ரேடியோ ஜாக்கி டூ நடிகர்... தமிழ் சினிமாவின் `நம்பிக்கை' வரவு மணிகண்டன்!

ரேடியோ ஜாக்கி டூ நடிகர்... தமிழ் சினிமாவின் `நம்பிக்கை' வரவு மணிகண்டன்!
ரேடியோ ஜாக்கி டூ நடிகர்... தமிழ் சினிமாவின் `நம்பிக்கை' வரவு மணிகண்டன்!

மிமிக்ரி கலைஞர், ரேடியோ ஜாக்கி, எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமை மூலம் நடித்து வரும் மணிகண்டன் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். அவரது மணிகண்டன் எனும் நாயகன் உருவானது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

1993-ஆம் ஆண்டு திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல்துறையால் லாக்அப்பில் கொலை செய்யப்பட்ட பழங்குடி வேட்டை சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரின் வாழ்க்கை பக்கங்களை பேசும் `ஜெய்பீம்' படம் கவனம் ஈர்த்து வருகிறது. மனைவி மீது தீராக்காதலை வெளிப்படுத்தும் காதலனாக, செங்கல் சூளையில் வேலையுடன் கனவுகளை வெளிப்படுத்தும் கூலிக்காரனாக, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கும் தீரனாக, தான் ஏற்றிருக்கும் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்ததில் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் `காலா' மணிகண்டன். படத்தின் துவக்கத்தில் எலி பிடிக்கும் காட்சியிலிருந்து, இறக்கும் தருவாயிலும் நீதியின் பக்கம் நிற்பது வரை மணிகண்டன் ஒவ்வொரு காட்சியிலும் ராஜாக்கண்ணாக நடிப்பில் மிளிர்ந்துள்ளார்.

மிமிக்ரி கலைஞனாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் மணிகண்டன். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் மிமிக்ரி கலைஞராக ரன்னர் அப் ஆனார். அந்த நிகழ்ச்சியில் அவரின் திறமைக்கான அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின் அவர் நினைப்பதுபோல் வாழ்க்கை அமையவில்லை. காரணம் அவரின் கனவு சினிமா. சினிமாவுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அது எதிர்பார்த்தது போல அமையாததால், வாழ்க்கையை நடத்த அவர் தேர்ந்தெடுத்த வழிதான் ரேடியோ ஜாக்கி.

பிரபல தனியார் வானொலியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரேடியோ ஜாக்கியாகப் பணிபுரிந்த சமயத்தில் அவருக்கு இன்னொரு பணியும் கைகொடுத்தது. அது, டப்பிங் தொழில். தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் பேசிய கலைஞர் மணிகண்டன். இந்தப் பணி அவருக்கும் சினிமாவுக்கும் இடையேயான தொடர்பை ஏற்படுத்தியது. தான் டப்பிங் செய்யும் திரைப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அந்த வாய்ப்பை ஒருபோதும் நடிப்பு ஆசைக்கு அவர் பயன்படுத்தவில்லை.

தனிப்பட்ட முறையில் நடிப்பிற்கான வாய்ப்பை தேடியவருக்கு கிடைத்தது தொடர் நிராகரிப்பு மற்றும் அவமானங்கள் மட்டுமே. என்றாலும், வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்தவருக்கு கைகொடுத்தது உதவி இயக்குநர் வேலை. 20-க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவருக்கு `நாளைய இயக்குனர்' நிகழ்ச்சி மூலமாக இயக்குநர் நலன் குமாரசாமியின் அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னாளில் நலன் குமாரசாமியே மணிகண்டன் நடிப்பு ஆசைக்கு விதைபோட்டுள்ளார். விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய `காதலும் கடந்துபோகும்' படத்தில் சிறிய வேடம் கொடுத்தார் நலன். இதில் கார் டிரைவர் பாத்திரம் தான் என்றாலும் அதுவரை டிரைவிங்கே தெரியாத மணிகண்டன், டிரைவிங் கற்றுக்கொண்டு நடித்தார்.

இதன்பின் 'எட்டு தோட்டாக்கள்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த மணிகண்டனுக்கு, விஜய் சேதுபதியிடம் இருந்து போன் வந்துள்ளது. `காதலும் கடந்துபோகும்' படப்பிடிப்பில் விஜய் சேதுபதி நெருக்கமாக பழகியுள்ளார். இந்த நட்பு அவருக்கான அடுத்த வாய்ப்பை பெற்றுதந்துள்ளது. இந்தமுறை இன்னும் பெரிய படத்தில் வாய்ப்பு. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தமிழ் சினிமா கொண்டாடிய 'விக்ரம் வேதா' தான் அந்தப் பெரிய படம். விஜய் சேதுபதி மணிகண்டனிடம் இந்தப் படத்தில் இருக்கும் ஒரு கேரக்டருக்காக புஷ்கர் காயத்ரியை சந்திக்க சொல்லியுள்ளார்.

