கருணாஸுக்காகவே எழுதப்பட்ட கதை... இன்னும் கொஞ்சம் கத்தரித்திருந்தால்..!-ஆதார் விமர்சனம்

கருணாஸுக்காகவே எழுதப்பட்ட கதை... இன்னும் கொஞ்சம் கத்தரித்திருந்தால்..!-ஆதார் விமர்சனம்
கருணாஸுக்காகவே எழுதப்பட்ட கதை... இன்னும் கொஞ்சம் கத்தரித்திருந்தால்..!-ஆதார் விமர்சனம்

ஒரு சாமானியனுக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான போராட்டத்தை பேசியிருக்கிறது ஆதார். மனைவி காணாமல் போன நிலையில் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பச்சைமுத்துவாக கருணாஸ் நடித்திருக்கிறார். ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் கார் நிறுவனத்தின் லாப பிடியில் கருணாஸ் எனும் சாமானியன் சிக்கி வாழ்விழக்கும் வேதனையினை திருப்புமுனை நிறைந்த கிரைம் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார்.

ஸ்டேஷன் ரைட்டராக அருண் பாண்டியன், அதிகாரிகளாக உமா ரியாஸ்கான், பாகுபலி பிரபாகர் என கதைக்கான கதாபாத்திரங்கள் நிறைவாகவே டிஸைன் செய்யப்பட்டிருக்கின்றன. கருணாஸுக்கு இது ஏறுமுகம் என்றே தோன்றுகிறது. மிகச் சரியான நடிப்பை வழங்கியிருக்கிறார். சில காட்சிகளில் நம்மை கலங்கடிக்கிறார். பாராட்டுகள் கருணாஸ். உங்களுக்காகவே எழுதப்பட்ட கதையாக இருக்கிறது இந்த ஆதார்.

என்னதான் காவல்துறை மக்களுக்கு சேவை செய்ய நினைத்தாலும் சிஸ்டம் அதை அனுமதிக்காது என்பதே ஆதார் சொல்லும் அழுத்தமான செய்தி. அதிகாரத்தின் முன்னே காவல்துறை அதிகாரிகளுமே கூட செல்லாக் காசு என்பதை பேசும் இப்படத்தின் முதல் பாதி நமக்கு காவல் துறை மீது மிகுந்த நம்பிக்கையினை ஏற்படுத்துகிறது. பார்வையாளனுக்கு எந்த விசயத்தின் மீதும் நல்ல நம்பிக்கையினை ஏற்படுத்தி படம் முடிவதற்குள் அதை உடைத்துக் காட்டுதல் என்பது எக்காலத்துக்குமான வெற்றி பார்முலா. ஆனால் இக்கதை இன்னுமே தெளிவான திரைக்கதையுடன் சொல்லப்பட்டிருக்க வேண்டும். நல்ல கதையினை எழுதிவிட்டு குழப்பமான திரைக்கதையால் கொஞ்சம் விடுகதை போடுகிறார் இயக்குநர். நிறைய இரவுக் காட்சிகள் உள்ள இப்படத்திற்கு நல்ல ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் மகேஷ் முத்துசுவாமி.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், யுரேகாவின் வரிகளில் தேன்மிட்டாய் மாங்கா பாடல் இதம். முதல் பாதியில் இருந்த சினிமா நேர்த்தி போகப்போக தொய்வடைந்திருப்பதை கவனிக்க முடிகிறது. ஒரு நல்ல கதையாக அழுத்தமான மாற்று பார்வை கொண்ட கதையாக ஆதார் இருந்த போதில் அது திரைமொழியாக முழுமையடையாத பிள்ளையாகவே நமக்கு கிடைத்திருக்கிறது. ஆதார் மட்டுமல்ல நல்ல கதை அம்சம் கொண்ட சின்ன படங்கள் நிறைய திரை மொழியில் கோட்டை விடுகிறது. அந்த வரிசையில் ஆதாரும் இணைந்து கொள்கிறது. ரித்விகாவிற்கும் இனியாவிற்கும் குறைந்த காட்சிகளே இருந்தாலும் நிறைவாக அமைந்த பாத்திரங்களாக அவை உள்ளன.

ஒரு கோணத்தில் இனியாவை சமூக விரோதியாக சித்தரித்துவிட்டு பிறகு அவள் அப்படியொன்றும் தப்பான ஆள் இல்லை எனச் சொன்னது நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. இனியா கதாபாத்திரம் மட்டுமல்ல. படம் நெடுக மனித முகங்கள் தன் நிறத்தை மாற்றிக் கொண்டும் போலி முகமூடி அணிந்து கொண்டு வருவதுமாக கதை நகர்கிறது. நிறைய ப்ளாஸ் பேக் காட்சிகள் ஒரு படத்திற்கு எப்போதும் பலவீனத்தை கொடுத்துவிடும். ஆதாருக்கும் அது நிகழ்ந்திருக்கிறது. இன்னுமே நேரடியாக லீனியராக இக்கதையினை சொல்லியிருந்தால் பெரிய வெற்றியை அடைந்திருக்கும். எடிட்டர் ராமர் இவ்விசயத்தில் மெனக்கட்டிருக்கலாம். கருணாஸ் சொல்லும் போன் நம்பரை மருத்துவமனை ஊழியர் தவறாக எழுதுகிறார். இது கவனிக்கத்தக்க காட்சிகளின் ஒன்று. ஏன் என்று படம் பார்க்கும் போது புரியும்.

படத்தின் தலைப்பை வைத்து படம் இந்திய அரசியலையோ, ஆதார் குறித்த விமர்சனங்களையோ பேசப் போகிறது என நினைத்துச் சென்றால் ஏமாற்றமே கிடைக்கும். ஆதார் குறித்து இப்படம் கொஞ்சம் விமர்சித்தாலும், படத்தின் தலைப்பாக வைக்கும் அளவிற்கு இன்னுமே கதையோடு ஆதாரை இணைத்திருக்கலாம்.

நிறைய லாஜிகள் குறைகள் இருந்தாலும் இப்படம் நல்ல முயற்சி, அவசியம் பார்க்க வேண்டிய சினிமா. ஆதார் தமிழ் சினிமாவிற்கு நல்ல செய்தியை சொல்லியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com