‘யாரைத்தான் நம்புவதோ?'-கட்சித்தாவிய எம்எல்ஏக்களால் குழப்பத்தில் கோவா வாக்காளர்கள்

‘யாரைத்தான் நம்புவதோ?'-கட்சித்தாவிய எம்எல்ஏக்களால் குழப்பத்தில் கோவா வாக்காளர்கள்
‘யாரைத்தான் நம்புவதோ?'-கட்சித்தாவிய எம்எல்ஏக்களால் குழப்பத்தில் கோவா வாக்காளர்கள்

கோவா மாநிலத்தை கலங்கடிக்கும் கட்சித் தாவல் காரணமாக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, வாக்காளர்களே குழப்பத்தில் உள்ளனர்.

கட்சித்தாவல் என்பது அரசியலில் சாதாரணமானது என்றாலும்கூட, ஐந்து ஆண்டு காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 % எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவுவது அதிர்ச்சிகரம்தான். இந்த அதிர்ச்சியான சாதனைக்கு சொந்தக்கார மாநிலமாக கோவா மாறியுள்ளது.

கோவாவில் 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 3 இடங்களிலும், கோவா பார்வர்டு கட்சி 3 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும், சுயேட்சைகள் 3 இடத்திலும் வென்றன. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 21 இடங்களை வெல்லும் கட்சிதான் ஆட்சியமைக்க முடியும் என்ற சூழலில், தனிப்பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. இருந்தாலும் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் என எல்லோரும் நினைத்திருந்த சூழலில், அதிரடியாக சுயேட்சைகள் மற்றும் கோவா பார்வர்டு கட்சியின் ஆதரவுடன் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்தது.

ஆட்டத்தை தொடங்கிய பாஜக - சிதைந்துபோன காங்கிரஸ்:

ஆரம்பத்தில் கோவாவில் ஊசலாட்டத்துடன் ஆட்சியை தொடங்கினார் பாஜக முதல்வர் மனோகர் பரிக்கர். பின்னர் படிப்படியாக மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை வளைக்கும் வேலையை பாஜக தொடங்கியது. இடையில் உடல்நலக்குறைவு காரணமாக மனோகர் பரிக்கர் காலமானார், அதன்பின்னர் பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் முதல்வரானார்.

தொடக்கத்தில் 13 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியை தொடங்கிய பாஜகவில் முதலில் இரு சுயேட்சைகள் இணைந்தனர். பின்னர் 2 காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைந்தனர், இந்த சூழலில் மிகப்பெரிய திருப்பமாக காங்கிரஸை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பாஜகவில் ஐக்கியமானார்கள். இதில் முக்கியமாக கோவா சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில் இவர்கள் பாஜகவில் இணைந்தது அதிர்வலைகளை உருவாக்கியது.

மூன்றில் இரண்டுபங்கு எம்.எல்.ஏக்கள் கட்சி தாவியதால் காங்கிரஸால் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மொத்தமாக இருந்த 17 உறுப்பினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, கரைந்து இப்போது காங்கிரசில் 2 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.


காங்கிரஸ் மட்டுமின்றி 2017-இல் கோவாவில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்து, ஆட்சியமைய காரணமாக இருந்த கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களில் இரண்டு உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்தது பாஜக. அதேபோல மற்றோர் மாநில கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் 3 உறுப்பினர்களில் 2 உறுப்பினர்களையும் தன்பக்கம் இழுத்தது. தேர்தல் நெருக்கத்தில் முன்னாள் பாஜக முதல்வர் பர்சேகர் உட்பட சிலர் பாஜகவிலிருந்தும் விலகியுள்ளனர். தேசியவாத காங்கிரஸுக்கு இருந்த ஒரு உறுப்பினரும் தேர்தல் நெருக்கத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

கட்சி தாவலால் குழம்பிப்போன வாக்காளர்கள் - கலங்கிப்போன கட்சிகள்

வாக்காளர்கள் பெரும்பாலும் இந்தக் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் அல்லது இந்தக் கட்சி சரியானது என்று விரும்பியே ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்கள். சில இடங்களில் வேட்பாளர்களின் செல்வாக்கும் அவர்களை வெல்ல வைக்கும். கோவாவில் தற்போது காங்கிரஸை விரும்பி வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் உள்ளனர். சிறிய கட்சிகளை நம்பி வாக்களித்த வாக்காளர்களின் நிலைமையும் இதேதான். பாஜக உறுப்பினர்கள் பலரும்கூட இப்போது ராஜினாமா செய்துள்ளனர். எனவே வரும் தேர்தலில் யாரை நம்பி வாக்களிப்பது, அப்படி வாக்களித்தால் அவர்கள் நாம் வாக்களித்த கட்சிலேயே இருப்பார்களா என்ற குழப்பத்தில் கோவா வாக்காளர்கள் உள்ளனர்.

கோவா சிறிய மாநிலம் என்பதால் குறைவான எம்.எல்.ஏக்களையே அனைத்துக் கட்சிகளும் கொண்டிருக்கும். எனவே குதிரை பேரம் மூலமாக கூண்டோடு ஒரு கட்சியையே எளிதாக பெரிய கட்சிகள் காலி செய்துவிடும் சூழல் நிலவுகிறது. மூன்றில் ஒருபங்கு எம்.எல்.ஏக்கள் தாவினாலே அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் 3 உறுப்பினர்கள் உள்ள கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ எந்த சிக்கலும் இல்லாமல் கட்சி மாறும் வாய்ப்பு உள்ளது.

கடந்த படிப்பினை காரணமாக, இந்த முறை அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் மிகவும் உஷாராகி உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கோயில், சர்ச், மசூதிகள் என அவரவர் வழிபாட்டு இடங்களுக்கு கூட்டிச்சென்று சத்தியம் வாங்குகிறது காங்கிரஸ் கட்சி. இதே பாணியை கடைபிடிக்கும் ஆம் ஆத்மி கட்சி, கூடுதலாக சட்ட ரீதியான ஒப்பந்தமும் செய்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சீட்டு கட்டுகளைப்போல மாறி, மாறி சேரும் எம்.எல்.ஏக்களை பார்த்து வெதும்பிபோன கோவா வாக்காளர்கள் யாரைத்தான் நம்புவதோ என குழப்பத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com