விஜய் பக்கம் தாவும் இரண்டு அதிமுக அமைச்சர்கள்?: ஒரு ஸ்கூப் நியூஸ்

விஜய் பக்கம் தாவும் இரண்டு அதிமுக அமைச்சர்கள்?: ஒரு ஸ்கூப் நியூஸ்

விஜய் பக்கம் தாவும் இரண்டு அதிமுக அமைச்சர்கள்?: ஒரு ஸ்கூப் நியூஸ்
Published on

அதிமுக அமைச்சர்கள் இருவர் நடிகர் விஜய் பக்கம் தாவ இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகர்கள் எல்லாம் தனிக்கட்சி ஆரம்பிக்கும் காலம் இந்தக் காலம். கமல் கட்சி ஆரம்பித்துவிட்டார். ரஜினி தன் கட்சிக்கு இன்னும் நல்ல நாள் தேடிக்கொண்டிருக்கிறார். அடுத்து அந்த வரிசையில் விஷால் களம் இறங்க இருக்கிறார். மேலும் சில நடிகர்கள் தேர்தல் நேரத்தில் ‘விலை’ பேசப்படலாம். ஆனால் இவர்களுக்கு முன்பு களத்தில் இறங்க இருந்தவர் விஜய். அவரது அரசியல் பிரவேசத்திற்காக அவரது அப்பா பல வேலைகளை செய்தார். மாவட்டம் தோறும் அதற்காக கள வேலைகளில்கூட இறங்கினார். அரசியல் மூவ் எல்லாம் ஸ்மூத்தாக போனது. விஜய்யும் அமைதியாக அதனை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார். அவர் உள்ளத்திலும் அரசியல் ஆசை ஆட்டிப்படைத்து கொண்டிருந்தது. 

கடந்த முறை திமுக ஆட்சியின் போது சினிமா துறை அதிகமாக ஒரு குடும்பத்தினரால் கைப்பற்றபட்டுவிட்டது எனக் கூறி, அதனை எதிர்த்து பலர் வெளிப்படையாக பேசினர். இதற்கு தீர்வுக் காணவேண்டும் என கருத்து தெரிவித்தனர். சினிமாவின் வியாபாரம் சார்ந்த பிரச்னைகூட அன்றைய ஆளும் கட்சியான திமுக மீது குற்றம் சுமத்தப்பட்டது. தியேட்டர்கள் பிரச்னை கூட ஏற்படுவதாகவும், ஒருவரே தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு ஆதிக்கம் செலுத்துவதாகவும் பேசப்பட்டது.

இவ்வளவு ஏன் விஜய்யை மிரட்டி கால்ஷீட் வாங்கியதாககூட கூறப்பட்டது. அதன் பின்பு செல்வாக்கு மிக்க ஒருவர் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதையெல்லாம் திமுகவை சார்ந்தவர்கள் வெளிப்படையாக மறுக்கவில்லை என்றாலும் மறைமுகமாக சினிமா விழா மேடைகளில் பேசினர். இந்த மோதல்களுக்கு மத்தியில்தான் விஜய் தரப்பு அதிமுக அணி பக்கம் தாவ ஆரம்பித்தது. அதற்காக விஜய்யின் அப்பா சந்திரசேகர் வெளிப்படையாக கருத்துக் கூறினார். அதிமுக வெற்றிக்காக விஜய் மன்றங்களை வேலை செய்ய வைத்தார் அவர்.

ஆனால் வெற்றிப்பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மொத்த விவகாரமும் தலைக்குப்புற மாறியது. அதிமுகவுக்கும் விஜய் தரப்புக்கும் மறைமுக யுத்தம் தொடங்கியது. அதற்கு காரணம், போயஸ் கார்டன் பகுதியில் ‘எங்க அப்பா’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதுதான் என பலர் எழுதினர். அந்த போஸ்டர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் படத்துடன் ஒட்டப்பட்டது என்பது கவனத்திற்குரியது. போஸ்டர் போயஸ் கார்டன் காது பக்கம் போக களத்தில் இறங்கினார் ஜெயலலிதா. மறைமுகமாக விஜய் படங்கள் மீது பிரச்னைகள் உருவாக்கப்பட்டன. அதன் பிறகு விஜய் படங்கள் என்றால் வெளி வருவதில் சிக்கல் இருந்து வந்தது. 

