்புகளால் ஜெயலலிதா முதலமைச்சராக நீடிக்கமுடியாத சமயத்தில், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக சிலமாதங்கள் பதவி வகித்தார்.

2006 தேர்தலில் ஆட்சியை இழந்த அதிமுக, 2011 ல் வெற்றிபெற்றது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியும் இன்றி அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 2016 சட்டமன்றத்தேர்தலில் தொடர்ந்து 2 ஆவது முறையாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.2016 செப்டம்பர் 22 ஆம்தேதி இரவு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 72 நாட்கள் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம்தேதி மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்குப்பின் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தநிலையில்,. 2017 பிப்ரவரி 5 ஆம்தேதி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஓபிஎஸ், பிப்ரவரி 7 ஆம்தேதி ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தத்தை தொடங்கினார்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்துறையீடு வழக்கில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தநிலையில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கைகோர்க்க, சசிகலா உள்ளிட்டோர் கட்சியிலிருக்கு ஒதுக்கப்பட்டனர்.

தண்டனைக்காலம் முடிந்து சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தபோது அவரது வருகை பெரிதாக எதிர்பார்க்கப்பட்டநிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஓபன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில், 2021 சட்டமன்றத்தேர்தலை அதிமுக எதிர்கொண்டநிலையில், திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார். இச்சூழலில், இந்த ஆண்டு அக்டோபர் 17 ல் பொன்விழா ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது அதிமுக.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com