நீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்

நீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்
நீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியும், உச்ச நீதிமன்றத்தின் கிளை அமர்வுகளை அமைக்கக் கோரியும் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் கொண்டுவந்துள்ளார். இதுகுறித்து சற்றே விரிவாக பார்ப்போம்.

தனிநபர் மசோதா என்பது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இருக்கக்கூடிய மிக முக்கியமான அதிகாரங்களில் ஒன்றாகும். இதன்மூலமாக நாட்டின் எந்த ஒரு பிரச்னை குறித்தும் புதிய சட்டத்தையோ அல்லது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான மசோதாக்களை தாக்கல் செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வில்சன் மிக முக்கியமான இரண்டு தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.

முதலாவதாக நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு, அதில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும் எனக் கூறி தனி நபர் மசோதாவை அவர் கொண்டுவந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், மருத்துவப் படிப்பு முடிந்து அதற்குப் பிறகு நாடு முழுவதும் பொதுவாக வைக்கப்படும் Exit exams என்று சொல்லப்படும் முடிவுத் தேர்வுகளில் இருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஷரத்தையும் அவர் இணைத்துள்ளார்.

'நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கான விலக்கை எப்பாடுபட்டாவது கொண்டு வந்து விடுவோம்' என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. பிரதமருக்கு கடிதம் எழுதுவது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வரக்கூடிய சூழலில், அதற்கான ஒரு முயற்சியாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் இந்த தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு கேட்காமல் மற்ற மாநிலங்களும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் பட்சத்தில், அதனைப் பெறும் வகையில் இந்த தனிநபர் மசோதாவை அவர் கொண்டு வந்திருக்கிறார்.

இரண்டாவது தனிநபர் மசோதா, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடர்ந்து நீண்ட நாட்களாக வைக்கக்கூடிய கோரிக்கையான உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை உருவாக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை வரையறுக்கும் சட்ட விதிகளில் திருத்தங்களைக் கொண்டு வந்து, தென்னிந்தியாவில் சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமர்வை அமைக்க வேண்டும் என அவர் தனிநபர் மசோதாவில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லியிலேயே மற்றொரு கிளை என மொத்தம் 4 உச்ச நீதிமன்ற கிளைகளை உருவாக்க அவர் தனிநபர் மசோதாவில் கேட்டுக்கொண்டுள்ளார். இதில் தற்பொழுது செயல்பட்டுவரும் உச்ச நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு வெறும் அரசியல் சாசன சார்ந்த வழக்குகளை மட்டும் விசாரிக்கும் வகையிலும், மற்ற அமர்வுகளில் அந்தந்த மாநிலம் அதன் எல்லைக்குட்பட்ட மாநிலங்களின் பிரச்னைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் வகையிலும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என அவர் ஷரத்துக்களை அமைத்துள்ளார்.

ஏற்கெனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநதிமன்ற நீதிபதிகள், 'இதை செய்ய வேண்டியது நாடாளுமன்றத்தின் வேலை' எனக் கூறி இருந்தார்கள். தற்பொழுது நீதிபதிகளின் வார்த்தைகளுக்கு ஏற்ப மாநிலங்களவையில் தனிநபர் மசோதா மூலம் அதனை வில்சன் வலியுறுத்தியிருக்கிறார்.

எனவே, இந்த இரண்டு தனிநபர் மசோதாக்கள் நிறைவேறும் பட்சத்தில், தமிழ்நாடின் மிக முக்கியமான இரண்டு கோரிக்கைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு கோரிக்கைகளும் நாட்டின் பல மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தக் கூடியது என்பதால், இந்த தனி நபர் மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெறும்போது பெரிய அளவிலான ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த தனிநபர் மசோதாக்கள் நிறைவேறும் பட்சத்தில், தனிநபர் மசோதா மூலம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு தனிநபர் மசோதாவை நிறைவேற்றியவர் என்ற பெருமையை கொண்டுள்ள திமுகவின் திருச்சி சிவாவின் பட்டியலில் வில்சனும் இடம்பெறுவார்.

இந்த தனிநபர் மசோதாக்கள சட்டமாக மாறுமா என்பது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்களின் கையில்தான் உள்ளது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com