ஸ்ரீதேவியின் மரணமும்... சர்ச்சையும்.. சமூகத்தின் பார்வையும்

ஸ்ரீதேவியின் மரணமும்... சர்ச்சையும்.. சமூகத்தின் பார்வையும்
ஸ்ரீதேவியின் மரணமும்... சர்ச்சையும்.. சமூகத்தின் பார்வையும்

இந்த டி.வி.காரங்களுக்கு வேற செய்தியே இல்லையா..

ஸ்ரீதேவி செத்ததுதான் இப்ப முக்கியமா ? என்று அங்கலாய்த்துக் கொண்டே அந்த செய்தியை லட்சக்கணக்கில் பார்த்துத் தீர்த்த நண்பர்களுக்கு வணக்கம்.

அதே நாட்களில் ஒளிபரப்பப்பட்ட வடமாநிலங்களில் இறந்து போகும் தமிழக மாணவர்கள் பிரச்னை, நீட், சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்ட விவகாரம், எரியும் சிரியா போன்றவற்றை பார்த்த சில ஆயிரம் பேருக்கும், வணக்கம். அது ஏன் திரைத்துறையினருக்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வியில் உள்ள அறம் சார்ந்த கோபம் நியாயமானது. அதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. ஆனால், அதே சமயம் திரையுலகைச் சேர்ந்த மூத்த நடிகர்கள், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், உள்ளிட்டோரின் மரணம் குறித்த செய்திகளின் போது சிலருக்கு வராத கோபம் ஸ்ரீதேவி மரணச் செய்தியின் மீது மட்டும் வருகிறது  எனும் போது அவர்களுடைய சமூகப் பார்வையைத் தாண்டி ஸ்ரீதேவி ஒரு பெண் என்பதும், அவர் கதாநாயகியாக  நடித்தவர் என்பதுமே காரணம்.

ஒரு கதாநாயகியைக் கொண்டாடுவது  ஒழுக்கமற்ற செயல்  என்பது போன்ற பொதுப்புத்தியின் வெளிப்பாடும் இதில் அடங்கியிருக்கிறது. இன்னும் சில விமர்சனங்கள் அவர் மது அருந்தியிருந்தாராமே என்று வருகிறது. நாம் இன்றளவும் கொண்டாடும் கவிஞர்.கண்ணதாசன் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். அந்த காரணத்திற்காகவே அவரை வெறுப்பவர்கள் இங்கு யாரும் இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமெனில் அதை சிலாகித்துக்  கொண்டாடும் மனநிலையை நாம் பார்க்கிறோம். திரையுலக உச்ச நட்சத்திரக் கதாநாயகன் மது அருந்தும் பழக்கத்தை மிகச் சில ஆண்டுகளாகத்தானே நிறுத்தியுள்ளார்.

அவர் மது அருந்துபவர் என்று அறிந்தேதானே அவரைக் கொண்டாடினீர்கள். மிகச் சமீபத்தில் மரணமடைந்த பாடலாசிரியரை நேசிக்காதவர்கள் யார் உண்டு. அவரின் மரணத்திற்கான காரணிகளில் மதுவுக்கும் பங்குண்டு என்ற விமர்னங்களையும் தாண்டி அவரின் கவிதைகளுக்காகவே மட்டும் அவரைக் கொண்டாடத் தெரிந்த நமக்கு ஏன் ஒரு நடிகையை மட்டும் அவரது நடிப்பிற்காக மட்டும் கொண்டாடத் தெரிவதில்லை.  

உள்ளபடியே சொல்லுங்கள் நீங்கள் வெறுப்பது மதுப்பழக்கத்தையா அல்லது ஸ்ரீதேவியின் நடிப்பையா? ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் டாஸ்மாக் விற்பனைக்கு இடைதான் நாம்  இதுபோன்ற வாதங்களை வைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்குநர் உலக அளவில் புகழ் பெற்றால் அவரைக் கொண்டாடும் நாம், ஒரு இசையமைப்பாளர் புகழ் பெற்றால் அவரைக் கொண்டாடும் நாம் ஒரு நடிகை புகழ் பெற்றால் மட்டும் ஏற்றுக் கொள்ள மறுப்பது போல் செயல்படுவது ஏன் ? நடிகை என்றதுமே அவர்கள் மீது ஒழுக்கம் சார்ந்து விமர்சனங்களை வீசி எறியும் நாம், என்றாவது  அதுபோன்ற ஒழுக்கக் குறைபாடு என்று பொதுவெளியில் கருதும் செயல்களை ஒரு பெண் மட்டுமே தனித்துச் செய்ய இயலாது என்பதைப் புரிந்திருக்கிறோமா ? ஒழுக்கக் குறைபாட்டிற்காகவே ஒரு நடிகையை, ஒரு பெண்ணை நாங்கள் வெறுக்கிறோம் என்று சொல்பவர்கள், என்றாவது அதே பார்வையோடு நடிகர்களையும் ஆண்களையும் பார்த்ததுண்டா?

 பெண்கள் பலரை வசீகரிக்கும் தன்மை ஒரு ஆணுக்கு இருக்கிறது எனில் அதைத் திறமையாகக் கொண்டாடும் மனநிலையும்,  ஆண்கள் பலரை வசீகரிக்கும் தன்மை ஒரு பெண்ணிடம் இருக்கிறதெனில் அதை ஒழுக்கக் குறைபாடாகவும் பார்க்கும் மனநிலையில் இருந்து எப்போது மீளப்போகிறோம். இந்த மனநிலைதான் நிர்பயா ஏன் நள்ளிரவில் வெளியில் வர வேண்டும் என்ற கேள்வியை வைத்தது. திரைத்துறையினருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ஊடகங்கள் குறைத்துக்  கொள்ளலாமே  என்று வைக்கப்படும் வாதங்கள் முற்றிலும் புறந்தள்ளி விடக்கூடியவை அல்ல. அதே சமயம் திரைத்துறையிலேயே நடிகைகளை ஒரு விதமாகவும் இன்னப் பிற கலைஞர்களை ஒரு விதமாகவும் பார்க்கும் பார்வையை மாற்றிக் கொள்வோம்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com