'கிரிக்'கெத்து 14 : சச்சின் டெண்டுல்கரின் டாப் 5 ஒருநாள் இன்னிங்ஸ்!
டிசம்பர் 18, 1989 பாகிஸ்தான் நாட்டின் ஜின்னா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்து விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அன்றுதான் அந்த 16 வயது சிறுவனும் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகிறான். பெரிய அளவில் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய அனுபவம் ஏதும் இல்லாத அந்த பதின்ம வயது சிறுவன் (டீன் ஏஜ் சிறுவன்) முழுக்க முழுக்க தனது திறனால் இந்திய அணிக்குள் இடம் பிடித்திருந்தான்.
அந்த போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 87 ரன்களை எடுத்தது. அந்த இலக்கை இந்தியா விரட்டியது. ஐந்தாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய அந்த சிறுவன் தனது முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 2 பந்துகள் மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட்டாகி வெளியேறினான். இரண்டாவது போட்டியிலும் டக்-அவுட். இருந்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்ய 76 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டார். (தனது முதல் சதத்தை பதிவு செய்த போது அந்த சிறுவன் வளர்ந்து இளைஞராகி இருந்தார்). அதன் பின்னர் 376 இன்னிங்ஸில் 48 சதங்களை அவர் பதிவு செய்தார்.
அதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் (18,426 ரன்கள்) உட்பட பல சாதனைகளை படைத்த மாவீரனாக உருவாகி இருந்தார். அவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ‘தி ஒன் அண்ட் ஒன்லி’ சச்சின் டெண்டுல்கர். அவரது கிரிக்கெட் கரியரில் அவர் பேட் ஏந்தி வந்தாலே எதிரணியினர் அஞ்சி ஒதுங்குவார்கள். அவர் அடித்து அலறவிட்ட பவுலர்கள் ‘ஒன்றா.. ரெண்டா..’ அது எண்ணில் அடங்காதது.
“இந்தியாவை அடிக்கணும்னா சச்சினை அவுட் செய்ய வேண்டும்” என்ற பார்முலாவை சர்வதேச கிரிக்கெட் அணிகள் தங்களது சக்சஸ் பார்முலாவாக கடைபிடித்த காலமும் உண்டு. இந்தியாவில் டிவி பெட்டியில் நேரலையில் போட்டியை பார்த்தவர்கள் கூட சச்சின் அவுட்டானால் டிவியை ஆப் செய்துவிடும் வழக்கத்தை கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு மேட்ச் வின்னர் அவர்.
அப்படிப்பட்ட மாவீரனின் சிறந்த டாப் 5 இன்னிங்ஸ் குறித்து பார்ப்போம்.
82 vs நியூசிலாந்து, 1994
தனது 67-வது ஒருநாள் இன்னிங்ஸில் தொடக்க வீரராக சச்சினுக்கு புரொமோஷன் கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை அவருக்கு அப்போதைய இந்திய கேப்டன் முகமது அசாருதீன் வழங்கியிருந்தார். கேப்டனின் நம்பிக்கையை வீண் போக செய்யாமல் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் விளையாடி அமர்க்களப்படுத்தி இருந்தார் சச்சின்.
நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார். ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் 49 பந்துகளில் 82 ரன்களை எடுத்திருந்தார்.
98 vs பாகிஸ்தான், 2003
2003 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் தன்னை ஏன் எல்லோரும் ‘தி மாஸ்டர் பிளாஸ்டர்’ என அழைக்கின்றனர் என்பதை நிரூபித்திருந்தார். செஞ்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 273 ரன்களை எடுத்திருந்தது. அந்த இலக்கை விரட்ட இந்திய அணிக்கு பெரிதும் உதவியது சச்சின் எடுத்திருந்த 98 ரன்கள். 75 பந்துகளில் 12 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி இருந்தார். அந்த உலகக் கோப்பை தொடரில் 11 இன்னிங்ஸ் விளையாடி 673 ரன்களை எடுத்திருந்தார்.
128 vs இலங்கை, 1998
இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 131 பந்துகளில் 128 ரன்களை பதிவு செய்திருந்தார் சச்சின். தொடக்க வீரராக தன்னுடன் களம் இறங்கிய கங்குலியுடன் 252 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 307 ரன்களை குவித்தது. அதை விரட்டிய இலங்கை அணி 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
200* vs தென்னாப்பிரிக்கா, 2010
குவாலியர் நகரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய சச்சின் 147 பந்துகளில் 200 ரன்களை பதிவு செய்தார். அதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அந்த வருடம் சச்சின் கிரிக்கெட் களத்தில் என்ட்ரி கொடுத்த 21-வது ஆண்டு. அத்தனை ஆண்டுகால கிரிக்கெட் அனுபவத்தை அந்த ஒரே இன்னிங்ஸில் மொத்தமாக வெளிப்படுத்தி அதை அப்படியே சிறப்பாக செதுக்கி இருந்தார். அந்த போட்டியில் தோனியுடன் 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதே போல தினேஷ் கார்த்திக் உடன் 194 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். கடைசி ஓவரில் சிங்கிள் தட்டி 200 ரன்களை பதிவு செய்து அசத்தினார். அந்த ஆண்டு அவர் விளையாடியது இரண்டே இன்னிங்ஸ்தான். அதில் ஒன்று இது.
143 vs ஆஸ்திரேலியா, 1998
அன்றைய காலகட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டின் தரமான ஆட்டத்தில் அதுவும் ஒன்று. சச்சின் அன்று ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தெறிக்க வைத்திருந்தார் சச்சின். ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் புழுதிபுயல் காரணமாக ஆட்டம் தடைபட்டது. அதனால் 46 ஓவர்களில் இந்தியா 276 ரன்களை விரட்ட வேண்டி இருந்தது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சச்சினுக்கு கம்பெனி கொடுக்க தவறினர். ஆனால் அதை ஒரு பொருட்டாக கருதாத சச்சின், ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிவிட்டார். ஷேன் வார்ன், பிளம்மிங், மைக்கேல் காஸ்ப்ரோவிச் என உலகத்தரம் மிக்க பவுலர்களை பந்தாடி இருந்தார். 131 பந்துகளில் 143 ரன்கள். 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அந்த இன்னிங்ஸில் விளாசி இருந்தார். இருப்பினும் இந்திய அணியை அவரால் அந்த போட்டியில் வெற்றி பெற செய்ய முடியவில்லை. ‘ஓ ஒரு தென்றல் புயலாகியதே’ என சொல்லும் அளவுக்கு அன்றைய நாள் ஆட்டம் இருந்தது. அப்போது சச்சினுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த கிரேஸுக்கு அந்த ஆட்டம் ஹை வோல்டேஜ் கேமாக பற்றியிருந்தது. அந்த இன்னிங்ஸிற்கு பிறகு ‘சச்சின்! சச்சின்!’ என முழங்காதவர்கள் இருக்கவே முடியாது. அப்படி ஒரு எவர்க்ரீன் இன்னிங்ஸ் அது.
அதற்கு பிறகு சச்சின் பல இன்னிங்ஸ் விளையாடி இருந்தாலும் அந்த இன்னிங்ஸ் கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சிற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக அமைந்தது.
2012-இல் தனது கடைசி ஒருநாள் இன்னிங்ஸ் வரை சச்சின் தனது ரன் வேட்டையை தொடர்ந்தார். இன்று வரை அவர் படைத்துள்ள சில சாதனைகளை எந்தவொரு வீரராலும் தகர்க்க முடியவில்லை.

