`என் கேன்சர் பத்தி எனக்கு தெரியும்னு மம்மி, டாடிட்ட சொல்லாதீங்க’-டாக்டரிடம் கூறிய சிறுவன்!

`என் கேன்சர் பத்தி எனக்கு தெரியும்னு மம்மி, டாடிட்ட சொல்லாதீங்க’-டாக்டரிடம் கூறிய சிறுவன்!
`என் கேன்சர் பத்தி எனக்கு தெரியும்னு மம்மி, டாடிட்ட சொல்லாதீங்க’-டாக்டரிடம் கூறிய சிறுவன்!

வாழ்க்கை எல்லோருக்கும் எல்லா நேரமும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. மகிழ்ச்சியை அள்ளி அள்ளி கொடுக்கும் இதே வாழ்க்கைதான், `அட என்னங்க வாழ்க்க இது’ என்று ஒரு நொடியில் ஒருவரை சோர்ந்து போக வைத்துவிடுகிறது. `அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாத வாழ்க்க சார் இது... முடிஞ்ச வரை எல்லாரையும் சிரிக்க வச்சுடணும்’ என்றொரு சினிமா வசனம் கேட்டதாக நினைவு. இதை பெரியவர்களாகிய நாம் எந்தளவுக்கு வாழ்க்கையில் பின்பற்றுகிறோமோ தெரியவில்லை... ஆனால் ஐதராபாத்தை சேர்ந்த 6 வயது குழந்தை, தான் வாழ்ந்த சில காலத்துக்குள்ளாகவே முழுமையாக உணர்ந்திருக்கிறார். அப்படி என்ன செய்தான் அச்சிறுவன்? என்ன ஆனது அவனுக்கு என்றுதானே கேட்கின்றீர்கள்...

இதுபற்றி ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவரொருவர் ட்விட்டரில் விளக்கமாக பதிவிட்டுள்ளார். சுதீர் குமார் என்ற மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவரான அந்த மருத்துவரின் ட்வீட்டின்படி, 6 வயதேயான அச்சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 4-ம் நிலை பாதிப்பில் இருக்கிறார். மனு என்ற அச்சிறுவன், டாக்டரிடம் சென்று தனிப்பட்ட முறையில் “டாக்டர்… எனக்கு புற்றுநோய் பாதிப்பு 4-ம் நிலையில் உள்ளது. நான் 6 மாதங்களுக்குத்தான் வாழ்வேன் என்று எனக்கு தெரியும். ஆனால் எனக்கு இது தெரியுமென்று என் அம்மா அப்பாவிடம் சொல்லிவிடாதீர்கள்” என்று மழலை மாறாமல் கூறியுள்ளான்.

இதைக்கேட்ட மருத்துவர் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். சிறுவனுக்கு முன்னரேவும் சிறுவனின் அம்மாவும் அப்பாவும் இம்மருத்துவரை சந்தித்து, “டாக்டர், அவனுக்கு என்ன பிரச்னைன்னு அவனுக்கு தெரியாது. நீங்க எதும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்” என்றுள்ளனர். பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே நடந்த இந்த பாச போராட்டத்தை மருத்துவர் எப்படி கையாண்டார், இப்போது சிறுவனுக்கு என்ன ஆனது என்பது பற்றி அதே மருத்துவர் ட்வீட்டாக பதிவிட்டுள்ளார்.

மருத்துவர் ட்வீட்டின் விவரம்: “நான் வேறொரு பேஷண்ட்டை பார்ப்பதில் பிஸியாக இருந்த நேரம் அது. அப்போது, ஒரு இளம் தம்பதியினர் என்னிடம் வந்தினர். வந்தவர்கள், `எங்கள் மகன் மனு வெளியே நிற்கிறான். அவனுக்கு புற்றுநோய் உள்ளது. அதுபற்றி நாங்கள் அவனிடம் சொல்லவில்லை. அவனை சந்தித்து, உங்கள் சிகிச்சை முறை பற்றி அவனிடம் சொல்லுங்கள். மற்றபடி நோய் விவரங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டாம்’ என்றனர். அதை கேட்டபடி நானும் அச்சிறுவனை பார்க்க வெளியே சென்றேன்.

