அம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி !

அம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி !

அம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி !
Published on

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படுவது நெல்லை பாளையங்கோட்டை தான். அதிகமான பள்ளி மற்றும் கல்லூரிகளை கொண்டது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இங்கு வந்து தான் மாணவ, மாணவியர் அதிகம் கல்வி பயின்று வருகின்றனர். இந்தச் சூழலில் நெல்லையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கு எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும் வயல்வெளிகள், இவ்வளவு அழகுமிக்க கிராமத்தில் பல பள்ளிகள் இருந்தாலும் அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது. 

1960 ம் ஆண்டுக்கு முன்பிருந்தே செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் கடந்த 3 வருடங்களாக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. மேலும் தனியார் பள்ளியின் விளம்பரத் தாக்கம் அதிகரித்தன் காரணமாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளியில் உள்ள 7 ஆசிரியர்களும் மாதந்தோறும் தங்களது சம்பத்தில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை பள்ளியின் வளர்ச்சிக்கு ஒதுக்குவது என முடிவு செய்து அதன் மூலம் மாதம் 14 ஆயிரம் ரூபாயை கணக்கில் சேமித்து வருகின்றனர்.

இதில் தொலை தூர மாணவ, மாணவியரை பள்ளிக்கு அழைத்து வருவதற்கான ஆட்டோ கட்டணங்களை செலவழிக்கின்றனர். மேலும் மழலையர் வகுப்பு ஆசிரியர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு பணிக்கு ஒரு பெண் ஆகியோரை நியமித்து அவர்களுக்கு மாத ஊதியமும் கொடுத்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு தேவையான மேசை, இருக்கைகள் ஆகியவற்றுக்கும் செலவு செய்கின்றனர். சுத்திகரிக்கபட்ட குடிநீர், தேவையான கழிப்பறை வசதிகள் மற்றும் கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தி வைத்துள்ளனர். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி கற்று தருகின்றனர். வெறும் சுவர்களை வண்ண ஓவியங்களாக மாற்றி பள்ளியின் தோற்றத்தை அழகுபடுத்தியுள்ளனர்.  சாலையில் இருந்து பள்ளியின் தரைத்தளம் தாழ்வாக இருந்ததால் மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி சாக்கடை நீரும் கலப்பதால் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்துள்ளனர், இந்த நிலையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் பிரதான நுழைவு வாயில் கதவு உயர்த்தியுள்ளனர். 

மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டி பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக “ஐ கேன் ஸ்கூல் சேஞ்ச்”  என்ற அமைப்பு நடத்திய அகில இந்திய அளவிலான “டிசைன் ஃபார் சேஞ்ச் அவார்டு” போட்டியில் விருதை பெற்றுள்ளனர்.

 2013 -14 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுசூழல் செயல்பாட்டு பள்ளிக்கான தமிழக அரசின் விருது மற்றும் 10 ஆயிரம் ஊக்கத்தொகையும் பெற்றுள்ளனர்.  மேலும் நெல்லை புத்தகத் திருவிழாவில் “சுத்தம் புத்தகம் தரும்” போட்டியில் வெற்றி பெற்றதால் 7 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பள்ளிக்கு அளித்துள்ளார். இது போன்று பல்வேறு வளர்ச்சிகளால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக அதிகரித்து உள்ளதாக மகிழ்ச்சி  தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.

கல்வியுடன் சேர்த்து விளையாட்டு, காய்கறி தோட்டம் அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் போன்றவற்றை கற்று கொடுத்து வருவதால் அது மாணவர்களுக்கு  மிகச்சிறந்த ஊக்குவிப்பாக அமைவதாகவும் தெரிவிக்கின்றனர், பொதுமக்களுக்கு அரசு பள்ளி மீது இருக்கும் தவறான பிம்பத்தை உடைப்பதற்காகவே ஆசிரியர்களான நாங்கள் பாடுபட்டு வருகின்றோம் எனவும் பெருமிதம் கொள்கின்றனர்....

50 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் தற்போது கல்வி கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வந்தாலும் மிகவும் பழமையான ஓட்டு கட்டிடத்தில் தான் இந்த பள்ளி இயங்கி வருகிறது, இது மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதற்காக, ஒரு சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இந்த பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர் என்ற வருத்தமும் ஆசிரியர்களிடம் உள்ளது.  

தற்போது மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரியாக அர்ப்பணிப்புடன் செயல்படும் இந்த  ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், பள்ளியின் முக்கிய தேவையான பழைய ஓட்டு கட்டிடங்களை மாற்றி புதிய கட்டிடமாக கட்டி  தர வேண்டும் என்றும், மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com