ஃபேஸ்புக்கில் வைரலான ஃபுட் டெலிவரி பாய்ஸ் புகைப்படம்: சொல்வது என்ன?

ஃபேஸ்புக்கில் வைரலான ஃபுட் டெலிவரி பாய்ஸ் புகைப்படம்: சொல்வது என்ன?

ஃபேஸ்புக்கில் வைரலான ஃபுட் டெலிவரி பாய்ஸ் புகைப்படம்: சொல்வது என்ன?
Published on

சமூக வலைத்தளங்களில் ஒரு நாளைக்கு எத்தனையோ புகைப்படங்களை நாம் ஸ்குரோல் செய்து கடக்கிறோம். ஆனால் ஏதாவது ஒரு புகைப்படம் நம் செல்லும் வேகத்தை நிறுத்துகிறது. யாரோ எங்கோ எடுத்த ஏதோ ஒரு புகைப்படம் மனதளவில் என்னமோ செய்துவிடுகிறது. அப்படி சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வரும் புகைப்படம் ஒன்றுதான் ஆன்லைன் ஃபுட்டை டெலிவரி செய்யும் இளைஞர்களின் புகைப்படம். நாள்தோறும் விதவிதமான எத்தனையோ உணவு வகைகளை தங்கள் முதுகுக்கு பின்னால் சுமந்து செல்லும் 4 இளைஞர்கள் தள்ளுவண்டி கடையில் நின்று சாப்பிட்டுக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியது அந்தப் புகைப்படம். 

வெளியில் சென்று தேடி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டுக்கே தேடி வரும் உணவுகள். விதவிதமான செயலிகள். தினம் தினம் எத்தனையோ தள்ளுபடிகள். நாம் ஆன்லைனில் சாப்பாட்டை தேடி செல்வதற்கான காரணங்கள் இவை. நீங்கள் சென்னை மாதிரியான மாநகரங்களில் இருந்தால் இரண்டு நிமிடம் சாலையில் வந்து நில்லுங்கள். அது எந்த நேரமாக இருந்தாலும் உங்களை ஒரு ஃபுட் டெலிவரி பையன் கடந்து செல்வார். எத்தனை முறையோ நாம் அவர்களை கடந்திருப்போம். எத்தனை முறையோ அவர்களிடம் உணவை வாங்கி இருப்போம். அவர்களுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

சாலைகளின் உயிரை பணயம் வைத்து வேகமாக செல்லும் அந்த இளைஞர்கள் சிறிது தாமதம் ஆகிவிட்டதால் யாரோ ஒருவரின் வசைபாட்டைக் கேட்டுக்கொண்டு அடுத்த ஆர்டருக்காக காத்திருப்பார்கள்.  அவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு?

ஃபுட் டெலிவரி செய்ய இரண்டு வகைகளில் வேலைவாய்ப்பு உள்ளது. முழு நேரம், பகுதி நேரம். இங்கு யாருக்குமே மாத சம்பளம் கிடையாது. வார சம்பளம்தான்.  ஒவ்வொரு ஆர்டருக்கும், இத்தனை கிலோமீட்டருக்கும் என்ற வகையில் சம்பளம். அவரவர்களின் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், பெட்ரோல் அவரவர்களின் கைக்காசுதான். வாரத்திற்குள் குறிப்பிட்ட டார்கெட்டை முடித்துவிட்டால் கணிசமான தொகை உண்டு. ஆனால் இந்தச் சம்பளமும் அவர்கள் கைக்கு சரியாக போய்ச் சேர்கிறதா என்பது வேறு கதை. இவ்வளவுதான் அவர்களின் வேலை விவரம்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும். உணவகங்களில் சரியான பதில் இருக்காது. சிலநேரம் செயலி சொதப்பும். சரியான முகவரி குறிப்பிடாததால் அலைய வேண்டி வரும். மழை, வெயில், குளிர் எதையும் பொருட்படுத்த முடியாது. சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள். அவர்களை இன்முகத்துடன் அணுக வேண்டும். இப்படி நிறைய சிக்கல்களை உணவோடு தாங்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏதோ ஒரு முகவரியை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறார்கள் அந்த இளைஞர்கள்.

லட்ச ரூபாய் பைக்கில் டெலிவரி செய்யும் மாடர்ன் பையன், ஐம்பது வயதை கடந்திருக்கும் பெரியவர் என வயது வித்தியாசம் இல்லாமல், படிப்பு தகுதி வித்தியாசம் இல்லாமல் இந்த வேலையை பலர் செய்து வருகின்றனர். பொறியியல் படித்த நிறைய இளைஞர்கள் டெலிவரி பாயாக பறந்து கொண்டும் இருக்கிறார்கள். 

செய்யும் வேலையில் பாகுபாடு இல்லை. உழைக்கும் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்தான். உணவை கொண்டு வந்து சேர்க்கும் அந்த இளைஞர் நம்மிடம் எதிர்ப்பார்ப்பதெல்லாம் ஒரு புன்சிரிப்பு. நீங்கள் சாப்பீட்டீர்களா என்று நாம் கேட்டுவிட்டாலே போதுமானது,  நமக்காக உணவை இறக்கி வைத்த அவர்களின் முதுக்குப்பையில் அன்பு நிறைந்திருக்கும். அது போதும் அவர்களுக்கு.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com