இந்தியாவிற்கு படையெடுக்கும் ஹாலிவுட் இயக்குநர்கள் - சிகப்பு கம்பள வசதி
இந்திய சினிமாவில் எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது. படத்தின் கதையை முழுக்க இந்தியாவில் செட் போட்டு எடுப்பார்கள். ஆனால் பாடல்களை எடுக்க வேண்டுமா? மூட்டை முடிச்சுக்களை கட்டிக் கொண்டு அப்ராட் (abroad) போய் விடுவார்கள். ஏனெனில் அங்குதான் அழகழகா காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன என்பது நமது இந்திய இயக்குநர்களின் நம்பிக்கை. தமிழ் சினிமாவில் படத்தின் நாயகன் ‘குப்பத்தில்’ வாழ்ந்தாலும் ஒரு பாட்டாவது வெளிநாடு போய் அவசியம் எடுத்தாக வேண்டும். அப்போதான் திரை ரசிகர்களுக்கு அந்தக் காட்சிகள் தித்திப்பாக இருக்கும்.
இளையராஜா காலத்து பாடல்கள் இந்த விதிமுறைகள் பொருந்தாது. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்றால் அவசியம் ஹாலிவுட் காட்சிகள் இருக்கும். ரஹ்மான் பற்றி சொல்லவே வேண்டாம் . அவர் தமிழ் சினிமாவுக்கு வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டுதான் இசையையே கம்போஸ் செய்கிறார். இந்தியாவில் இருந்து இசைக் கருவிகளை எடுத்து போகும் போது பெரிய அளவிற்கு கெடுபிடிகள் இருப்பதில்லை. ஆனால் வெளிநாட்டு இயக்குநர்கள் பெரிய பெரிய தொழில்நுட்ப சாதனங்களுடன் இந்தியாவிற்கு வருவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
சுருக்கமாக சொன்னால் சினிமா உலகத்தை பொருத்தவரை நமது இந்திய சினிமா இதயமே வெளிநாட்டில்தான் இருக்கிறது. அப்படித்தான் பெரும்பாலான இயக்குநர்கள் நினைத்து கொண்டு வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறார்கள். ஆனால் ஹாலிவுட் இயக்குநர்களின் நிலைமை அப்படி இல்லை. இந்தியாவிற்கு வந்து படம் எடுப்பது என்றால் அவர்களுக்கு இங்கே ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கின்றன. ஆகவே அவர்களால் ஒரே ஒரு ஸ்லம் டாக் மில்லினியர்தான் எடுக்க முடிந்திருக்கிறது. ஆகவே அவர்கள் இந்தியாவிற்கு வந்து சினிமா எடுக்க தயங்குகிறார்கள்.
இந்திய சினிமாவில் வெளிநாடுகள் பதிவான அளவுக்கு வெளிநாட்டுப் படங்களில் இந்தியா சார்ந்த காட்சிகள் இடம் பெறவே இல்லை. அப்படியே இருந்தாலும் ஏதோ கொஞ்சம் போல அங்கிங்கு தொட்டுக் காட்டி இருக்கிறார்கள். ஆனால் இந்த நிலை எல்லாம் பழைய கதையாகி இருக்கிறது என்பதுதான் இன்றைய நிலவரம்.
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவை நோக்கி ஹாலிவுட் இயக்குநர்கள் படம் எடுக்க வர ஆரம்பித்துள்ளனர் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை செய்தி. இதற்கு என்ன காரணம்? வெளிநாட்டு படங்களை இந்தியாவில் படம்பிடிப்பதற்கான கெடுபிடிகள் தளர்த்தப்பட்டதுதான். முன்பை போல படம் எடுக்க வேண்டும் என அனுமதிக் கேட்டு பல காலம் அப்படியே காத்திருக்க தேவையில்லை. இப்போது டிஜிட்டல் முறையில் சகல அனுமதியும் உடனே கிடைத்து விடுகிறது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் ஹாலிவுட் இயக்குநர்கள்.
