சோஷியல் மீடியாவுல இவரு இல்ல, இவரு இல்லாம சோஷியல் மீடியாவே இல்ல!

சோஷியல் மீடியாவுல இவரு இல்ல, இவரு இல்லாம சோஷியல் மீடியாவே இல்ல!
சோஷியல் மீடியாவுல இவரு  இல்ல, இவரு இல்லாம சோஷியல் மீடியாவே இல்ல!

இன்றைய தலைமுறையின் பொழுதுபோக்கே சமூக வலைத்தளங்கள்தான். பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என எந்தப் பக்கம் போனாலும் ஒன்றை மட்டும் நாம் தவிர்க்க முடியாது. அது மீம்ஸ். திரைப்படம், அரசியல், விளையாட்டு, அவ்வப்போதைய ட்ரெண்டிங் என மீம்ஸ்களில் அடங்காத டிபார்ட்மெண்டே இல்லை எனலாம். போட்டோ மீம்ஸ் என்பது உருமாறி வீடியோ மீம்ஸ் ஆகிவிட்டது. மீம்ஸ் எந்த வகையிலும் உருமாறலாம். ஆனால் மீம்ஸ்களின் மையப்புள்ளியாக ஒருவர் இருக்கிறார். மீம்ஸ் இயங்கிக்கொண்டிருப்பதே இவரால் என்றுக்கூட சொல்லலாம். மீம் கிரியேட்டர்ஸ்களின் தலைவன் வடிவேலு.

ஏண்டா எல்லாரும் சூனாபானா ஆகிட முடியுமா என்ற வடிவேலுவின் டெம்பிளேட்டுக்கு தகுந்தவர் தான் வடிவேலு. மீம்ஸ்களின் சூனாபானா அவர்.

சமூக வலைத்தளங்களில் ஒரு ரவுண்ட் வந்தால் வடிவேலுவின் முகத்தை தவிர்க்க முடியாது. சினிமாக்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அடுத்த நிமிடங்களில் வடிவேலு வெர்சன் வந்து விடுகிறது. ஒரு படிக்கு மேலே போன சூப்பர் டீலக்ஸ் படக்குழு அவர்களே வடிவேலு வெர்சனையும் வெளியிட்டார்கள். ஃபர்ஸ்ட் லுக் மட்டுமில்லை டீசர், ட்ரெய்லர் என எது வந்தாலும் அதனுடைய வடிவேலு வெர்சன் ஆன் தி வேயில் இருக்கும். அன்றன்றைய அரசியல் நிகழ்வுகள், அரசியல் தலைவர்களின் பேட்டிகள் என எல்லா ஏரியாக்களிலும் வடிவேலு வெர்சன் தாறுமாறு செய்யும்.

வடிவேலுவிடம் இருந்து தனிநபர்களும் தப்பிக்க முடியவில்லை. டிஎஸ்எல்ஆரில் எடுத்த கேண்டிட் போட்டோவை வெறித்தனமாக அப்லோட் செய்த அடுத்த நிமிடத்தில் வடிவேலுவின் ஏதோ ஒரு கலாய் போட்டோவை கமெண்ட் செய்து விடுகிறார்கள் நம் உயிர் நட்புகள். சில நேரம் வடிவேலுவின் டெம்பிளேட்டை வைத்தே வடிவேலுவை பாசிட்டிவாக காலாய்க்கிறார்கள்.

இப்போதைய ட்ரெண்ட் பாடல்களின் வடிவேலு வெர்சன் தான். கவிஞர்கள் உருகி உருகி எழுதிய பாடல் வரிகளுக்கெல்லாம் வடிவேலுவின் ஏதோ ஒரு கெட்டப்பை பொருத்தி விடுகிறார்கள் நம் எம்சிஸ். அதை பார்க்கும் போதெல்லாம் நமக்கு தோன்றும் ஒரே ஆச்சரியம் என்னெவென்றால் எல்லா வரிகளுக்கும் இந்த மனுஷன் பொருந்தி போறான்யா என்பது தான். 

சமூக வலைதளங்கள் மட்டுமில்லை. இரண்டு நண்பர்கள் கூடி பேசி சிரிக்கும் போதும் கூட வடிவேலுவை நாம் ஒதுக்க முடியாது. ஏதோ ஒரு வடிவேலுவின் டயலாக்கை அவரின் மாடுலேசனிலேயே சொல்லி நாம் கலாய்த்து சிரிக்கிறோம். ஏதோ ஒரு சம்பவத்தை வடிவேலுவின் நகைச்சுவையோடு ஒப்பிட்டு பேசுகிறோம். அரசியல் தலைவர்கள் தங்களின் பரஸ்பர குற்றசாட்டுகளுக்கு கூட வடிவேலுவின் காமெடியை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

சில வருடங்களாக வடிவேலுவை நாம் திரையில் அதிகம் பார்க்க முடியவில்லை என்றாலும் காலையில் கண் விழிப்பது முதல் இரவு தூங்கும் வரை வடிவேலுவை நாம் பல வெர்சனில் பார்த்துவிடுகிறோம். இதுவரை அவர் நடித்துள்ள படங்களும், அதன் கேரக்டர்களுமே இன்னும் பல வருஷங்களுக்கு தாங்கும் என்றாலும் மீம் கிரியேட்டர்ஸ்களின் தலைவன் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் கூட.

சோஷியல் மீடியாவில் வடிவேலு இல்லை. ஆனால் வடிவேலு இல்லாமல் சோஷியல் மீடியாவே இல்லை என்பது தான் இன்றைய நிலை. வடிவேலுக்கு இன்றுக்கு பிறந்தநாளா இல்லையா என்பதெல்லாம் அடுத்த கதை. அவரை நாம் எப்போது வேண்டுமானாலும் கொண்டாடலாம்.

ஆக இந்த கட்டுரையையே வடிவேலுவின் டயலாக்கில் முடித்துவிடுவோம். ''அதனால மாப்பு இத்தோட ரீலு ஸ்டாப்பு''.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com