அப்படி சந்திக்கச் சென்ற மணிகண்டன், படத்தில் நடிப்புடன் டயலாக் எழுதும் வாய்ப்பையும் கேட்டார். திரைப்படங்களில் எழுத்தாளராக பணிபுரிவது மணிகண்டனுக்கு புதிது கிடையாது. உதவி இயக்குநர் காலத்தில் தொடங்கிய எழுத்து பழக்கம் தான், முதலில் அவருக்கு சினிமா வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது எனலாம். 'காதலும் கடந்துபோகும்' படத்தில் நடிப்பதற்கு முன்பாக மணிகண்டன் எழுத்தில் `பிட்சா 2' படம் வெளிவந்தது. அதற்கு முன்னதாக சுயாதீன படமாக 'நரை எழுதும் சுயசரிதை' என்னும் படத்தை எழுதி இயக்கியும் இருக்கிறார் மணிகண்டன்.

இந்த அனுபவத்தில் `விக்ரம் வேதா' படத்துக்கான டயலாக் எழுதும் வாய்ப்பை கேட்க, அதற்கு புஷ்கரும் காயத்ரியும் சம்மதம் தெரிவித்தனர். இறுதியாக, காவலர் சந்தானம் வேடத்தில் நடிப்புடன் `விக்ரம் வேதா'வின் வசனங்களையும் தெறிக்கவிட்டார். ஆனால் மக்கள் மத்தியில் மணிகண்டனுக்கான கவனத்தை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகனாக நடித்த `காலா'. அவருக்கு ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தால் `காலா' வாய்ப்பு கிடைத்தது எனலாம். இந்தக் காலகட்டத்தில் மணிகண்டன் `சரி பேசி பாப்போம்' என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த சேனலின் பார்வையாளர்களில் ஒருவர் தான் `காலா' இயக்குநர் ரஞ்சித்.

அவர் `காலா' படத்துக்கான ஆடிஷனுக்கு மணிகண்டனையும் அழைத்துள்ளார். நம்பிக்கையில்லாமல் சென்றவருக்கு வாய்ப்பு தேடிவந்தது. வாய்ப்பு கிடைத்தாலும் படத்தின் ஸ்கிரிப்டைப் படித்தபோதுதான் ரஜினிக்கு மகன் பாத்திரத்தில் நடிப்பது மணிகண்டனுக்கு தெரிந்துள்ளது. படம் வெளிவந்ததும் முதல்முறையாக புகழின் வெளிச்சத்தை அனுபவித்து பார்த்தார் மணிகண்டன். ஒரு நடிகராக அவர் சரியான பாதையில் செல்கிறார் என்ற அவரது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்திய மற்றொரு படம் ஹலிதா ஷமீம் இயக்கிய `சில்லு கருப்பட்டி'. டெஸ்டிகுலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முகிலன் பாத்திரம் ஏற்று நடித்தார்.

சமுத்திரக்கனியை தாண்டி முன்னணி நடிகர்கள் பெரிதாக இல்லாமல் வெளிவந்த `சில்லு கருப்பட்டி' மணிகண்டனின் முழு நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்தது. அதில் ஸ்கோர் செய்ய முழுநேர நடிகராக மாறினார். இடையில் அஜித்தின் 'விஸ்வாசம்' கார்த்தியின் 'தம்பி' படங்களில் எழுத்தாளராக பணியாற்றினாலும், சில்லு கருப்பட்டி கொடுத்த புகழால் முழுநேர நடிகராக வலம்வந்துகொண்டிருக்கிறார். குறிப்பாக இந்த ஆண்டு மட்டுமே மூன்று படங்கள் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்துள்ளன. ஹலிதா ஷமீமின் `ஏலே', நயன்தாராவின் `நெற்றிக்கண்', இப்போது `ஜெய்பீம்'. இந்த மூன்று படங்களிலுமே மணிகண்டனுக்கு வலுவான பாத்திரங்கள். இதனால், இதுவரை இல்லாத அளவு மக்கள் கவனம் அவர் மீது திரும்ப தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் பன்முக கலைஞர்கள் குறைத்துக்கொண்டு வருகிறார்கள் எனலாம். முன்பு இயக்குநர்கள் பாக்கியராஜ், பார்த்திபன், எஸ்ஜே சூர்யா போன்றோர் பன்முக கலைஞர்களாக திகழ்ந்தனர். அவர்களுக்கடுத்த தலைமுறையில் சொல்லிக்கொள்ளும்படியாக பெரிதாக யாரும் அந்த இடங்களை நிரப்பவில்லை. அந்த இடத்துக்கு மிமிக்ரி கலைஞர், ரேடியோ ஜாக்கி, எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமை மூலம் நடித்து வரும் மணிகண்டன் சரியான தேர்வாக இருப்பார் என மக்கள் கருதுகின்றனர். அதை அவர் நிரூபித்தும் காட்டியுள்ளார்.

-மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com