பாஜகவில் வரிசை கட்டும் சினிமா பிரபலங்கள்.. எடுபடுமா இந்த அரசியல் கணக்கு?
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்து வரும் சில மாதங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, கட்சித்தாவல், வார்த்தைப்போர், சீட்டுபிரச்னை, தேர்தல் அறிக்கை, பிரசாரம், தேர்தல், தேர்தல் முடிவு, பதவியேற்பு என பரபரவென இருக்கப் போகிறது. அதிமுக தன்னுடைய முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அவரை ஏற்றுக்கொள்பவர்கள் தான் கூட்டணியில் இருக்க முடியும் என்ற நங்கூரத்தையும் நச்சென இறக்கி வைத்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் கேபி.முனுசாமி. முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்வதில் வார்த்தைகளால் குழப்பி வந்த பாஜக பின்னர் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தெளிவுபடுத்தியுள்ளது.
இப்படியான அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தேர்தலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த முறை எப்படியாவது எம்.எல்.ஏக்களை பாஜக சார்பில் சட்டமன்றத்திற்கு அனுப்பிவிட வேண்டுமென தமிழக பாஜக மும்மரமாக இருக்கிறது. தலைவர் எல்.முருகனும் நிச்சயம் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பார்கள் என கூறிக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு இன்று பாஜகவில் சேர்ந்துள்ளார். நாட்டிற்கு எது நல்லது என தெரிந்துகொண்டதால் பாஜகவில் இணைந்துள்ளேன் என குஷ்பு தெரிவித்துள்ளார். குஷ்பு பாஜகவில் இணைந்ததை வரவேற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த நடிகை நமீதா, ’East or West, BJP is the best’ என தெரிவித்துள்ளார். குஷ்பு உடன் சேர்த்து தமிழக பாஜகவில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் இணைந்த வண்ணம் உள்ளனர்.
குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம், ராதாரவி,நெப்போலியன், கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, குட்டி பத்மினி, எஸ்வி சேகர், மதுவந்தி, பொன்னம்பலம், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் தினா, தயாரிப்பாளர் நடராஜன், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் என இந்த பட்டியல் நீள்கிறது. திரையுலகின் பெரிய பட்டாளமே பாஜக பக்கம் தற்போது இருக்கிறது. இந்த திரையுலக பட்டாளத்தால் எதிர்வரும் தேர்தலில் பாஜகவில் என்ன மாற்றம் ஏற்படும்? பிரசாரத்தில் என்ன நடக்கும், நடிகர்களை காண வரும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா? என பல கேள்விகள் முன் நின்றாலும் பிரபலமானவர்களை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வது என்பது தேசிய கட்சியான பாஜகவின் வழக்கமான ஒரு அரசியல் காய் நகர்த்தல் தான்.
மக்களுக்கு தெரிந்த முகமொன்று கட்சியில் சேர்வது கட்சிக்கு பலம் என மனதார நம்புகிறது பாஜக. மக்கள் மத்தியில் பேசப்பட்ட போலீஸ் அதிகாரி அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். பாஜகவின் ஸ்ருதிராணி ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர் தான். கிரிக்கெட் வீரர் காம்பீர் இன்று எம்பியாக இருக்கிறார். ஏன், சமீபத்தில் ஹரியானா தேர்தலில் டிட் டாக் பிரபலம் ஒருவருக்கு எம் எல் ஏ சீட் கொடுத்து தேர்தலில் நிறுத்தியது பாஜக.
தெரிந்த முகம் என்பதால் மக்களிடத்தில் கட்சியும் போய்ச்சேரும் என்பது பாஜகவின் வாக்கு கணக்காக இருக்கிறது. ஆனால் மக்கள் அப்படி ஏற்றுக்கொள்வார்களா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. நடிகரின் பிரசாரம் என்றால் கூடுபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று அர்த்தமில்லை என்பதை தமிழக அரசியல் கண்டிருக்கிறது. இப்படி இருக்க, எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு ஆட்களை இணைத்து பலம் சேர்க்கும் தமிழக பாஜகவின் முயற்சி எந்த அளவுக்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.