ஐபிஎல் வரலாற்றில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனைகள்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனைகள்
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனைகள்

ஐபிஎல் 2021 சீசன் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் செப்டம்பர் 19-இல் துவங்கி அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே அனைத்து வீரர்களும் அமீரகம் சென்றுவிட்டனர். அங்கு கட்டாய 6 நாள் தனிமைப்படுத்தலுக்கு பின்பு வீரர்கள் தங்களது பயிற்சிகளை தொடங்கியிருக்கின்றனர்.

ஐபிஎல் இரண்டாவது பாதி போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் வரும் சனிக்கிழமை மோதுகின்றன. இந்தியாவில் நடைபெற்று நின்றுபோன ஐபிஎல் மீண்டும் தொடங்க இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் டி20 திருவிழாவை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள். இந்நிலையில் 14 ஆண்டுகள் ஐபிஎல் டி20 வரலாற்றில் பல முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டு இருக்கிறது. அதில் இதுவரை முறியடிக்கப்படாத மூன்று முக்கிய சாதனைகள் குறித்து பார்க்கலாம்.

ஒரே சீசன்... ஓஹோ ரன்கள் - விராட் கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனான விராட் கோலி, இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. ஆனால் பேட்டிங்கில் அற்புதமான சாதனையை படைத்திருக்கிறார். அந்தச் சாதனையை இன்னும் எந்தவொரு வீரரும் முறியடிக்கவில்லை என்பதுதான் ஸ்பெஷல். 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது அந்த சீசனில் மட்டும் 973 ரன்களை எடுத்தார் விராட் கோலி. ஏறக்குறை 1000 ரன்களை நெருங்க கோலிக்கு வாயப்பு இருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த சீசனில் 4 சதங்களை விளாசினார். இப்போது வரை எந்தவொரு பேட்ஸ்மேனும் இந்தச் சாதனையை நெருங்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு.

'சிக்ஸர் சூறாவளி' கிறிஸ் கெயில்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக ரன்களை அடித்த பெருமைக்கு சொந்தக்காரர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில். 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது ஆர்சிபி அணிக்காக விளையாடிய கெயில், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 175 ரன்களை விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 17 சிக்ஸர்களும் அடங்கும். ஐபிஎல் தொடரில் இதுவரை அடிக்கப்பட்ட தனி நபர் ரன் இது மட்டுமே. மொத்தம் 66 பந்துகளை சந்தித்த அவர் 175 ரன்களை குவித்தது இதுவரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இப்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கிறிஸ் கெயில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருமுறை ஹாட்ரிக் - யுவராஜ் சிங்

2007 டி20 உலகக் கோப்பையின் பேட்டிங் ஹீரோவான யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனைப்படைத்தவர். ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய யுவராஜ் முதலில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும், பின்பு புனே வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். ஐபிஎல்லில் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் சாதனைப் படைத்திருக்கிறார் யுவராஜ். அதாவது 2009 இல் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். பின்பு அதே சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ஹாட்ரிக்கை கைப்பற்றினார். இந்தச் சாதனையும் இன்னும் ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கப்படாமல் கெத்தாக இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com