அப்போது அக்குழந்தை ஒரு வீல்-சேரில் அமர்ந்திருந்தான். புற்றுநோய்க்கான சிகிச்சையொன்றின்போது, இடையே சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் தாக்கங்களிலிருந்து சிறுவனை மீட்க, அவனுடைய புற்றுநோயியல் மருத்துவர் அவனை என்னிடம் அனுப்பி வைத்திருந்தார். முகம் நிறைய புன்னைகையுடன், மனம் நிறைய தன்னம்பிக்கையுடன், ஸ்மார்ட்டாக அமர்ந்திருந்த அச்சிறுவனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன்.

அப்போது அவனுடைய நோய் விவரங்கள், இதுவரை அவனுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை முந்தைய மருத்துவர் கொடுத்த ரெக்கார்ட்ஸை மூலமாக தெரிந்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அச்சிறுவனுக்கு இடதுபக்க மூளையில் கிளியோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம் தரம் 4 (glioblastoma multiforme grade 4) புற்றுநோய் இருந்தது எனக்கு தெரியவந்தது. அதனால்தான் சிறுவனுக்கு வலது பக்க கை, கால்களில் முடக்கு வாதம் ஏற்பட்டிருந்திருக்கிறது. கீமோதெரபி சிகிச்சைக்கும் சிறுவன் உள்ளாகியிருந்தான். இருப்பினும் மூளையில் புற்றுநோய் இருப்பதால், வலிப்பின் தாக்கங்கள் சிறுவனுக்கு ஏற்பட்டிருந்தன.

இதுபற்றி சிறுவனின் பெற்றோரிடம் தனியாக பேசினேன். சிறுவனுக்கு இதுவரை அளிக்கப்பட்ட சில மருத்துவ தகவல்களையும் அவர்களிடம் கேட்டு பெற்றேன். எல்லாம் முடிந்த பின்னர், சிறுவனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து அவன் பெற்றோர் புறப்பட தயாராகினர். அப்போது சிறுவன், `எனக்கு டாக்டரிடம் தனியாக பேச வேண்டும். கொஞ்ச நேரம் வெளியே இருங்க’ எனக்கூறினான். பெற்றோரும் அதை ஏற்றுக்கொண்டு வெளியே சென்று நின்றனர்.

பெற்றோர் வெளியே சென்றபின், சிறுவன் என்னிடம் மெதுவாக, “டாக்டர்… எனக்கு என்ன நோய் இருக்கிறது என எனக்கே தெரியும். ஐ-பேடில் இதுபற்றி நான் படித்துவிட்டேன். இன்னும் 6 மாதங்களுக்கு தான் நான் உயிரோடு இருப்பேன் என்றுகூட எனக்கு தெரியும். ஆனால் எனக்கு இது தெரியுமென்று என் அம்மா அப்பாவிடம் நான் சொல்லவில்லை. சொன்னால், அவர்கள் ரொம்பவும் அப்செட் ஆகிடுவாங்க. அவங்க என்னைய ரொம்ப லவ் பண்றாங்க. அதனால தயவுசெஞ்சு எனக்கு இந்த விஷயம் தெரியுமென்று அவங்ககிட்ட சொல்லிடாதீங்க” என்றான்.