வந்தோமா? நடித்தோமா? காசு சம்பாதித்தோமா என இருந்த விஜய்யை சுற்றி அரசியல் காய்கள் நகர்த்தப்பட்டன. அவர் பகடையாக உருட்டப்பட்டார். அதன் பின் தலைவலிக்கு மேல் தலைவலியை சந்தித்த விஜய் அவரது அப்பாவை அழைத்து கொஞ்சம் அமைதிக்காக்க சொன்னார். அதன் பின் துடுக்காக கருத்து சொல்லிக் கொண்டிருந்த சந்திர சேகர் அமைதியானார். விஜய் முழுவதுமாக அப்பா கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறினார். தனிக்குடித்தனம் போகும் அளவுக்கு அவர் தைரியமான முடிவை எடுத்தார்.

இந்நிலையில்தான், இப்போது விஜய் மன்றங்கள் மீண்டும் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளன. மறுபடியும் உள்ளே புகுந்திருக்கிறார் சந்திரசேகர். மாவட்டம் தோறும் விஜய் ரசிகர் மன்றங்கள் அரசியல் களம் காண ஆயத்தமாகி வருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் நேரடியாக திமுகவை ஆதிரிக்கும் முடிவை விஜய்யால் எடுக்க முடியவில்லை. ஆகவே தனி ஆவர்த்தனம் செய்ய அவர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. உண்மையைச் சொல்லப்போனால் கமல், ரஜினியை விட விஜய்க்கு தமிழக முழுக்க அதிக செல்வாக்கு இருக்கிறது. அது விஜய்க்கும் நன்றாகவே தெரியும். 

இந்தப் பின்னணியில் அதிமுக அணியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் விஜய் பக்கம் தாவ தெடங்கி இருக்கிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாமக்கலில் நடந்த விஜய் ரசிகர் மன்ற விழாவில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணியும், சரோஜாவும் கலந்து கொண்டுள்ளனர். வெறுமனே கலந்து கொள்ளவில்லை. அதிமுக அமைச்சர் தங்கமணி “வரும் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களியுங்கள்” என பகிரங்கமாக பேசியிருக்கிறார். பொதுக்கூட்டம் போல நடைப்பெற்ற இந்த விழாவில் அதிமுக அமைச்சர்கள் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? விஜய்க்கும் அதிமுகவிற்கும் என்ன சம்பந்தம்? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில் அமைச்சர்களின் பேச்சு வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடங்கங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. ஜெயலலிதா உயிரோடு உள்ள வரை அதிமுக அமைச்சர்கள் யாரும் விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பில் நடைபெற்ற எந்தக் கூட்டத்திலும் கலந்து கொண்டதில்லை. அப்படி இருக்கும் போது ஏன் இந்தத் திடீர் முடிவு? என பலர் மண்டைக்காய்ந்து விடைத்தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாக்காரர்கள் இருவர், அதாவது ரஜினி,கமல் அரசியல் களத்தில் இருக்கும் போது அதிமுக ஒருவேளை வேறு நடிகர்களின் துணை இருந்தால் நல்லது என நினைக்கிறார்களா? என யோசிக்க தோன்றுகிறது. இப்போதைக்கு ஒன்று மட்டும் உறுதி தமிழ்நாட்டில் நடக்க உள்ள சட்டசபைத்தேர்தலில் போது அரசியல் மாற்றம் அல்ல; அதிமுகவிலும் அநேக மாற்றங்கள் நடக்கலாம் என்பது மட்டும் உறுதி. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com