பணம் பண்ண ப்ளான் B - 12: வருமான வரி சேமிப்பில் செய்யும் தவறுகளும், கடைசிநேர நெருக்கடியும்!
சிலருக்கு சில பழக்கங்கள் இருக்கக் கூடும். கடைசி நேர நெருக்கடியில் வேலை செய்தால்தான் அவர்களின் மொத்தத் திறனும் வேலைசெய்யும். இன்னும் புரியும்படி சொல்வதென்றால், பரீட்சைக்கு முந்தைய நாள் படிப்பதுபோல. ஆனால், அனைத்து சமயங்களிலும் கடைசி நேரடி நெருக்கடியை நம்மால் சரியாக கையாள முடியாது. அதில் ஒன்று, வரி சேமிப்பு. ஜனவரி / பிப்ரவரி மாதம் அலுவலக அக்கவுண்ட்ஸில் இருந்து வரி சேமிப்பு குறித்த தகவல் கேட்கும் வரை வரி சேமிப்பு குறித்து எந்த சிந்தனையும் இருக்காது.
அலுவலகத்தில் இருந்து நெருக்கடி வந்த பிறகுதான் வருமான வரி சேமிப்பு குறித்து திட்டமிடுவார்கள். இதில் பல தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
கடன் வாங்கி சேமிப்பது: ஆண்டுக்கு சுமார் ரூ.2.5 லட்சம் வரையில் வரியை சேமிக்க முடியும். ஆனால், நிதி ஆண்டின் தொடக்கத்தில் மாத சம்பளத்தை முழுவதும் செலவு செய்துவிட்டு, நிதி ஆண்டின் இறுதியில் வரியை சேமிக்கவேண்டும் என்னும் எண்ணம் வரும். அப்போது பிஎஃப், குழந்தைகளின் கல்விக் கட்டணம் என சில ஆயிரங்கள் எப்படி இருந்தாலும் வரி விலக்கு பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிலையில், வரிவிலக்கு பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி முதலீடு செய்வார்கள். சுமார் 10,000 ரூபாயை சேமிப்பதற்காக ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு கடன் வாங்குவார்கள். இங்கிருந்து தவறு தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் வரி சேமிப்புக்கு திட்டமிடாமல், கடைசி நேரத்தில் திட்டமிடுவதால் கடன் வாங்க வேண்டி இருக்கிறது.
அவசர காலத்தில் முதலீடு செய்ய வேண்டி இருப்பதால், இந்தத் தொகை எப்படி முதலீடு செய்யப்படுகிறது என்பதில் அடுத்த தவறு தொடங்குகிறது.
தவறான திட்டங்கள்: கடைசி நேரத்தில் திட்டமிடுவதால் எந்தத் திட்டம் சரியானது என்னும் தேடல் இல்லாமல், எந்தத் திட்டத்துக்கு வரி விலக்கு கிடைக்கிறது என்பதை மட்டுமே பார்க்கிறோம். நமக்கான தேவைகள் என்ன, நமக்கான இலக்குகள் என்ன, எதிர்கால திட்டங்கள் என்ன என அனைத்தையும் உள்ளடக்கியதுதான் முதலீடு. ஆனால், வரி சேமிப்பில் இந்த அனைத்தும் காணாமல் போய், வரி விலக்குக்கு மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அதனால், தவறான புராட்க்ட்களில் முதலீடு செய்கிறோம்.
ஒருவருக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் போதுமானது. பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, வரி சேமிப்புகாக யுலிப் திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.
தவிர, வரி சேமிப்புக்காக முதலீடு செய்யப்படும் அனைத்து திட்டங்களும் நீண்ட கால திட்டங்களே. பிபிஎஃப், யுலிப், காப்பீடு, டெபாசிட், இஎல்எஸ்எஸ் மியூச்சுவல் பண்ட்கள் என அனைத்தும் நீண்ட கால திட்டங்கள். நீங்கள் நினைத்தவுடன் இந்தத் திட்டங்களில் இருந்து வெளியேற முடியாது. குறுகிய காலத்தில் கிடைக்கும் என முதலீடு செய்திருந்தாலும் உங்களது நிலைமையை மேலும் சிக்கலாகும்.
லாபத்துக்கு கிடைக்கும் வரி: பெரும்பாலானவர்கள் முதலீட்டின் மீது கிடைக்கும் வரி விலக்கு குறித்து மட்டுமே சிந்திக்கிறார்கள். உதாரணத்துக்கு, வரி விலக்கு ஃபிக்சட் டெபாசிடில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் வரி விலக்கு பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்த முதலீட்டின் மீது கிடைக்கும் வட்டியை வருமானமாக கருதி வரி செலுத்த வேண்டி இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்கிறீர்கள். அடுத்தாண்டு 6000 ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கிறது என்றால், இந்த தொகை (ரூ.6000) வருமானமாக கருதப்படும். ஒருவேளை நீங்கள் 30% வரி வரம்புக்குள் இருந்தால் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும். ஒருவேளை சுகன்யா சம்ரிதி திட்டத்திலோ அல்லது பிபிஎஃப் திட்டத்திலோ முதலீடு செய்தால் கிடைக்கும் முதிர்வு தொகைக்கு வரி கிடையாது. இதுபோல முதலீட்டுக்கு கிடைக்கும் லாபத்துக்கு வரி செலுத்த வேண்டி இருக்கும். பலரும் இதனை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
80 டி: வரி விலக்கு என்றாலே 80சி பிரிவு மட்டுமே அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் 80 டி பிரிவின் கீழ் காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியத்துக்கும் வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம். மூத்த குடிமக்களின் காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியத்துக்கும் வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தப் பிரிவுகளை பலரும் பொருட்படுத்துவதில்லை.
என்ன செய்யலாம்? - வரி திட்டமிடலை நிதி ஆண்டின் இறுதியில் தொடங்குவதைவிட, தொடக்கத்திலே தொடங்குவது நல்லது. தவிர நிதி ஆலோசகருடன் விவாதித்து உங்களது தேவைகளுக்கு ஏற்ற நிதி திட்டங்களை கண்டறிவது அவசியமானது. அதைவிட முக்கியம் ஒவ்வொரு மாதம் வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் பட்சத்தில், ஆண்டு இறுதியில் சுமை குறையும். மேலும் அனைத்து திட்டங்களிலும் (கடன் சந்தை மற்றும் பங்குச்சந்தை) சரி சமமாக முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகும்.
தினமும் படிக்கும் பட்சத்தில், பரீட்சைக்கு முந்தைய நாள் படிக்க தேவை இருக்காது. என்ன படித்திருக்கிறோம் என்பதை திரும்பி பார்த்தால்போதும். அதே தியரிதான் இங்கேயும். ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்தால் நிதி ஆண்டு முடிவில் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறோம் என்பதை எளிதாக கண்டறியலாம்.