இதைக்கேட்ட அந்த தருணத்தில், உண்மையில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சிறுவனின் எண்ணத்தை உட்கரிக்கவே எனக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. ஒருபக்கம் பெற்றோர் பிள்ளையிடம் சொல்லாதீர்கள் என்கின்றனர்... இன்னொருபக்கம் பிள்ளையோ பெற்றோர் வருத்தப்படுவர் என யோசிக்கிறது. 6 வயதில், தன் இறுதி நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையால் எப்படி இப்படி யோசிக்க முடியுமென்று தெரியவில்லை. கொஞ்சம் சுதாரித்த பின்னர் சிறுவனிடம், `சரி,நீ சொல்வது போலவே செய்கிறேன்’ என வாக்களித்தேன்.

பின் சிறுவனை வெளியே இருக்க சொல்லிவிட்டு, பெற்றோரை அழைத்து தனியாக அமரவைத்து பேசினேன். அப்போது, சிறுவன் தன் நோய் பற்றி அறிந்திருபப்தையும், அதை அவர்களிடம் சொல்ல வேண்டாமென என்னிடம் சொன்னதையும் முழுமையாக அவர்களிடம் கூறினேன். ஏனெனில் எனக்கு அதுதான் சரியென்று பட்டது. என்னால் சிறுவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியவில்லை. மிகவும் சென்சிடிவான ஒரு சூழலை அக்குடும்பம் எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எக்காரணம் கொண்டும் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருந்துவிடக்கூடாது என்பதே என் எண்ணமாக இருந்தது. அதனால் எல்லவாற்றையும் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன்.

இருக்கும் சில நாள்களில், ஒவ்வொரு நாளும் அவர்கள் மூவரும் ஒன்றாக இணைந்து அனுபவித்து வாழ வேண்டும் என்று நினைத்தேன். சம்பவம் அறிந்து, மூவரும் அங்கிருந்து சென்றனர். அங்கிருந்து செல்கையில், அவர்கள் மூவருக்கும் ஒருவருக்கொருவர் என்ன நடந்து வருகின்றது தங்களை சுற்றி என்று தெரிந்திருந்தது.

நான் சொல்லும் இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகிவிட்டன. காலப்போக்கில் கிட்டத்தட்ட நான் இப்படியொரு விஷயம் நடந்ததையேகூட மறந்துவிட்டேன். மருத்துவமனை, நோயாளிகள் என சுழன்றுக்கொண்டிருந்த அப்படியான சூழலில்தான் இன்று அந்த பெற்றோரை மீண்டும் சந்தித்தேன். அவர்களே என்னை அடையாளம் கண்டு என்னிடம் வந்து பேசினர். சிறுவனின் உடல்நலம் பற்றி அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் கூறியது, என்னை இன்னும் அசைத்துப்பார்த்துவிட்டது.

அவர்கள் என்னிடம் சொன்னது இதுதான் - `டாக்டர், உங்களை சந்தித்த பிறகு மனுவுடன் மிகச்சிறந்த தருணங்கள் எங்களுக்கு கிடைத்தது. மனுவுக்கு டிஸ்னி போக வேண்டுமென்ற ஆசை இருந்ததாக எங்ககிட்ட சொன்னான். நாங்க ரெண்டு பேரும் லீவ் போட்டுட்டு, அவனை அங்க அழைச்சுட்டு போனோம். கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு, அவனை நாங்க இழந்துட்டோம். ஆனா அந்த 8 மாதங்கள், அவன் கூட எங்களுக்கு நிறைய நல்ல தருணங்கள் கிடைச்சது. அந்த ஞாபகங்களுக்காக உங்களுக்கு நன்றி சொல்ல நினைச்சோம்… அதுக்குதான் இன்னிக்கு வந்தோம்’ என்றனர்” 

இவ்வாறு மருத்துவர் குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவரின் இப்பதிவு, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பலரும், பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். இச்சம்பவத்தை சென்சிடிவாக கையாண்டதற்காக மருத்துவருக்கும் சிலர் பாராட்டு தெரிவிக்கின்றனர். `மருத்துவராக இருக்கும்போது, இப்படியான சூழலை அடிக்கடி சந்திக்க நேரிடும்’ என்று கூறுகின்றனர் சிலர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com