வெளிநாட்டு இயக்குநர் ஒருவர் இந்தியாவில் சினிமா எடுக்க வேண்டும் என கேட்டு விசா அனுமதி வேண்டினால் உடனடியாக film facilitation office செய்து கொடுத்து விடுகிறது என்றும் கூறுகிறார்கள் ஹாலிவுட் இயக்குநர்கள். இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 31 அயல் நாட்டு படங்களுக்கு அனுமதி விரைவாக கிடைத்திருக்கிறது. Ministry of Information and Broadcasting அமைச்சர்கள் அதற்கான எளிய விதிமுறைகளை வகுத்து சிறப்பாக செயல்பட தொடங்கி இருக்கிறார்கள் என அனுமதி கேட்டு விண்ணப்பித்த ஹாலிவுட் இயக்குநர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
‘ஸ்லம்டாக் மில்லினியர்’, ‘லைன்’ போன்ற படங்களை எடுத்த இந்திய தயாரிப்பாளர் பரவேஷ் ஷானி இதனை உறுதி செய்துள்ளார். “film facilitation office பல வழிமுறைகளை எளிதாக்கியதால் பல ஹாலிவுட் இயக்குநர்கள் இந்தியாவில் படங்களை ஷூட் செய்து வருகிறார்கள்” என்கிறார்.
கடந்த மாதம் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan) விரைவில் திரைக்கு வர உள்ள ‘டெனெட்’ படத்தை இந்தியாவில் வைத்து படப்பிடிப்பு செய்து சென்றுள்ளார். இவர் இந்தப் படத்தை எடுப்பதற்கு அனுமதி கேட்ட ஒருவாரத்தில் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் இந்திய தயாரிப்பாளர் திலிபன் சிங் ரத்தோர், “சமீபத்தில்தான் கிறிஸ்டோபர் நோலன் படத்தின் ஏழுநாட்கள் படப்பிடிப்பை இந்தியாவில் நிறைவு செய்தோம். வெளிநாட்டில் இருந்து ஐமாக்ஸ் கேமிராக்களை கொண்டுவரவும் பல அதிநவீன சாதனங்களை எடுத்து வரவும் உடனடியாக எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சிலர் கடந்த காலங்களில் விசா பெறுவதற்கும் அனுமதி வாங்குவதற்கும் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். இப்போது ஹாலிவுட் இயக்குநர்களை இந்தியா சிவப்பு கம்பளம் விரிந்து வரவேற்று வருகிறது. ” என்கிறார்.
மேலும் ‘ஹோலேன்ட்’ போன்ற அமெரிக்க டிவி த்ரிலர் சீரியல்கள் எடுக்க அனுமதி கேட்ட போதும் இந்திய ரயில்வே துறை, விமான நிலையம் என பலவற்றிலும் உடனடியாக அனுமதியை கேட்டு பெற்றோம் என்கிறார் ரத்தோர். முன்பு எல்லாம் ரயில்வே, விமானநிலையத்தில் படங்களை எடுப்பதற்கு பயங்கர கெடுபிடிகள் இருந்துள்ளன என்பது பல ஹாலிவுட் தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு. ஆனால் அவை அனைத்தும் இப்போது சுலபமாகி விட்டன என்பது இவர்களின் கருத்து. இந்த மாற்றத்தால் இரண்டு மில்லியன் வருவாய் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது என்று இவர்கள் கூறியுள்ளனர்.
“சில வருடங்களுக்கு முன் Dark knight Rise படத்திற்காக ஏரியல் வீவ் எடுக்க வேண்டிய சில காட்சிகள் இருந்தன. ஹெலிக்காப்டரில் இருந்து அந்தக் காட்சிகளை எடுக்க திட்டமிட்டோம். அதற்காக அனுமதி கேட்டு சில மாதம் முன்பே விண்ணப்பித்தோம். ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவே இல்லை. இந்த முறை ‘டெனெட்’ படத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த உடனேயே கிடைத்து விட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார் ரத்தோர்.
இது குறித்து பேசிய அலன் மேக் அலெக்ஸ், “ஒரு படத்தின் கதைதான் களத்தை தீர்மாணிக்கிறது, ஆகவே ஹாலிவுட் இயக்குநர்கள் இந்தியாவை தீர்மானிக்கிறார்கள். என்னால் நிச்சயமாக சொல்ல முடியும், பல ஹாலிவுட் இயக்குநர்கள் இந்தியாவிற்கு வந்து திரைப்படங்களை எடுக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்தியா அது குறித்து இன்னும் சரியான இலக்கை உருவாக்கவில்லை. தற்போது கொஞ்சம் மாறியுள்ளது” என தெரிவித்துள்ளார்.