அறச்சீற்றத்தின் உச்சம்! தமிழ்ச் சமூகத்தை நீதிக்கூண்டில் நிறுத்தி சாட்டையடி கொடுத்த புதுமைப்பித்தன்!

ஆம், உண்மையில் அவர் புதுமையின் பித்தன்தான்!
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன்file image

ஆம் உண்மையில் அவர் புதுமையின் பித்தன் தான்!

புதுமைப்பித்தன் அவர் பெயர். உண்மையில் அவர் புதுமையின் பித்தன்தான். தமிழ் சிறுகதை உலகின் பிதாமகனான அவர் யதார்த்த வாழ்வின் உண்மைகளை உரக்கச் சொல்லி மூடத்தன்மைக்கும், மனிதகுலத்திற்கு ஒவ்வாத, மனிதத் தன்மை அற்றவைகளுக்கு எதிராக கலகக் குரல் கொடுத்தார். அவரின் எழுத்துக்கள் ஒருவித பாய்ச்சலில் இருக்கும். நான்கு வரிகளில் எழுத வேண்டியதை இரண்டே இரண்டு வரிகளில் சொல்லி முடித்துவிட்டு அடுத்ததை சொல்லிக்கொண்டே செல்வார். அவ்வளவு வேகம்.

வார்த்தைகளில் அர்த்தம் அவ்வளவு அடர்த்தியாக இருக்கும். மூன்று, நான்கு பக்கங்களிலே நம்மை உலுக்கிப் போடும் அளவுக்கு ஒரு கதையைச் சொல்லிவிடுவார்.

வார்த்தைகள் சுடும் நெருப்பைப்போல..!

புதுமைப்பித்தன் யாருக்கும், எதற்கும் அஞ்சி எழுதாமல் இருந்ததே இல்லை. தமக்கு சரி என்று பட்டதை சரி என்று சொல்வதற்கோ, தவறு என்று பட்டதை கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்பதற்கோ, ஒருபோதும் அவர் தயங்கியதே இல்லை. அவரது வார்த்தைகள் சுடும் நெருப்பைப்போல இருக்கும். நெஞ்சில் தைத்த முள்ளாய் அவர் முன்வைக்கும் கேள்விகளும், தத்துவ விசாரணைகளும் நம் நெஞ்சில் நீங்காமல் துளைத்துக் கொண்டே இருக்கும்.

தன்னுடைய கதைகளில் வறுமை, வரதட்சணைக் கொடுமை, சாதியக் கொடுமைகள் எனப் பல விஷயங்களை தோலுரித்துக் காட்டியிருப்பார் புதுமைப்பித்தன். பொன்னகரம், துன்பக் கேணி, கொடுக்கா புளி போன்ற கதைகள் அதற்கு உதாரணங்கள்.

கதையெல்லாம் தனி ரகம்தான்!

உளவியல் ரீதியாக கதாபாத்திரங்களை அணுகுவதில் வல்லவர். இரு வெவ்வேறு மனநிலை கொண்டவர்களை விவாதம் செய்ய வைத்து இருதரப்பு வாதங்களை உண்மையாக வைப்பார். ஒரு கதையில் நாத்திகம் பேசும் டாக்டரையும், ஆத்திகம் பேசும் ஆன்மிகவாதியையும் உரையாட வைத்திருப்பார். இருவரும் உரையாடிய பின்னர், நாத்திகம் பேசிய டாக்டர் முனிவராகவே சென்றுவிடுவார். எவ்வளவு பலவீனமாக தன்னுடைய கருத்தில் இருக்கிறார்கள் என்பதை காட்டியிருப்பார். கடவுளும் கந்தசாமியும் கதையில், கடவுளையே பூலோகத்திற்கு அழைத்து வந்து யதார்த்த வாழ்க்கை இதுதான் என்று பாடம் எடுத்திருப்பார். அவரது கதைகள், பெரும்பாலும் நெல்லை மற்றும் சென்னையைக் கருவாகக் கொண்டிருக்கும். சென்னை வாழ்க்கையில் ஏழை மக்கள் படும் நிலைமையையும், நடுத்தர மக்களின் அவலநிலையையும் காட்டியிருப்பார். இயந்திர யுகம் கதையெல்லாம் தனி ரகம்தான். பழமையை கேள்விக்கு உட்படுத்துவதோடு, நவ நாகரீகத்தையும் கேள்விக்கு உட்படுத்துவார்.

