தமிழக காங்கிரஸுக்கு '5 மாநிலத் தேர்தல் தோல்வி' தந்திருக்கும் பிரச்னைகள்!

தமிழக காங்கிரஸுக்கு '5 மாநிலத் தேர்தல் தோல்வி' தந்திருக்கும் பிரச்னைகள்!
தமிழக காங்கிரஸுக்கு '5 மாநிலத் தேர்தல் தோல்வி' தந்திருக்கும் பிரச்னைகள்!
Published on

5 மாநில தேர்தல் தோல்வி என்பது காங்கிரஸ் கட்சியின் பல மட்டத்திலும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்த தோல்வியானது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி பேர வலிமையை குறைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது…

தமிழகத்தில் காங்கிரஸின் அரசியல் கிராஃப்:

தமிழ்நாட்டில் 1967 வரை ஆளும் கட்சியாக இருந்தது காங்கிரஸ் கட்சி, பிறகு திமுகவின் சகாப்தம் தொடங்கிய பின்னர் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பின்னர், தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக காங்கிரஸ் மாறியது. அப்போது சட்டமன்ற தொகுதிகளை குறைவாக பெற்றுக்கொண்டு, அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளைப்பெற்றுக்கொள்ளும் ‘பார்முலாவை’ இந்திராகாந்தி தொடங்கி வைத்தார்.

இந்த யுக்தி, நாடாளுமன்றத்தில் தங்களை வலுப்படுத்தும் என்ற கணக்கினை போட்டார் இந்திரா காந்தி. உண்மையாக சொல்லப்போனால் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைய இந்த பார்முலா மிக முக்கிய காரணமானது. எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜி.கே.மூப்பனார் 1989 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தனித்து களமிறக்கி போட்டியிட வைத்தார், அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. அந்த தேர்தலில் 26 தொகுதிகளில் வென்றது, அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி காங்கிரஸை விட கூடுதலாக ஒரு இடம் மட்டுமே வென்று 27 தொகுதிகளை கைப்பற்றியது. கிட்டத்திட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸின் பலத்தை சுயபரிசோதனை செய்த தேர்தல் அது. ஆனால் அதன்பின்னரும் 1991ல் மீண்டும் அதிமுகவிடம் வெறும் 65 சட்டமன்ற தொகுதிகளையும், 28 நாடாளுமன்ற தொகுதிகளையும் பெற்றுக்கொண்டு கூட்டணி அமைத்தது காங்கிரஸின் தேசிய தலைமை. அதன்பின்னரும் அதிமுக, திமுக என மாறிமாறி கூட்டணி அமைத்தே காங்கிரஸின் காலங்கள் போனது.

குறைய தொடங்கிய காங்கிரஸின் தொகுதிகளின் எண்ணிக்கை:

2004 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. 2006 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 48 தொகுதிகளில் போட்டியிட்டு 34 இடங்களில் வென்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் வென்றது. 2011 தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

அதன்பின்னர் 2016 சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டன, இதில் அக்கட்சி 8 இடங்களில் மட்டுமே வென்றது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கபட்டு அதில் 9 தொகுதிகளில் அக்கட்சி வென்றது. நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும் இழுபறிக்கு பின்னர் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன, இதில் அக்கட்சி 18 இடங்களில் வென்றது.

5 மாநில தேர்தல் காங்கிரஸின் பேர வலிமையை குறைக்குமா?

1967 இல் ஆட்சியை இழந்தபின்னர் காங்கிரஸின் பேர வலிமை படிப்படியாக குறைந்து வந்துள்ளது என்பதே உண்மை. காங்கிரஸின் தேசிய தலைமை மாநில காங்கிரஸ் கமிட்டியை நாடாளுமன்றத்துக்கான பெரும்பான்மையை உறுதி செய்யும் அமைப்பாகவே பார்த்து வருகிறதே தவிர, தனித்து இயங்க அனுமதிப்பதில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. கடந்த சில தேர்தல்களில் குறிப்பாக 2011 இல் 63 இடங்கள், 2016 இல் 41 இடங்கள், 2021இல் 25 இடங்கள் என ஒவ்வொரு தேர்தலிலும் தடாலடியாக காங்கிரஸின் தொகுதி எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின்போதே திமுகவின் சில மூத்த நிர்வாகிகள் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கக்கூடாது என்று குரல் எழுப்பியதாக செய்திகள் வெளியானது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கூட தாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை என பல மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி மனக்கசப்புடனே தேர்தலை சந்தித்தது. நாடு முழுவதுமே காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து வரும் இத்தகைய சூழலில் இனிவரும் காலங்களில் நடக்கவுள்ள தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிக சொற்ப தொகுதிகளை ஒதுக்கவே தலைமை கட்சிகள் முடிவெடுக்கும் என சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதே வேளையில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கியை கொண்ட கட்சியாக காங்கிரஸ் உள்ளது என்பதிலும் சந்தேகம் இல்லை.

கடந்த சில தேர்தல்களாகவே காங்கிரஸின் பேரவலிமை கிட்டத்திட்ட குறைந்துவிட்டது. அப்படி பேரம் பேசி சீட்டுகளை வாங்கினாலும் அதில் ஏற்கனவே பதவியில் உள்ள நிர்வாகிகள் அல்லது அவர்களின் வாரிசுகளுக்கே வாய்ப்பளிக்கப்படுகிறது, புதுமுகங்களுக்கான வாய்ப்பு மிகமிக குறைவாகவே வழங்கப்படுகிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இந்த குறைகளை சரிசெய்து, கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தி, தீவிரமாக புதிய உறுப்பினர்களை சேர்த்தால் மட்டுமே காங்கிரஸால் தற்போது இருக்கும் இடத்தையாவது தற்காத்துகொள்ள முடியும் என்பதே எதார்த்த உண்மை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com