எப்பொழுதுதான் மகளிர் கிரிக்கெட் அணியை கவனிக்க போகிறோம்..!

எப்பொழுதுதான் மகளிர் கிரிக்கெட் அணியை கவனிக்க போகிறோம்..!
எப்பொழுதுதான் மகளிர் கிரிக்கெட் அணியை கவனிக்க போகிறோம்..!

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்தியாவில் விளையாட்டு துறையை பொறுத்தவரை பல்வேறு விமர்சனங்கள் எழுவதுண்டு. அதில் முக்கியமானது கிரிக்கெட்டை தவிர மற்ற போட்டிகளை கண்டு கொள்வதில்லை என்பது தான். ஆனால் இந்திய கிரிக்கெட்டிலும் ஆண்கள் அணிக்கு கொடுக்கும் முக்கியத்தும் மகளிர் அணிக்கு கொடுக்கப்படுவதில்லை என்பது மிகவும் வேதனையான விமர்சனமாக இன்றளவும் உள்ளது.

கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அசத்தலாக விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இறுதிப் போட்டி வரை சென்று ரன்னர் அப் வென்ற இந்திய அணிக்கு அப்போது பாராட்டுகள் குவிந்தது. மகளிர் அணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற பேச்சுகள் அடிபட்டது. 

ஆனால், மீண்டும் மீண்டும் மகளிர் கிரிக்கெட் அணிக்கு முக்கியத்துவம் அளிக்காத நிலையே தொடர்ந்து வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐசிசி சாம்பியன்ஷிப்-க்கான போட்டிகளில் விளையாடி வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி கிம்பெர்லி நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை சேர்த்தது. ஸ்மிரிதி மந்தனா 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல், கேப்டன் மிதாலி ராஜ் 45 ரன்கள் எடுத்தார்.  

214 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்கா அணியில், கேப்டன் நிகெர் மட்டும் நிலைத்து நின்று 101 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க,  தென்னாப்பிரிக்கா அணி 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கோஸ்வாமி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தலாக வெற்றி பெற்ற இந்தப் போட்டியை இந்தியாவில் ரசிகர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில் போட்டியானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ட்விட்டரில் ரசிகர்கள் ஒவ்வொரு பந்திற்கும் ரன்களின் நிலவரத்தை பதிவிட்டு வந்தனர். 

ஆனால், பிசிசிஐ இந்தப் போட்டியை கண்டுகொள்ளவே இல்லை. வழக்கமாக இந்திய அணி விளையாடும் போட்டிகளின் நிலவரத்தை டுவிட்டரில் பிசிசிஐ நேரலையாக பதிவிடும். ஆனால், இந்தப்போட்டி குறித்து ஒரு ட்விட் கூட பதிவிடவில்லை. இந்திய அணி வெற்றி பெற்றதை கூட பதிவிடவில்லை.

ஆண்கள், பெண்கள் இரு அணியும் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. ஆண்கள் அணி விளையாடும் போட்டி நேரடி ஒளிபரப்பு ஆகிறது. போட்டி ஆய்வு செய்யப்படுகிறது, இரு மொழிகளில் பிரிவீவ்யூ, ரிவிவ்யூ செய்யப்படுகிறது. ஆனால் மகளிர் அணி போட்டிகள் தொலைக்காட்சியில் நேரலை கூட செய்யப்படுவதில்லை. இத்தனைக்கும், உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விமர்சனங்களுக்கு பிசிசிஐ என்ன சொல்கிறது என்றால், இந்தியாவிற்கு வெளியே நடைபெறும் போட்டிகளை வெளியிடுவதில்லை என்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை என்றாலும், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ரன்களை பதிவிட்டது. மேலும் யூட்யூப் பக்கத்தில் போட்டியின் 4 நிமிட ஹைலைட் வீடியோ வெளியிட்டுள்ளது. பிசிசிஐ-யின் கேமரா போட்டியில் உள்ளது ஆனால், நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய மகளிர் அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுதான். 6 மாதங்களுகு மேல் ஆன நிலையில் வேறு போட்டிகளில் விளையாடாததால் பயிற்சி குறைபாடு இருக்கும். ஆனால், அதனையெல்லாம் சமாளித்து பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்தலாக விளையாடினர் இந்திய மகளிர். இந்திய மகளிர் அணி தனது கடமையை செவ்வனே செய்கிறது. ஆனால், பிசிசி பாராமுகமாகவே இருந்து வருகிறது என்பது ரசிகர்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு மட்டுமல்ல வருத்தமும் கூட.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com