ஒரு கிராமத்தின் வடிவத்தை கண் முன் காட்டிவர்!

புதுமைப்பித்தன் தன்னுடைய கதைகளில் கதைமாந்தர்களுக்கும் அவர்களின் மனோநிலைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அதேபோல், கிராம சமூகச் சூழலையும் நெருக்கமாகக் கட்டியிருப்பார். துன்பக் கேணி கதையில் ஒரு கிராமத்தின் வடிவம் எப்படி இருக்கும், கிராமம் எந்த இடத்தில் தொடங்கும் எந்தெந்த சாதியினர் எங்கு இருப்பார்கள். அவருக்கு இடையிலான உறவு எப்படி இருக்கும் என்பதை அவ்வளவு தெளிவாகக் கூறியிருப்பார். இந்திய கிராமங்களை புரிந்துகொள்ள இந்த சித்திரம் நமக்கும் உதவும். சாதிய கட்டமைப்பின் படிநிலைகளைத் துள்ளியமாக காட்டுவதோடு, அவர் பக்கம் நின்று பேச வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்.

தன்னுடைய சொந்த சாதியின் மீது மிகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைப்பார். பணத்திற்காக மனிதர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டுவார்.

கேள்விக்கு அஞ்சாத எழுத்துகள்!

புதுமைப்பித்தன் எதனையும் கேள்வி கேட்க அஞ்சியதில்லை என்பதற்கு பல கதைகளை உதாரணமாகச் சொல்லிக்கொண்டே போகலாம். உதாரணத்திற்கு, சாப விமோசனம் கதையை எடுத்துக் கொள்ளலாம். கடவுளாகப் பார்க்கப்படும் ராமரே ஆனாலும் அவரையும் கேள்விக்கு உட்படுத்தும் துணிச்சல் அவருக்கு இருந்தது. தனக்கு சாப விமோசனம் அளித்த ராமன் எப்படி மனைவி சீதையை தீக்குளிக்க அனுமதித்தான் என்று அவர் சுட்டெரிக்கும் தீப்பொறியாய் கேள்வியை முன்வைக்கிறார் புதுமைப்பித்தன். ”ராமாயண பரிச்சயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை” என்றுதான் சாப விமோசனம் கதையையே ஆரம்பிப்பார் புதுமைப்பித்தன். (சாபவிமோசனம் கதையை படிக்கும் முன் புதுமைப்பித்தன் எழுதிய அகலிகை கதையைப் படித்துவிடவும்).

“அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்து விட்டாள்.

"அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?" என்று கேட்டாள்.

"அவர் கேட்டார்; நான் செய்தேன்" என்றாள் சீதை, அமைதியாக.

"அவன் கேட்டானா?" என்று கத்தினாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது.

அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா?” என்று கோபக் கனலில் வார்த்தைகளைக் கொட்டியிருப்பார் புதுமைப்பித்தன்.

இதில் கண்ணகி என்ற வார்த்தையை கவனித்தால் புரியும். மதுரையை எரிக்கும் அளவிற்கானது கண்ணகியின் கோபம். அப்படியான கோபத்தை அகலிகை மனதில் இருப்பதை எடுத்துக் காட்டுகிறார்.

மரபு, தொன்மத்தை போற்றிய புதுமைப்பித்தன்!

