அதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..?

அதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..?
அதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..?

"நாளைய தீர்ப்பு" படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று அனைத்து தரப்பு மக்களையும் அதிகமாக கவர்ந்திருக்கிறார் விஜய். அறிமுகமான படத்தில் இருந்து தன் பெயருக்கு முன்பு "இளைய தளபதி" என்ற பட்டத்தை சேர்த்துக்கொண்டவர். கடைசியாக வெளியான "மெர்சல்" படத்தில் இருந்து "தளபதி" விஜய்யாக மாறினார். இப்போது டாப் கியரில் தன்னுடைய சினிமா வாழ்கையில் இருக்கும் விஜய், சர்கார் படம் மூலமாக இன்னும் உச்சத்துக்கு போக நினைக்கிறார். அதன் வெளிப்பாடாக வெளிப்படையாகவே அமைந்தது "சர்கார்" இசை வெளியிட்டு விழாவின் போது அமைந்த விஜய்யின் பேச்சு. தமிழக அரசியலில் சினிமா நடிகர்களின் புயல் கொஞ்சம் கொஞ்சமாக மையம் கொண்டிருக்க, அதில் விஜய்யும் கிட்டத்தட்ட இணைந்துவிட்டதாகவே தெரிகிறது. இதற்கு முன்பு விஜய் இப்படி ஒரு பேச்சை பேசியதில்லை. "சர்கார்" விஜய்யின் பேச்சில் அப்படி ஒரு அனல். 

ஆரம்பத்தில் விஜய் குறித்து ஒரு பேச்சு பொது வெளியில் இருந்தது. அது விஜய் அளந்துதான் பேசுவார், அவர் ரொம்ப ரிசர்வ்ட் டைப் என்பதுதான் அதி. ஆனால், தம்மீது விழப்படும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் சில ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து எறிந்தார் விஜய். எப்போதும் மேடையில் அமைதியாகத் தோன்றினாலும் மைக் கிடைக்கும்போது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்தான் விஜய்.

2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது விஜய் அதனை வரவேற்றே பேசினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றால் நிச்சயம் மகிழ்ச்சியே என்றார். நோக்கம் பெரிதாக இருக்கும்போது பாதிப்பும் இருக்கத்தான் செய்யும் என்ற அவர், ஆனால் நோக்கத்தை காட்டிலும் பாதிப்பு அதிகமாக இருந்துவிடக் கூடாது எனவும் கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பலரும் விமர்சித்துதான் பேசினர். ஆனால் விஜய் அதனையெல்லாம் பெரிதும் பொருட்படுத்தாமல் நினைத்ததை பேசிமுடித்தார். விஜய்யின் அப்போதைய அந்த கருத்து பலராலும் பெரிதாக பேசப்பட்டது.

இதேபோல மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அரசியலை தொட்டே பேசினார் விஜய். அதற்கு உதாரணமாக மேடையில் அரசியல்வாதிகளின் பேச்சு இருப்பதுபோல் குட்டிக்கதை ஒன்றையும் விஜய் சொன்னார். “ ஒரு டாக்டர் தனது காரை சர்வீஸ் செய்வதற்காக மெக்கானிக் செட்டிற்கு சென்றிருக்கிறார். காரை சர்வீஸ் பார்த்துக் கொண்டே டாக்டரிடம் பேச்சு கொடுத்தார் அந்த மெக்கானிக். நானும் உங்களைபோலத் தான் வேலை பார்க்கிறேன். வால்வுகளையெல்லாம் பிரிக்கிறேன். பின்னர் அடைக்கிறேன். தேவையான இடத்தில் ஒட்டு போடுறேன். ஆனால் உங்களுக்கு மட்டும் ஏன் அளவுக்கதிகமான புகழும், பணம் கிடைக்கிறது என்றார் மெக்கானிக். உடனே அமைதியாக யோசிச்சுகிட்டே சொன்ன டாக்டர், தம்பி நீ சொன்ன எல்லாவற்றையும் வண்டி ஓடிகிட்டே இருக்கும்போது செய்துபாரு.. புரியும் என டாக்டர் சொன்னார்” விஜய் இவ்வாறு பேசிமுடிக்கும்போது கைத்தட்டல் பறந்தது. மேலும் பேசிய விஜய், ஹிட், பிளாப், பிளாக் பஸ்டர் எல்லாம் கொடுத்திட்டீங்க. அதைவிட முக்கியம் உங்களை நான் சம்பாதிச்சதுதான் என ரசிகர்களை கவரும் வகையில் பேசினார்.

