புரட்சி.. உத்வேகம்... செயல்திறன் ! வீரத்துக்கு ஊற்றான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!

புரட்சி.. உத்வேகம்... செயல்திறன் ! வீரத்துக்கு ஊற்றான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!
புரட்சி.. உத்வேகம்... செயல்திறன் ! வீரத்துக்கு ஊற்றான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!

ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டக்காலத்தில் அஹிம்சை மூலம் ஆங்கிலேயருக்கு எதிராக காந்திஜி களம் இறங்கினார். அதற்கு நேர் எதிராக இளைஞர்களை ஒன்று சேர்த்து, ஆயுதங்களை தாங்கி புரட்சிப் படையை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி. இளைஞர்களே உங்களது ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று மேடையில் அனல் பேச்சை வீசிய வங்கத்துச்சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் இன்று.


ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்த நேதாஜி பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வியும் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி மற்றும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் படித்தார். கல்லூரியில் படிப்பு என்ற புத்தகப்புழுவாக மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கான படைப்பயிற்சியில் கலந்து கொண்டு சிறந்த மாணவனாக தேறினார்.


ஐசிஎஸ் தேர்வில் வெற்றியடைந்தார் நேதாஜி. ஆனால் ஆங்கிலேயருக்கு மண்டியிட்டு செய்யக்கூடிய வேலையை என்னால் செய்ய முடியாது என்று சீறிய நேதாஜி அந்த வேலையை தூக்கிவீசினார். ஒரு மதிப்புமிக்க வேலையை தூக்கி எறிகிறாயே? உன் பெற்றோர்கள் இதை நினைத்து வருந்துவார்களே என்று கேட்டார் ஒரு அதிகாரி. அதற்கு பதிலளித்த நேதாஜி, ஆமாம் என் தாய் தந்தைக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது என்றுக்கூறி சுதந்திர போராட்டத்தில் தன் காலடியை பதித்தார் நேதாஜி.


நேதாஜியின் வேட்கையை கல்லூரியிலேயே கண்ட சி. ஆர். தாஸ், நேதாஜிக்கு தன்னுடைய தேசியக் கல்லூரியின் தலைவர் பொறுப்பை கொடுத்தார். அப்போது நேதாஜிக்கு வயது 25. பற்ற ஏங்கி நிற்கும் மாணவர்களுக்கு இடையே நெருப்பு பொறியாய் விழுந்தார் சுபாஷ் சந்திர போஸ். வார்த்தைகளில் உற்சாகம், ஒவ்வொரு பேச்சிலும் கக்கிய அனல் மாணவர்களை உத்வேகப்படுத்தியது. நேதாஜியின் பெயர் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.


கொல்கத்தாவில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கி வெற்றிகரமாக செய்து வந்த நேதாஜிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. தங்களுக்கு தலைவலியாக நேதாஜி உருவெடுத்ததை உணர்ந்த ஆங்கில அரசு அவரை பொய்க்காரணங்களை கூறி சிறையில் அடைத்தது. ஆனால் நல்ல தலைவனின் வெற்றிக்கு தலைவன் எதிரே நிற்கத்தேவையில்லை அவரின் பெயர் ஒன்றே போதும் என்பதற்கு ஏற்ப சிறையில் இருந்தபடியே சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றார் நேதாஜி. நேதாஜி என்ற பெயரை மக்கள் எவ்வளவு நம்பினார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.


நேதாஜி. ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம், சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையம், நாட்டுக்கெனத் தனிக் கொடி, ஜன கணமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தது, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியது, ஜான்சி ராணிப் படை என பெயரிட்டு பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தியது என நேதாஜியின் ஒவ்வொரு அடியும் ஆங்கிலேய அரசுக்கு மரண அடியாக விழுந்தது.


1945 ஆகஸ்ட் 18-ஆம் தேதி விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால், அவரின் மரணம் குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் எழுந்தன. வீட்டுச்சிறையில் அடைத்து ஆங்கிலேயர்கள் காத்து நின்ற போதே காற்று போல தப்பித்து ஜெர்மனியில் தஞ்சம் அடைந்த மாவீரன் விமான விபத்தில் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என மக்கள் பேசினர். அதற்கு வலு சேர்க்கும் விதமாக நேதாஜி இறக்கவில்லை. அவர் சரியான தருணத்தில் வருவார். என்னோடு தொடர்பில் இருக்கிறார் என்று முழங்கினார் நேதாஜியின் நெருங்கிய நண்பரான பசும்பொன். முத்துராமலிங்கத்தேவர்.

நேதாஜி இல்லாவிட்டாலும் அவர் பெயர் ஒலிக்காத மேடைகளே இல்லை. அவர் கூறிய வார்த்தைகள் இந்தியாவில் எங்கெங்கும் எதிரொலித்தது. அவர் பெயரை சொல்லிக்கொண்டாலே ஏதே உத்வேகம் பிறப்பதாக மக்கள் உணர்ந்தனர். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதன் முதலில் உச்சரித்த வீரத்தலைவன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் இன்று.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com