கடிதத்திற்கான காத்திருப்பில் பெருக்கெடுத்த அன்பும், காத்திருப்பின் சுகமும்!
உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப் பாராட்டும் விதமாக இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தலைமுறையினர் இழந்து நிற்கும் கடிதத்தின் அனுபவங்கள் என்ன?
இன்றைய தினத்தில் நாம் தூக்கத்தில் இருந்து கண் விழிப்பதே வாட்ஸ் அப்பில் தான். நல்லதோ, கெட்டதோ, அவசரமோ, அத்தியாவசியமோ அனைத்தும் செய்தியாகவோ, தகவலாகவோ வந்து விழுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் தகவல் பரிமாற்றம் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. ஒற்றன் மூலம் ஓலையில் தகவல் பரிமாற்றம், புறாவின் மூலம் அனுப்பப்பட்ட தகவல்கள், அஞ்சல், தந்தி, தொலைபேசி, எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் என்ற இதன் வளர்ச்சி பிரம்மிப்புக்கு உள்ளானது.
Read Also -> விபத்துகளால் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் உயிரிழப்பு!
அன்பின் பரிமாற்றங்களில் கடிதத்தின் இடத்தை எந்த தொழில்நுட்பத்தாலும் நிரப்ப முடியாது. நம்முடைய நல விசாரிப்புகளை கடிதத்தில் திணித்து அன்பை சிவப்பு பெட்டிக்குள் அனுப்பும் காலம் இதுவல்ல. எல்லோரின் கைகளிலும் ஆறாம் விரலாய் முளைத்திருக்கிறது செல்போன். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்ற எக்ஸ்ட்ரா மீல்ஸ் வேறு. என்னதான் வீடியோ கால் மூலம் முகத்தைப்பார்த்து பேசும் அளவில் நாம் வளர்ந்து விட்டாலும் கடிதம் போல நினைவுகளை சுமக்க முடியுமா? கடிதத்தின் மிகப்பெரிய பலமே, அது வெறும் வார்த்தைகளை மட்டும் சுமந்து வராது. அதில் எழுதப்பட்ட வார்த்தைகள் எல்லாம் ஏதோ ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு. அம்மா எப்படி இருக்கீங்க? இப்போ இருமல் இருக்கா? என்று தொலைபேசியில் நாம் பேசும் சாதாரண உரையாடல், கடிதத்தில் எழுதப்பட்டால் அதன் உணர்ச்சி வடிவம் வேறு. அதை படிப்பவர்களின் பார்வையில் அதன் மொத்த அன்பும் சொட்டும். அம்மா இதனை எப்படி படிப்பாள் தெரியுமா? அந்த ஆறு வார்த்தைகளை படித்துவிட்டு அரை நிமிடம் இடைவெளி விடுவாள். உங்களை பற்றி ஒரு ரீவைண்டிங் செய்து பார்ப்பாள். அதில் நீங்கள் கைகளில் தவழ்ந்தது முதல் கடைசியாய் ஒரு ஞாயிற்றில் டாட்டா காட்டிக்கொண்டு வெளியூர் கிளம்பியது வரை வந்து செல்லும். எழுத்துகளில் உணர்ச்சியை காட்ட முடியாது தான் ஆனால் படிப்பவர்களின் மனநிலைக்கு ஏற்ப உணர்ச்சிகள் வெளிப்படுகிறது.
Read Also -> பெற்றோரை கைவிட்ட மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை
அன்போ, வெறுப்போ, பகையோ, காதலோ முழுவதும் சரியான உணர்ச்சியில் கைமாறியதே கடிதத்தின் வெற்றி. எத்தனை தொழில் நுட்பங்கள் வந்தாலும் கடிதத்தின் விசாரிப்புகளுக்கு இணையாக முடியாது. தற்போதைய தொழில் நுட்ப தகவல் பரிமாற்றம் எல்லாம் கை நீட்டினால் இடிக்கும் கல்சுவற்றில் பதித்த ஷவரில் குளிப்பது போல. கடிதத்தின் விசாரிப்புகள் சாரல் பறக்கும், பாறை பட்டு தெரிக்கும் மூலிகை வாசம் கொண்ட அருவியில் குளிப்பது போல. அத்தனை எதார்த்தமானது.
நம்ம ஒத்தக்கொம்பு பசு மாடு கன்னு போட்டுச்சா? என்ற அன்பின் விசாரிப்புக்கு, இன்னும் இல்லை. நீ அடுத்த கடிதம் எழுதுவதற்குள் கன்னு போட்டுடும் என்ற பதிலெல்லாம்தான் கடிதத்தின் நாடித்துடிப்பு. ஒரு கடிதத்திற்கான காத்திருப்பில் பெருக்கெடுத்த அன்பும், காத்திருப்பின் சுகமும் அலாதியானது.
பல ஆண்டுகளுக்கு முன் வந்த கடிதத்தை என்றோ ஒரு இரவில் மீண்டும் படித்து அதன் நினைவுகளோடு இரவை கழிக்கும் சுகமெல்லாம் இன்றைய தலைமுறைக்கில்லை. தினந்தோறும் விசாரிக்கப்படும் அன்பு விசாரிப்புகள் எல்லாம் அன்றன்றோடு காற்றில் கலந்துவிடுகின்றன. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. திருமண அழைப்பிதழ்கள் வாட்ஸ் அப்பில் பறந்து வருகின்றன. காலங்களின் மாற்றங்களை ஏற்றுக்கொண்டாக வேண்டும். 96 திரைப்பட பாடலின் பாடல்வரியைப் போல மாற்றங்களே வினா மாற்றங்களே விடை.