"இங்க ஒரு தலை மட்டும் கரை ஒதுங்கிஇருக்கு சார்"-1952 முதல் இன்றளவும் பேசப்படும் ஆளவந்தார் கொலைவழக்கு
ஆளவந்தார் கொலை வழக்கு
1950ல் சென்னையை மெட்ராஸ் என்று தான் அழைப்பார்கள்.
சரியாக 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி..
கண்ணன் செட்டி என்பவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு மனுவுடன் வருகிறார்.
“சார். எனது பெயர் கண்ணன். நான் ஜெம் அண்ட் கோ உரிமையாளர். நான் என் கடையின் ஒரு பகுதியை ஆளவந்தார் என்பவருக்கு வாடகைக்கு விட்டு இருந்தேன். அவரை இரண்டு நாட்களாக காணவில்லை....” என்று புகார் கொடுக்க வந்திருந்தார். மிஸ்ஸிங் கேஸ் தானே... பார்த்துக்கொள்ளலாம் என்று போலீசாரும் அவர் தந்த மனுவை வாங்கி வைத்துக்கொண்டார்கள்.
மறுநாள் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் கிளம்பிய போட்மெயில் எனும் விரைவு ரயில் மானாமதுரையை கடக்கையில் பயணிகளின் இருக்கைக்கு கீழே இருந்த ஒரு இரும்பு டிரங் பெட்டியில் தலையில்லாத ஓர் ஆணின் உடல் கிடைத்ததாக மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தகவல் வர... போலீஸார் அலார்ட் ஆனார்கள். மேலிடத்திலிருந்து அழுத்தம் வர போலிசார் சமீபத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் சேகரிப்பில் இறங்கினர். அதில் ஆளவந்தார் பற்றிய புகாரை கையிலெடுத்த போலீசார் காணாமல் போன ஆளவந்தார் பற்றிய தகவலை சேகரிக்க ஆரம்பித்தனர்.
முதலில் அவரின் மனைவியை விசாரிக்க ஆரம்பித்தனர். அவர் சொன்ன தகவலிலிருந்து ஆளவந்தாருக்கு வயது 42 எனவும், அவர் ராணுவத்திலிருந்து பதவி ஓய்வு பெற்று, மெட்ராஸ் சைனா பஜாரில் சொந்தமாக பேனா கடை வைத்திருந்ததாகவும், கூடவே பிளாஸ்டிக் பொருட்கள் புடவை வியாபாரம் செய்து வந்ததும் தெரிந்தது.
போலிசார், ஆளவந்தார் நண்பர்கள் வாடிக்கையாளர்கள் என்று பலபேரிடமும் தகவல் சேகரித்ததில் ஆளவந்தானின் நடத்தையின் மேல் சிலர் அவதூறு கூறினர். “அவன் சரியான பொம்பள பொறுக்கி ... ஒரு பொண்னையும் விட மாட்டான். அவன் புடவகடை வச்சதே பொண்ணுங்க கூட பழக தான்” என்று பல பேர் அவரைப்பற்றி எதிர்மறையாகக் கூறவும், ஆளவந்தாருடன் பழகிய நண்பர்கள், பெண்களின் லிஸ்டை சேகரிக்கத் தொடங்கியது போலீஸ்.
இதன் நடுவில் ரயில் பெட்டியில் இருக்கும் ஆணின் உடல் 40 வயது இருக்கலாம் என்று தகவல் வர... போலீசார், ஆளவந்தார் மனைவியை அடையாளம் காட்ட மானாமதுரை கூட்டிச் சென்றனர்.
தலையில்லாத உடலை பார்த்ததும் அவர் மனைவி இது தன் கணவனின் உடல் தான் என்று கூறவும், “தலை இல்லாமல் உடலை மட்டும் வைத்துக்கொண்டு குற்றவாளியை பிடிக்க முடியாது.” என்று கூறிய போலீசார்.... அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் சமயம் அவருக்கு மெட்ராஸிலிருந்து ஒரு போன் கால் வருகிறது.
“இன்ஸ்பெக்டரா... சார் நான் மெட்ராஸ் ஸ்டேஷனிலிருந்து பேசறேன். இங்க பீச் ஸ்டேஷன்ல ஒரு தலை மட்டும் கரை ஒதுங்கி இருக்கு சார்ர்.....” என்று மறுமுனையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் பதட்டமாக பேசவும், விசாரணை செய்து வந்த போலீசார் அந்த உடலுடன் மெட்ராஸ் சென்றனர். உடலையும் தலையும் பொருத்திய போலீசாருக்கு இறந்தது ஆளவந்தார் தான் என்று தெரிய வந்தது. உடனே வழக்கானது சூடுபிடிக்க ஆரம்பித்தது.
ஆளவந்தார் யார் யாருடன் தொடர்பில் இருந்தார், நட்பில் இருந்தார், காதலில் இருந்தார், என்று ஒரு பெரிய லிஸ்ட் ஒன்றை தயார் செய்தனர். அதைக்கொண்டு விசாரித்து வந்ததில் கடைசியாக தேவகி என்ற பெண்ணுடன் நட்பில் இருந்ததாகவும் அவளை சந்திக்க சென்றிருக்கலாம் தகவல் கிடைக்கவும் , சந்தேகத்தின் பெயரில் தேவகியின் இருப்பிடத்தைத் தெரிந்துக்கொண்ட போலிசார் அவள் வீட்டிற்குச் சென்றனர்.
