"உரக்கச் சொல்; உன் உரிமை சொல்” - கவிதைகளாலும் சிந்தனையை தூண்டிய நடிகர் விவேக்! நினைவுநாள் பதிவு

நடிகர் விவேக்கின் நினைவலைகளும், நெத்தியடி கருத்துகளும் என்றென்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா குடிகொண்டிருக்கின்றன. அவரது கருத்துகள் மட்டுமல்ல, அவர் எழுதிய கவிதைகளும் நெஞ்சம் நிறைந்திருக்கின்றன.
நடிகர் விவேக்
நடிகர் விவேக்file image

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை நடிகர்களில் விவேக்கும் ஒருவர். ’சின்ன கலைவாணர்’ என அழைக்கப்பட்ட அவர், மாரடைப்பால் உயிரிழந்து இன்றுடன், இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. நடிகர் விவேக் இந்த மண், இசை, இலக்கியம், இயற்கை, நீர்நிலை, கலை, பாரம்பரியம், பண்பாடு, தமிழ் என அனைத்தையும் நேசித்தவர். அதனால்தான் அவர், ‘ஜனங்களின் கலைஞர்’ ஆகவும் திகழ்ந்தார். அதை, தம் திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் பதியவைத்தார். நடிப்பால், சமூக அக்கறையுள்ள பல கருத்துகளை அதில் விதைத்தார்.

குறிப்பாக மாணவர்கள் சமுதாயத்தைப் பார்த்து, ”அரிவாளும், பட்டாக்கத்தியும் எடுத்து திரிபவர்கள் எல்லாம் மாணவர்கள் கிடையாது. கடும்வெயிலும் சுற்றுச்சூழலுக்காக மரக்கன்றுகளை நடுவதற்கு கடப்பாரை பிடிப்பவர்கள்தான் உண்மையான மாணவர்கள்” என்றார். அதுபோல் குழந்தைகளின் வளர்ப்பு குறித்து பெற்றோர்களுக்கு அறிவுரை கூறிய அவர், “குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தியிருந்தார்.

Actor vivek
Actor vivek

அதில், ”பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள்” என்றவர், ”எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்'களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்file image

தவிர, ’இன்றைய குழந்தைகள் தெருவில் விளையாட வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர், ”தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ, இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்” என்றார்.

இப்படி அவரது நினைவலைகளும், நெத்தியடி கருத்துகளும் என்றென்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா குடிகொண்டிருக்கின்றன. அவரது கருத்துகள் மட்டுமல்ல, அவர் எழுதிய கவிதைகளும் நெஞ்சம் நிறைந்திருக்கின்றன. நல்ல நடிகர் மட்டுமல்லாது, சிறந்த கவிஞராகவும் விளங்கிய அவர், சமூகத்திற்கான தேவைகளை, தம்முடைய கவிதைகள் மூலம் உரக்கச் சொன்னார்.

நடிகர் விவேக் தாம் எழுதிய கவிதைகளை, கவிஞர் விவேகாவிடம் படிக்கச் சொல்லி கருத்து கேட்டதாக, கவிஞர் விவேகாவே ஒருமுறை கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரது கவிதைகள் சிலவற்றையும் பார்ப்போம்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்து அவர் எழுதிய ஒரு கவிதை, இன்றும் பல இளைஞர்களுக்கு ஆணியடித்ததுபோல் உள்ளது.

”நீ கவிதைகள் எழுதிவைத்தது தாளில்...

ஆனால்,

கனவுகள் இறக்கிவைத்தது எங்கள் தோளில்!

அவ்வப்போது இடறுகின்றது;

ஆயினும் பயணம் தொடர்கின்றது!

உங்கள் கனவில் நாங்கள்...

எங்கள் நினைவில் நீங்கள்!”

- என எழுதியிருந்தார்.

