நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் பூமியின் சுழல் அச்சில் மாற்றமா? - அறிவியலாளர் சொல்வதென்ன?

சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து வருபவர் அவ்வப்போது சற்றே நெளிந்து இடம் மாறுவது போல பருவ மாறுபாட்டின் காரணமாக வளிமண்ட காற்று வடகோளம் தென்கோளம் என மாறி மாறி அமைவதாலும் அச்சின் திசை மாறும்.
பூமியின் அச்சு மாதிரி
பூமியின் அச்சு மாதிரி PT

இந்தியாவில் மக்கள் தொகைக்கேற்ப நாம் உபயோகப்படுத்தும் தண்ணீரும் அளவிற்கு அதிகமாகவே உபயோகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு பூமியிலிருந்து உறிஞ்சப்படும் அளவுக்கதிகமான நீரானது பல்வேறு பயன்களுக்கு பிறகு இறுதியில் கடலில் கலக்கிறது. இதனால் கடலின் மட்டமானது இந்த இருபது ஆண்டுகளில் சுமார் 6.24 மில்லிமீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் பூமி அதன் அச்சிலிருந்து சற்று விலகி இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த ஆய்வறிக்கை குறித்து , முதுநிலை அறிவியலாளர். திரு.த.வி. வெங்கடேசன் (விகியான் பிரசார், புது தில்லி) அவர்களிடம் உரையாடியபொழுது அவர் தந்த தரவுகள்...

த.வி. வெங்கடேசன் முதுநிலை அறிவியலாளர்.
த.வி. வெங்கடேசன் முதுநிலை அறிவியலாளர்.PT

“பொதுவாக, தெற்கு துருவத்திலிருந்து வடக்கு துருவம் வரை பூமியின் மையத்தின் ஊடே பூமியின் சுழல் அச்சு செல்கிறது. இந்த அச்சை சுற்றி தான் பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டு பகல் இரவுவை ஏற்படுகிறது.”

”இயல்பாகவே பூமியின் அச்சு மாறும். நிலநடுக்கம் ஏற்பட்டால் பூமியில் பரவியுள்ள பொருள்களின் நிலை இங்கிருந்து அங்கே சென்றுவிடும். இதன் தொடர்ச்சியாக நிலைகுலைந்து பூமியின் அச்சு நகர்ந்து விடும். அதே போல சைக்கிளில் பின்னல் உட்கார்ந்து வருபவர் அவ்வப்போது சற்றே நெளிந்து இடம் மாறுவது போல பருவ மாறுபாட்டின் காரணமாக வளிமண்ட காற்று வடகோளம் தென்கோளம் என மாறி மாறி அமைவதாலும் அச்சின் திசை மாறும்.”

”உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், சைக்கிளில் டபுள்ஸ் போகும்போது பின்னால் அமர்ந்திருப்பவர் இடம் மாறினால் பாலன்ஸ் நிலைகுலைவது போல, பூமியின் உள்ளே தேங்கியிருந்த நிலத்தடி நீரை வெகுவாக வெளியே உறிஞ்சி எடுத்து விட்டால் பூமியின் அச்சானது நிலைகுலைந்து இடம் மாறும் என சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த 1993 முதல் 2010 வரையுள்ள காலகட்டத்தில் உறிஞ்சப்பட்ட நிலத்தடி நீரினால் பூமி நிலை தடுமாறி அதன் அச்சு சுமார் என்பது செண்டிமீட்டர் அளவு வரை இடம் மாறியுள்ளது எனச் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.”

”அறிவியலாளர்களின் ஆய்வுபடி, நிலத்தடி நீரை அதன் இடத்திலிருந்து அகற்றுவதால் பூமியின் அச்சில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என துல்லியமாக ஆய்வு செய்து ஆண்டுக்கு சுமார் 4.36 சென்டிமீட்டர் என்ற வேகத்தில் அச்சின் வடக்கு முனை கிழக்கு முகமாக நகர்ந்து வருகிறது என கி-வியோன் சியோ (Ki-Weon Seo) என்பர் தலைமையில் ஒரு ஆய்வுக்குழு ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர் என்கிற ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர். இந்த இருபது ஆண்டுகளில் சுமார் இரண்டு லட்சம் கோடி டன் நிலத்தடி நீரை உலகம் முழுவதும் உறிஞ்சி எடுத்துள்ளனர் என இந்த ஆய்வுக்குழு மதிப்பீடு செய்துள்ளது. குறிப்பாக, இந்த நிலத்தடி நீரானது இந்தியாவின் வடமேற்கு மற்றும் வட அமெரிக்காவில் அதிகளவு உறிஞ்சப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெரும்பாலும் நிலத்தடி நீர் பணப்பயிர் விவசாயம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.”

” இன்னும் புரியும் படி சொல்லவேண்டுமென்றால்.. காய்கறி மார்க்கெட்டிலிருந்து இரண்டு கைகளிலும் பையை சுமந்தபடி நடக்கும் போது சமநிலையில் இருப்போம். இரண்டு பைகளை ஒரே கையில் தூக்கும்போது அல்லது ஒரு பையில் உள்ள ஒரு பகுதி பொருள்களை மற்ற பையில் சேர்த்து சுமை கூட்டும்போது அந்த திசையில் நமது தோள்பட்டை சாய்ந்து விடும்; நமது நடையில் சற்றே மாற்றம் தெரியும் அல்லவா? அதுபோல தான் நிலத்தின் உள்ளே ஆங்காங்கே தேக்கம் போல நிலத்தடி நீர் தேங்கி இருக்கும். அந்த நீரை வெளியே எடுத்துவிட்டால் பூமியின் அந்த குறிப்பிட்ட பகுதியில் பொருளின் திணிவு குறைந்து போகும். இதன் தொடர்ச்சியாக பூமியின் சுழல் அச்சு திசை மாறி துருவ புள்ளிகள் நகர்ந்து விடும்.”

”ஆய்வாளார்கள், துருவ பனி பகுதி மற்றும் இமயமலை போன்ற பகுதிகளில் பனியாறுகள் உருகுவதால் பூமியின் சுழல் அச்சில் சாய்வு ஏற்படும் என கருதி இருந்தனர். நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் ஏற்படும் மாற்றம் கடலில் கரைத்த பெருங்காயம் போல பொருட்படுத்த தக்க அளவு இருக்காது எனக்கருதினர். ஆயினும் வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல அறவியல் ஆய்வு தரவுகளைக் கொண்டு அனுமானம் செய்வது அவசியம் எனக் கருதிய ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.” என்கிறார்.

”2016 ஆம் ஆண்டு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகமாக உறிஞ்சி எடுப்பது பூமியின் சுழற்சியை பாதிக்கத் தொடங்கியிருப்பதாக எச்சரித்திருந்தது குறிப்பிடதக்கது. சில மீட்டர் அச்சு சாய்வதால் பெரும் ஆபத்து இல்லை என்றாலும் புவி வெப்பமடைதல் போலவே மனித நடவடிக்கையால் கோள் முழுவதும் ஏற்படும் மற்றொரு தாக்கம் வெளிப்பட்டுள்ளது. நிலத்துக்கு அடியிலிருந்து எடுக்கப்பட்ட நீருக்கு ஈடாக மழை நீர் சேகரிப்பு போன்ற முயற்சிகள் மிக முக்கியம் எனவும் இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது.” என்கிறார்.

ஆகவே, நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதை குறைந்துக் கொண்டு மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த அரசும் மக்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com