மாறாக அவர் தனது கணவர் பிரபாகர் மேனனுடன் வீட்டை விட்டு காலி செய்து சென்றதாக போலிசாருக்கு தகவல் கிடைத்ததும், குற்றவாளி அவர்தான் என்று போலிசார் தேட ஆரம்பித்தனர். தேவகியும் அவரது கணவர் பிரபாகரும் மும்பையில் பதுங்கி இருப்பது தெரியவந்ததும் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைக்காக மெட்ராஸ் அழைத்து வரப்பட்டனர்.
போலிசாரின் பலமான விசாரிப்புகளிடையே இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தனர்.
“சார்... நான் தேவகி மேனன். இது என் கணவர் பிரபாகர். நாங்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். எனது கணவர் சிறிது காலம் வெளியூரில் வேலை பார்த்து வந்தார். நான் மெட்ராஸில் தங்கி இருந்தேன். ஒருமுறை எழுதுவதற்கு ஒரு பேனா வாங்குவதற்காக ஆளவந்தார் கடைக்கு வந்தேன். அப்பொழுது தான் அவர் எனக்கு அறிமுகம். அன்றிலிருந்து எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் நான் செய்வது தவறு என்று புரிந்துக்கொண்டு ஒதுங்க ஆரம்பித்தேன். ஆனால் ஆளவந்தார் என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை. எனக்கு என்ன செய்வது என்று புரியாததால் என் கணவரிடம் நடந்ததனைத்தையும் கூறி மன்னிப்புக் கேட்டேன். அவர் மிகவும் நல்லவர். என்னை மன்னித்ததுடன் இனி ஆளவந்தார் உன்னிடம் தவறாக நடக்காமல் இருக்க நாம் அவனை கொலை செய்து விடலாம் என்றார். அவர் கூறியது சரி என்று படவே... ஆளவந்தாரை தீர்த்துக்கட்ட ஒரு திட்டம் தீட்டினோம். அதன்படி ஆளவந்தாரிடன் நான் தனியாக இருப்பதாகவும் இன்றிரவு நீங்கள் என்னுடன் இருக்கவேண்டும் எனவும் கூறி தகவல் அனுப்பினேன். நான் எதிர் பார்த்தபடி அன்றிரவு ஆளவந்தான் என் வீட்டிற்கு வந்தான். அச்சமயம்.... அச் சமயம், நானும் என் கணவரும் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தோம். தலை இருந்தால் நாங்கள் மாட்டிக்கொள்வோம் என்பதால் தலையை மட்டும் தனியாக வெட்டி ஒரு துணியில் சுற்றி கடலில் மீனுக்கு உணவாக வீசிவிட்டு உடலை ஒரு டிரங் பெட்டியில் போட்டு அன்றிரவு ராமேஸ்வரம் செல்லும் போட் மெயிலில் வைத்துவிட்டு அங்கிருந்து மும்பை செல்லும் டிரைனில் நாங்கள் சென்று விட்டோம். ஆனால் இப்படி மாட்டிக்கொள்வோம் என்று எதிர்பார்க்கவில்லை..” என்று தேவகி தன் தவறை ஒத்துக்கொண்டு கண்ணீர் சிந்தினாள். மறுநாள் பத்திரிக்கைகளில் ஆளவந்தார் கொலை பற்றிய செய்தி தலைப்பு செய்தியாக வரவும். மக்களிடையே தேவகி அனுதாபம் கொண்டவளாகவும், தவறியவளாகவும் மாறியிருந்தாள். இவ்வழக்கின் தீர்ப்பை தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருந்தது.
நிறைவாக, இந்த வழக்கானது நீதிபதி ஏ.எஸ்.பஞ்சபகேச ஐயர் என்பவரின் தீர்ப்புக்கு சென்றது.
இந்த வழக்கின் கொலை குற்றவாளியான தேவகியும் அவளின் கணவன் பிரபாகர மேனனும், ஆளவந்தாரால் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர். தவிரவும் இது தன்னை பாதுகாத்துக்கொள்ள அரங்கேற்றப்பட்ட ஒரு கொலை தான் தவிர திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலை அல்ல... அவரின் மேல் உள்ள ஆத்திரத்தால் செய்த கொலை. இறந்தவன் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளி தான். ஆனால் சட்டம் அவரை தண்டித்திருக்கவேண்டும் மாறாக நீங்கள் அவருக்கு தண்டனை அளித்திருக்க கூடாது. ஆகவே பிரபாகருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் தேவகி பாதிக்கப்பட்ட பெண் என்பதால் அவளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் கூறி தீர்பளிக்கின்றேன்” என்று கூறி அவர்களுக்கு குறைந்த பட்ச தீர்ப்பை வழங்கினார்.
இத்தீர்ப்பானது மக்களால் பாராட்டப்பட்டதுடன் இன்றளவும் இக்கொலையை பற்றி மக்கள் பேசி வருவதுடன் இது படம் வெளிவந்துள்ளது குறிப்பிடதக்கது.