அப்துல் கலாம்
அப்துல் கலாம்file image

அதுபோல், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்த மருத்துவர் வி.சாந்தா மரணமடைந்தபோது,

”பற்றற்ற வாழ்வு வாழ்ந்து - பாழும்

புற்றுநோய்க்கு ஓர் முற்றுவைக்க

காலமெல்லாம் களம்கண்ட ஆலமரம்

சற்றுமுன் சாய்ந்ததம்மா!

சாந்தா அம்மா...

நீ சரித்திரம் அம்மா!”

- என சங்கடமான நேரத்திலும் சரித்திர வரிகளைத் தந்தவர்.

தமிழகத்தில் திராவிடக் காற்றைச் சுகமாய் நேசிக்கச் செய்து மறைந்து போன முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குறித்து,

“நீடு புகழ் சகாப்தம்!- நீ

நிரந்தர சரித்திரம்.

முயற்சிக் கெல்லாம் அகரம்!

முத்தமிழின் சிகரம்!

திராவிடக் கொடியின் கம்பம்!

தமிழர் வாழ்வின் பிம்பம்!

எண்ணி எண்ணி வியக்கும் உழைப்பு

ஈடு செய்ய முடியாத இழப்பு!

தமிழ் வானின் எல்லை! இனி

உன்போல் இன்னொருவன் இல்லை!

தமிழே! போய் வா! - இனி

சூரியனுக்கு ஓய்வா?

கருணாநிதி
கருணாநிதிfile image

- என எழுதியிருந்தார். இப்படி பெரும் பிரபலங்களுக்கு எல்லாம் நற்கவிதைகளைத் தந்த நடிகர் விவேக், இயற்கை மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார்.

இயற்கை குறித்து அவர்,

”மழையை நிறுத்தினோம்

மரங்களை வெட்டி...

வயலை அழித்தோம்

வீடுகள் கட்டி....

இனி, மொட்டைமாடியில்தான்

தக்காளித் தொட்டி!”

மழை
மழைfile image

- என இயற்கை அழிக்கப்படுவது குறித்து, அவர் எழுதிய ஒரு கவிதை இன்றும் பல இதயங்களை வென்று நிற்கிறது; இயற்கையை வேட்டையாடுபவர்களு உரமாய் நிற்கிறது.

இதேபோல் கர்நாடக அரசிடம், காவிரி நீரைக் கேட்கும் கதையைக் கீழ்வரும் கவிதையில் பதிவுசெய்திருக்கிறார். தமிழக மக்கள் காவிரி நீருக்காக, கர்நாடகாவிடம் கையேந்திய சமயத்தில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இங்கு பணியமர்த்தப்பட்டார். அப்போது அவர் எழுதிய கவிதை பயங்கர வைரலானது.

‘நாங்கள் கேட்பது நீரப்பா

நீங்கள் தருவதோ சூரப்பா...

அண்ணன் தம்பிகள் நாமப்பா

நம்மைப் பிரிப்பது நீராப்பா...

அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா...

அன்னைக் காவிரி வேணும்ப்பா..!’

என எழுதியிருந்ததுடன், நம் சகோதரத்துவத்தை நீர் பிரிப்பதா என்று அதில் கேள்வியும் எழுப்பியிருந்தார். நீர் வேண்டும் எனவும் வேண்டியிருந்தார்.

அதே காவிரி நீர் குறித்த மற்றொரு கவிதையில்,

நான்: காவிரித் தாயே! காவிரி தாயே!

கன்னட மண்ணில் பூ விரித்தாயே! - ஏன்

தமிழ்மகன் கேட்டால் கை விரித்தாயே?

காவிரி: முத்து மகனே! முட்டாள் மகனே!

கைவிட்டது நானா நீயா?;

செழித்துப் பாய்ந்தேன்; நீ சேமித்தாயா?

ஆழியில் கலக்கும்முன் அணை செய்தாயா?

நான்: இனி நான் என்ன செய்ய? சொல்வாயா?

காவிரி: சினிமா பார்த்து சிரி

கிரிக்கெட், பாப்கார்ன் கொறி!