“வாழ்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்கன்னு கேக்குறாங்க. ஜஸ்ட் இக்னோர் இட். அத விட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும், அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும் தான். எல்லோருக்கும் நம்மை பிடிக்கணும்னு இல்லை. கொஞ்சம் பேருக்கு பிடிக்காம இருந்தாதான் வாழ்க்கை சுவாரஸியமா இருக்கும்” என பேசினார்.

சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் தன்னுடைய ஹீரோ இமேஜ் இருக்க வேண்டும் என நினைத்தார் விஜய். மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது யாருக்கும் தெரியாமல் கலந்துக்கொண்டது. நீட் தேர்வால் தற்கொலை செய்து உயிரிழந்த அனிதா குடும்பத்தினருக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கொடுத்தது, நிதி உதவி செய்தது. பின்பு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்திக்க யாருக்கும் தெரியாமல் பைக்கில் சென்று ஆறுதல் கூறியது ஆகியவை விஜய்யின் இமேஜை உயர்த்தியது. மேலும் அவரின் சமூக அக்கறையையும் காட்டியது.

இந்நிலையில் நடைபெற்ற சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் வழக்கத்தை விட அதிக உற்சாகத்தில் காணப்பட்டார் விஜய். நேரடியாக அரசியல் பேசவில்லை என்றாலும் கூட மறைமுகமாக நன்றாகவே அரசியல் பேசினார் விஜய். அதில் முக்கியமாக அவர் உதிர்த்தவை "தேர்தல்ல எல்லோரும் போட்டியிட்டு சர்க்கார் அமைப்பாங்க, நாங்க சர்க்கார் அமைத்துவிட்டு தேர்தலை நிற்க போறோம்" என்று பேசி காண்போரை அதிர வைத்தார்.

நேற்றும் அரசியல்வாதிகளை போல குட்டிக்கதை பேச விஜய் தயங்கவில்லை. "ஒரு மன்னர் தனது சிப்பாய்களுடன் ஊர்வலம் சென்றார். அப்போது அவருக்கு சிப்பாய் ஒருவர் எலுமிச்சை சாறு வழங்கினார். மன்னரோ உப்பு பத்தவில்லை. உப்பு வாங்கி வா என சிப்பாயிடம் சொன்னார். சிப்பாயோ உப்பு எதற்கு வாங்கிக்கொண்டு நான் கடைத்தெருவில் கொஞ்சம் எடுத்து வருகிறேன் என்றார்." 

"மன்னரோ காசைக் கொடுத்து வாங்கி வரவும் எனக் கட்டளையிட்டார். அது ஏன் என சிப்பாய் கேட்டதற்கு 'நான் காசு கொடுத்து வாங்காமல் எடுத்து வரச்சொன்னால் எனக்கு பின்னால் வரும் பரிவாரம் இந்த கடைத்தெருவையே காலி செய்துவிடும். தலைமை சரியாக இருந்தால் அனைத்து மட்டத்தில் இருப்பவர்களும் சரியாக இருப்பார்கள் என்பதையே அவர் அப்படி கூறினார். ‘சர்கார்’படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன் என்றும் விஜய் கூறினார். படத்தில் அரசியல் பேசியதோடு தற்போது நிஜ மேடைகளிலும் அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார் விஜய். விஜய் ஒருவேளை அரசியலில் நுழையும்பட்சத்தில் அவருக்கு முன்பாக தன் திரையுலக சீனியர்களான ரஜினியும், கமலும் நிற்கின்றனர். என்ன செய்யப்போகிறார் விஜய் ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com