புதுமைப்பித்தனுக்கு ஷேக்ஸ்பியரையும் தெரியும்; ராமாயணமும் தெரியும். அவர் மரபு, தொன்மங்களை இயல்பாக கையாண்டவர். இந்த இயல்பு, பாரதியாரிடம் இருந்தது. அவர் மகாபாரதம் கதையில் இருந்து பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தைப் படைத்தார். அதில் புதிய கருத்துக்களை முன்வைத்தார். நந்தன் தொன்மைத்தையும் கோபால கிருஷ்ணரின் மெட்டுகளில் இருந்து எடுத்து பாரதியார் கையாண்டார். அதாவது, ’மாடு தின்னும் புல்லையா உனக்கு மார்கழி திருநாளா’ என்ற வார்த்தைகளில் இருந்து ’தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா’ என்ற கவிதையை வடித்தார். அதேபோல், புதுமைப்பித்தனும், ராமாயணத்தைப் புதிதாக அகலிகை மற்றும் சாபவிமோசனம் ஆகிய கதைகளில் எழுதினார். ராமாயணத்தை கிளைக் கதையைப்போல் உருவாக்கினார். அதேபோல், புதிய நந்தன் கதையை எழுதினார் புதுமைப்பித்தன்.

அவரது காலத்தில் இருக்கும் மனிதர்களிடம் இருக்கும் சாதிய எண்ணம், சமூகச் சூழல் போன்றவற்றை சுதந்திரப் போராட்டக் காலத்தை ஒட்டி புதிய விவாதங்களை முன்வைத்திருப்பார் புதுமைப்பித்தன்.

கதைகளைத் தாண்டியும் ஜொலித்தவர் புதுமைப்பித்தன்!

புதுமைப்பித்தன் சிறுகதைகளைத் தாண்டி மொழிபெயர்ப்பு உலகிலும், கட்டுரைகள் எழுதுவதிலும் தன்னுடைய கொடியை நாட்டியவர். உலக சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். ஷேக்ஸ்பியரின் கதைகள், ஜாக்லண்டன் கதைகள் என உலகப் புகழ்பெற்ற கதைகளை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

புதுமைப் பித்தன் கவிதைகள் சிலவற்றையும் எழுதியுள்ளார். கவிதையின் நடையில் பெரும்பாலும் இல்லாவிட்டாலும் தான் நினைத்ததைச் சொல்லிவிடும் ஆற்றலை கவிதையிலும் செய்து காட்டினார். உலக அரசியல் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். சர்வாதிகாரிகளான முசோலினி, ஹிட்லர் ஆகியோரைப் பற்றி கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஸ்டாலினுக்கு தெரியும் என்ற பெரிய கட்டுரையையும் எழுதி முடிக்காமல் விட்டிருப்பார்.

உண்மையான கலைஞனின் வாழ்வு!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த புதுமைப்பித்தன் 1906ம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி பிறந்தார். விருத்தாசலம் என்ற இயற்பெயரை கொண்ட அவர் எழுத்துலகில் சாதிக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையில் சென்னையை நோக்கிப் புறப்பட்டு வந்தார். சென்னையில் சொல்ல முடியாத பல துயரங்களை அனுபவித்தார். புதுமைப்பித்தன் எழுத்துலகில் தீவிரமாக இயங்கியது 15 ஆண்டுகளே. கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிகைகளில் அவரது கதைகள் பிரசுரமாகி இருந்தன. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார். சினிமா துறைக்குச் சென்று படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தோல்வியைச் சந்தித்தார். குறுகிய காலமே புதுமைப்பித்தன் இலக்கிய உலகில் செயல்பட்டு இருந்தாலும், ஒரு கலைஞனாக உண்மையாக இருந்தார். அவரது கதைகளிலே ஒரு கலைஞன் படும் கஷ்டங்களை பல இடங்களில் எழுதி இருப்பார். புதுமைப்பித்தனின் வாழ்க்கையை அறிய அவரது மனைவி கமலா எழுதிய புத்தகத்தைப் படித்தால் புரிந்துகொள்ள முடியும்.

புதுமைப்பித்தனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com