மழுங்கிப்போனதே உன் வெறி

நான்: தாயே என்னை மன்னிப்பாயா?

காவிரி: எழுந்து நில்! தயக்கம் கொல்!

இரைப்பை நிரப்புவது கலப்பை!

இதை உணராதவன் வெறும் தோல் பை

நான் உனக்கும் அன்னை

கன்னடர் உந்தன் உடன் பிறப்பு

காவிரியும் உனது நீர்ப் பரப்பு

இதை உரக்கச் சொல்; உன் உரிமை சொல்”

காவிரி
காவிரிfile image

- என காவிரியும் அவரும் உரையாடுவதுபோன்று கவிதையில் உண்மையை உலகுக்கு உணர்த்தியிருப்பார்.

இப்படி, காவிரி நீருக்காக, தன் கவிதை வரிகள் மூலம் குரல் கொடுத்திருந்த விவேக், அந்த நீரின் மூலம் விளைந்த நெற்கதிர்கள் வழியே வந்த பொங்கல் திருநாளுக்கும் வாழ்த்து கவிதை ஒன்றை வெளிப்படுத்தியிருப்பார். பொங்கல் குறித்து அவர்,

”மரம் இருந்தால்தான் மழை!

மழை இருந்தால்தான் நீர்!

நீர் இருந்தால்தான் நிலம்!

நிலம் இருந்தால்தான் விவசாயம்!

விவசாயம் இருந்தால்தான் நெல்!

நெல் இருந்தால்தான் அரிசி!

அரிசிதான் பொங்கல்!”

- என எழுதி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பார்.

கீழடியின் அகழாய்வுகள் குறித்து இன்று பேசப்படும் நிலையில், அன்றே கீழடியின் பெருமை குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார், நடிகர் விவேக்.

கீழடி
கீழடிfile image

”மன்னர் வீரம் வாளடி

இந்த மண்ணின் தொன்மை கீழடி...

என்றும் வணங்கும் ஈரடி

அது-எங்கள் திருக்குறள் பாரடி...

பண்டைத்தமிழன் தோளடி

அதன் வன்மை திண்மை பேரிடி...

தங்கத் தமிழ்த்தாய் காலடி

அதைத் தழுவிடும் பேரிடும் நானடி!”

- என்று எழுதியிருந்தார்.

இப்படி, பிரபலங்கள், இயற்கை, காவிரி, கீழடி என அனைத்திலும் காதல்கொண்ட விவேக், சென்னை மீதும் காதல் கொண்டிருந்தார் என்பது பேரதிசயம். பிழைப்பு தேடி சென்னை வந்த மக்கள் எல்லாம், கொரோனா அலையால், பிழைத்தால் போதும் என தன் சொந்த ஊர் திரும்பியபோது, இதர மக்களுக்கு நம்பிக்கையளித்தவர் விவேக்.

”தன்னை வளர்த்தவனுக்கு

இளநீர் கொடுப்பது தென்னை...

இந்த மண்ணை மிதித்தவனை

கைவிடாது சென்னை...

அது மீளும்;வாழும்”

- என நம்பிக்கை விதையை விதைத்தார்.

அதுபோல், மாமல்லபுரக் கடற்கரையின் அழகை வர்ணித்த அவர்,

”நிற்காமல் சளைக்காமல் வீசும்

உன் பேரலைகள்

முன்னேறுவதே வாழ்க்கை என்ற

உபதேச மந்திரத்தை உணர்த்தும்

முடிவில்லாத பயணமே

முழுமையான உன் போதனை”

- எனச் சொல்லி, உண்மையான வாழ்க்கைப் பாடத்தை அனைவருக்கும் உணரவைத்தார்.

இப்படி, எப்போதும் தன் எழுத்திலும், செயலிலும் சமூகக் கருத்துகளைத் திணித்துவந்த நடிகர் விவேக், அப்துல் கலாமின் ஆசைப்படி மரக்கன்றுகளை நட்டுவைத்து பசுமையை ஏற்படுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com