புதிய தலைமுறை செய்தி காரனமாக தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரை வீட்டுக்கு நேரில் வரவழைத்து அவருடன் கொஞ்சி மகிழ்ந்த நடிகர் சூர்யா, சிறுவனின் மருத்துவ செலவினை முழுமையாக ஏற்று கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிறுவன் தினேஷ்குமார். 16 வயதான இவர், ராமர்- மல்லிகா தம்பதியின் மூத்த மகன். பிறக்கும் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வந்த தினேஷ்குமாருக்கு தனது 10 வது வயதில் நடக்கும் போது திடீர் திடீர் என கீழே விழு ஆரம்பித்தார். எழுந்து நிற்க முடியாமல் சிரமபட்டார். இதற்கு அவனது பெற்றோர்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க துவங்கிய போதுதான் பேரதிர்ச்சி காத்திருந்தது. தினேஷூக்கு தசைச் சிதைவு நோய் இருப்பதும், இந்த நோய்க்கு சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் இல்லாததும் தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் தசைகள் எல்லாம் சிதைந்து போன நிலையில் சக்கர நாற்காலியிலேயே அன்று முதல் இன்று வரை தனது வாழ்நாளை கழித்து வருகிறார் தினேஷ்.
தனது வாழ்க்கை இப்படி மாறிய நிலையிலும், தனக்கு தெரிந்த ஒவிய திறமை மூலம், தான் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பல வகை ஒவியங்களை வரைய துவங்கி, தற்போது அனைத்து விதமான காட்சிகளை கண்களில் பார்த்ததும், அதற்கு உருவம் கொடுத்து வருகிறார் தினேஷ். தினேஷின் ஒவியங்கள் பல கண்காட்சியில் காட்சிக்கு வைக்கபட்டு ,பெரும்பாலும் அவை பரிசை தட்டி செல்பவகைகளாக இருந்து வருகின்றன. கடவுளின் படங்கள்,ராமயன கதைகள், இயற்கை ஒவியங்கள், மனித உருவங்கள் எனப் பலவகை ஒவியங்களை வரைந்து வருகிறார் தினேஷ்.
தனக்கு நடிகர் சூர்யாவை பார்த்து அவரிடம் பேச வேண்டும் என்பது தினேஷ்குமாரின் ஆசை. இந்த ஆசையை புதிய தலைமுறை செய்தியின் போது தினேஷ்குமார் தெரிவித்து இருந்தார். இந்தச் செய்தியினை பார்த்த சூர்யா -மற்றும் அவரது சகோதரர் கார்த்திக், சிறுவன் தினேஷ்குமாரை சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்த நிலையில் நேற்று இரவு அவர்களை குடும்பத்துடன் தனது சென்னைக்கு வீட்டிற்கு சூர்யா அழைத்தார். அவர்கள் வந்து செல்வதற்கு கார் வசதியும் ஏற்படுத்தி கொடுத்தார்.
இன்று காலை தனது வீட்டில் தினேஷை தனது குடும்பத்தார் சிவக்குமார், கார்த்திக், சூர்யா ஆகியோர் வரவேற்று தினேஷூடன் கொஞ்சி மகிழ்ந்தனர். தினேஷூடன் அவர்கள் அனைவரும் செல்பி எடுத்து கொண்டனர். தினேஷூக்கு நடிகர் சிவக்குமார், தான் வரைந்த ஒவியம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். மேலும் தினேஷின் பெற்றோரிடம் அவர்களின் மகனுக்கு ஏற்பட்ட நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகளை குறித்தும் கேட்டறிந்தனர் சூர்யாவின் குடும்பத்தினர்.
மேலும் தினேஷூக்கு ஏரளமான பரிசுப் பொருள்களை சூர்யா கொடுத்து அனுப்பினார். மேலும் சிறுவன் தினேஷின் மருத்துவ செலவுகளை அனைத்தையும் ஏற்பதாகவும், சூர்யா உறுதி அளித்தார்.
- தேனி செய்தியாளர் பாலாஜி